கி.பி. 3-7 நூற்றாண்டுகளில் களப்பிரரால் ஆதரிக்கப்பட்ட சமண சமயம்,
இருப்பினும், முற்றிலும் அழிந்துவிடாமல், சமணத்தின் திகம்பரப் பிரிவைச் சேர்ந்த தமிழ்ச் சமணர்கள், தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், குறிப்பாக வட தமிழகத்தின் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர் மாவட்டங்களில் பெருவாரியாக வாழ்கின்றனர். தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகையில், தமிழ்ச் சமணர்களின் எண்ணிக்கை 85,000 (0.13%) ஆகவுள்ளது.
அகிம்சை, வாய்மை, கள்ளாமை, துறவு, அவாவறுத்தல் போன்ற உயரிய கொள்கைகளுடன் வாழும் இவர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். எனினும், ஆன்மாவை நம்புவதோடு மறுபிறப்பிலும், வீடுபேறு[சொர்க்கம், மோட்சம்] எய்துவதிலும் நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர்.
மோட்சத்தின் மீது இன்றைய சமணர்களுக்கு நம்பிக்கை உண்டு என்பதை மெய்ப்பிக்கும் வகையிலான ஒரு நிகழ்வு அண்மையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்சித்தாமூரில் இடம்பெற்றுள்ளது. அது குறித்த செய்தி.....
#விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்சித்தாமூரில், 1,200 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீ 1008 பார்சுவநாதர் ஜெயின் கோயில் (ஜினலாயம்) மற்றும் தமிழக ஜைனர்களின் தலைமைப் பீடமான ஜினகஞ்சி சமண மடமும் உள்ளன. தமிழகத்திற்கு யாத்திரை வரும் ஜெயின் துறவிகள், இங்கு வந்து செல்வது வழக்கம். இரண்டு மாதங்களுக்கு முன், கர்நாடகாவிலிருந்து இரண்டு திகம்பர ஜெயின் துறவிகள் தலைமையில், பெண் துறவிகள் (ஆயிர்கை / ஆர்யாகன்னிகள்) மேல்சித்தாமூர் ஜினகஞ்சி மடத்திற்கு வந்தனர். இவர்களுடன், 65 வயதாகும் பிரபாவதி மாதாஜி என்ற பெண் துறவியும் வந்திருந்தார். பிரபாவதி மாதாஜி, ஜெயின் மதக் கோட்பாட்டின்படி மேல்சித்தாமூரிலேயே, உண்ணாநோன்பிருந்து (சல்லேகனை மேற்கொள்ளுதல் / வடக்கிருத்தல்), சமாதி நிலையை அடைய முடிவெடுத்து, 2 நாட்கள் உண்ணா நோன்பு மேற்கொண்டார். அவர், நேற்று இரவு (3.5.19) சமாதி நிலையை அடைந்தார்.
இதுகுறித்து, அங்குள்ள ஸ்வஸ்தி ஸ்ரீ லக்ஷ்மிஷேன பட்டாரக பட்டாச்சார்ய வர்ய மாக இளைய சுவாமி கூறியது:
"ஸ்ரீ பிரபாவதி மாதாஜி அவர்கள், கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் நீர் குடிப்பதை நிறுத்திவிட்டு, தொடர் தியானத்திலிருந்தார். அவரது ஆத்மா நேற்று இரவு பிரிந்தது. சல்லேகனை விரதம் இருந்து சமாதி ஆனதால், அவரது உடலைக் கொப்பரைத் தேங்காய், சந்தனக் கட்டை, நெய் ஆகியவை கொண்டு சிதை மூட்டி எரிக்கப்பட்டது. இதன்மூலம், அவர் மோட்சம் அடைவார்” என்று தெரிவித்தார்.
