ஐ.நா.சபையிடம், இந்தி மொழிப் பயன்பாட்டை ஊக்குவிக்க 'இந்தி'ய அரசு ரூ6.16 கோடியை வாரி வழங்கியிருக்கிறது[இது அவ்வப்போது நடைபெறும் நிகழ்வு]. உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கானோரிடம் இந்தியைக் கொண்டுசெல்லும் நடவடிக்கையாம் இது. இது நேற்றைய[12.05.2022] செய்தி.
உலகெங்கிலும் தமிழ் பேசுவோர் தொகையும் இலட்சக்கணக்கில்தான்[கோடிக்கணக்கில்!] இது 'இந்தி'ய அரசுக்குத் தெரியாதா?
தமிழ் மொழிப் பயன்பாட்டை ஊக்குவிக்க, எத்தனை முறை எத்தனைக் கோடி ரூபாய்களை எங்கெல்லாம் இந்த 'இந்தி'ய அரசு கொடுத்திருக்கிறது.
இந்தி, பெரும்பான்மையோரால் பேசப்படுகிற மொழி[உண்மையில் 35%தான்] 44% என்று வைத்துக்கொண்டாலும்[https://timesofindia.indiatimes.com/india/hindi-mother-tongue-of-44-in-india-bangla-second-most-spoken/articleshow/64755458.cms], அது மட்டுமே வளர்ந்திட வேண்டும்; ஏனையோரால்[56%] பேசப்படும் மொழிகள் சீந்துவாரற்றுச் சிதைந்து அழிய வேண்டும் என்று ஒன்றிய அரசை நிர்வகிப்போர் ஆசைப்படுவது எந்த வகையில் நியாயம்?
ஏன் இந்த ஓரவஞ்சனை?
இந்தியின் வளர்ச்சியில் மட்டுமே கருத்துச் செலுத்தினால், மற்ற மாநில மொழிகள் தாமாக அழிந்துவிடும். மொழி அழிந்தால், அம் மொழி பேசுவோரின் இன உணர்வும் காலப்போக்கில் அழிந்தொழிவதைத் தவிர வேறு வழியில்லை. இந்தி மட்டுமே இந்தியாவை ஆளும். இந்தியத் தாய்மொழியாகக் கொண்டவர்களோ, அதி தீவிரமாய் அதை ஆதரிப்போரோ நிரந்தரமாய் ஆதிக்கம் செலுத்தலாம் என்பதை ஒன்றிய அரசின் அதிகார வர்க்கம் மிக நன்றாகப் புரிதுகொண்டிருக்கிறது[ரஷிய மொழி ஆதிக்கத்தால் உடைந்து சிதறிய சோவியத் யூனியனை அடியோடு மறந்துவிடுகிறார்கள்].
இந்தியை மட்டுமே பேணி வளர்க்கும் இவர்களின் தொடர் முயற்சியைக் கண்டித்துத் தமிழர்கள் மட்டுமே குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
கன்னடர்களும், கடவுள் தேசத்து மலையாளிகளும், சுந்தரத் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட தெலுங்கர்களும் தொடர்ந்து மௌனம் காப்பது ஏன்?
விழித்தெழுந்து மிகு துடிப்புடன் இவர்கள் குரலெழுப்பிப் போராடும் நாளும் வருமா?
ஆதங்கத்துடனும் ஆர்வத்துடனும் காத்திருப்போம்!
==========================================================================