வயது ஆக ஆக, ஆசைகளின் எண்ணிக்கை குறையலாமே தவிர அதிகரிக்கக் கூடாது.
'குடு குடு' கிழவன் என்று சொல்லும் அளவுக்கு இல்லை என்றாலும், வாலிபப் பருவத்துச் சுகபோக அனுபவங்களை வெறுமனே அசைபோடும் அளவுக்கு வயதாகிவிட்டது என்பது உண்மைதான்; ஆசைப்படுவதும் குறைவுதான். என்றாலும், எது எதற்கெல்லாமோ ஆசைப்படுகிறேன்.
அந்த 'எது எதற்கெல்லாமோ'வுக்கு ஒரு சிறு பட்டியல்:
*116 அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகள்[வயது] உயிர் வாழ்பவர்கள் 2,000,000,000 மக்களில் ஒருவர் மட்டுமே என்கிறது ஒரு புள்ளிவிவரம்[ஆதாரம் சேமிக்கப்படவில்லை]. அந்தப் பட்டியலில் நானும் இடம்பெறல் வேண்டும் என்பது என் ஆசை. என் அந்திமக்கால ஆசைகளில் இதுவே முதலிடம் பெற்றுள்ளது.
*ஐன்ஸ்டீன் இறந்த பிறகு அவருடைய மூளையை எடுத்து ஆய்வுக்காகப் பத்திரப்படுத்திப் பாதுகாக்கிறார்கள் என்பது யாவரும் அறிந்ததே. என் மூளையும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுதல் வேண்டும் என்பது என் இலையுதிர் பருவத்து ஆசை!
ஐன்ஸ்டீன் உலகறிந்த அறிவியல் அறிஞர். அறிவியல் தெரியாது என்றாலும் உலகோரால் அறியப்படாத வாழ்வியல் அறிஞன்[ஹி... ஹி... ஹி!!!] நான் என்பது பதிவருலகம் அறிந்ததே.
*எக்காலத்தும் கெட்டுப்போகாத உணவு என்றால் அது தேன் மட்டுமே. என் இறுதி மூச்சுவரை இருதயம் செயலிழப்பதைத்[சாகும் தருணத்தில்] தவிர என் உடம்பின் எந்தவொரு உறுப்பும் கெட்டுச் சீரழியாமல் இருத்தல் வேண்டும் என்பதும் என் அந்திமக்கால ஆசைகளில் ஒன்று.
*சுறாமீனை எந்தவொரு நோயும் அது சாகும்வரை தாக்க முடியாதாம்[இணையத்தில் வாசித்தது]. அந்த அளவுக்கு அதன் உடம்பில் எதிர்ப்புச் சக்தி அதிகம். தினசரி மூச்சுப் பயிற்சியும் வயதுக்கேற்ற உடற்பயிற்சியும் செய்வதன் மூலம் எதிர்ப்புச் சக்தியை வளர்த்துக்கொண்டிருப்பவன் நான்.
அதிகாலையில் கண் விழிப்பதிலிருந்து உறங்கத் தொடங்கும்வரை உண்ணும்போதாகட்டும், வாசிப்பின்போதாகட்டும், மாலை நேர நடைப் பயிற்சியின் போதாகட்டும், இடையிடையே "நான் ஒரு சுறாமீன்... சுறாமீன்... சுறாமீன்" என்று மனதுக்குள் முழக்கமிடத் தவறுவதே இல்லை.
இப்போதும் சொல்கிறேன்: "நான் ஒரு சுறாமீன்... சுறாமீன்... சுறாமீன்..."
*சரியாகக் காது கேளாதவர்களுக்கு என்று ஒரு கண்ணாடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம். அதன் வலப்பக்கக் கண்ணாடியில் ஒரு சிறு திரை இருக்குமாம். எதிரே பேசுவோரின் வார்த்தைகள் அதில் வரிவடிவத்தில் தோன்றுமாம். அதை வாசித்து எதிரில் உள்ளவரின் பேச்சைப் புரிந்துகொள்ள முடியும் என்பதாக ஏதோவொரு நாளிதழில் செய்தி வாசித்தேன்.
என் ஆயுள் முடிவதற்குள் இது பயன்பாட்டுக்கு வந்துவிட வேண்டும் என்பதும் என் முதிர்பருவ ஆசை.
இப்படி ஆசைப்படக் காரணம், எனக்குக் காது கொஞ்சம் மந்தம். கொஞ்சம்னா?
70%! ஹி...ஹி...ஹி!!!
*பெண்களின் பாதுகாப்புக்கென்று நவீனத் தொழில்நுட்பத்தில் ஆடையொன்றை வடிவமைத்திருக்கிறார்களாம். அதில் மின்சாரம் சேமிப்பப்பட்டிருக்குமாம். கெட்ட எண்ணத்தோடு ஆடவர்கள் அவர்களைத் தொட்டால், தொடும்போது அதிலுள்ள ஒரு விசையை[பட்டன்] தட்டினால் போதும், எதிராளி தூக்கி வீசப்படுவான்.
இப்படியானதொரு ஆடை விற்பனைக்கு வந்து, வயசுப் பெண்கள்[கிழவிகளை யார் சீந்துகிறார்கள்!] அதை அணிந்து பாதுகாப்பாக நடமாடுவதைப் பார்த்துப் பார்த்துப் பார்த்து மகிழ வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை. அது இப்போது என் அந்திமக்கால ஆசையாகவும் உள்ளது.
மேற்கண்ட என் ஆசைகள் எல்லாமே நிறைவேறுதற்கு உங்களின் மானசீகமான ஆசி தேவை.
வாழ்த்துங்களேன்.
நன்றி!
==========================================================================