இவ்வாறு மரணம் அடைந்தவர்கள் நேரடியாகவே மோட்சம் செல்வதால், யாரும் அவர் மரணத்தை முன்னிட்டு அழமாட்டார்கள். அதனால், உண்ணாநிலை மரணத்தை, ‘மரண உற்சவம்’ என்றே அவர்கள் அழைக்கிறார்கள்.# https://www.vikatan.com/spiritual/news/156685-jain-saint-attains-samadhi-by-fasting [May 2019]
மதங்கள் பலவும் சொர்க்கம் உண்டு என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளன. ஆனால், அது குறித்த தெளிவானதொரு கருத்தைச் சமணர் உட்பட எவரும் முன்வைத்ததில்லை['மண்ணுலகிலேயே அனைத்தையும் துறந்துவிட்டவர்களுக்கு மோட்சம் எதற்கு?' என்று உள்மனம் எழுப்பும் கேள்வியைத் தவிர்க்க இயலவில்லை].
#சொர்க்க லோகம் என்பது இந்திரனால் ஆட்சி செய்யப்படும் தேவ உலகம் . பூமியில் மனிதர்கள் வாழும் போது செய்த புண்ணியத்தால், இறந்த பின் அடையப்படும் இடம். முடிவற்ற இன்பம், சுதந்திரம்... அதுவே சொர்க்கம். கன்னிப் பெண்கள், தேவதைகள், தேவர்கள், சுவைமிகு உணவு, தொடர் களிப்பூட்டல் இருக்கும் இடமாக சொர்க்கம் பல இடங்களில் வருணிக்கப்படுகிறது. இது நல்ல வழிகளில் சென்றவர்களுக்கு இறைவனால் வழங்கப்படும் தீர்ப்பு என்று நம்பப்படுகிறது[விக்கிப்பீடியா]# இது, இந்துமதம் காட்சிப்படுத்தும் சொர்க்கம்.
நம் சத்குரு ஜக்கி வாசுதேவ் சொல்கிறார்:
"மோட்சம் என்றால் விடுதலை, அனைத்திலிருந்தும் விடுதலை, பிறப்பு-இறப்பில் இருந்தே விடுதலை. இதுதான் எல்லா மதங்களின் குறிக்கோளும் கூட."
விடுதலை ஆன பிறகு ஆன்மாவின்[இருந்தால்] நிலை என்ன? அதாவது, அதன் செயல்பாடு என்ன?
வெறுமையில் செயலற்று உழன்றுகொண்டிருப்பதா?
முற்றுப்பெறாத ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கிக் கிடப்பதா?
உங்களுக்குச் சத்குருவைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால் இக்கேள்விகளுக்கு விளக்கம் கேட்கலாம்.
"எப்பொழுது 'நான்' என்பது இல்லாமல் போகிறதோ, அங்கு மோட்சம் இருக்கிறது" என்றும் சொல்கிறார் அவர்.
செத்துத் தொலைத்தால் உடம்பென்ன, 'நான்' என்ன எல்லாமே இல்லாமல் போகிறது. அப்புறம் என்ன 'மோட்சம்' வேண்டியிருக்கு?
"மோக்ஷம் என்பது இப்படியா? அல்லது அப்படியா? என்றால், மோட்சம் இது மாதிரியும் அல்ல, அது மாதிரியும் அல்ல. இதுவும், அதுவும், எதுவும் இல்லையென்றால் அதுதான் மோட்சம்" என்று இப்படியும் நம்மைக் குழப்புகிறார் வாசுதேவ்.
ஆக, கடவுளை நம்புகிற அல்லது, நம்பாத எல்லாச் சமயத்தவருக்கும் செத்த பிறகு 'சொர்க்கம் அல்லது மோட்சம் புக வேண்டும் என்ற பேராசை இருந்திருக்கிறது/ இருக்கிறது.
இந்தப் பேராசை நமக்கு வேண்டாம். இந்த உலகத்தில் இருக்கும்வரை குறைவான துன்பங்களுடன் நிறைவான இன்பங்களைப் பெற்று வாழ்ந்து முடிக்க ஆசைப்படுவோம். இது போதும்.
போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து!
=============================================================================