பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 18 ஜூலை, 2022

திருட்டுச் சுகம்!!!


திர்த்த வீட்டுக்காரன் கிளம்பிப் போவதைப் பார்த்ததும் 'பேசி'யை எடுத்துக் கனகாவின் ஃபோன் எண்ணைப் பதிவுசெய்து காத்திருந்தான் பன்னீர்.

"அலோ....." -கனகா.

"நான் பன்னீர்.....'

கதவைத் திறந்துகொண்டு வெளிப்பட்ட கனகா, இடது காதில் போனை வைத்துக்கொண்டே வலது கையால் "என்ன?" என்பது போல், சைகை செய்தாள்.

"வரட்டுமா?" என்பதாக, நெஞ்சைத் தொட்டுச் சைகையாலேயே கேட்டான் பன்னீர்.

சில நிமிடங்கள் தாமதமாக,  "வேண்டாம்" என்று உறுதிபடச் சொன்னாள் கனகா.

"உன் வீட்டுக்கார் கடைக்குப் போனதைப் பார்த்தேன்....." -முடிக்காமல் நிறுத்தினான்.

"திரும்ப வந்தார்னா வசமா மாட்டிக்குவோம்" -கனகாவின் குரலில் எக்கச்சக்கப் பயம்.

"இப்போதுதானே போனார்? மதியம் சாப்பாட்டுக்குத்தானே வருவார்." 

"அதுக்குள்ள வந்து இருந்து காரியத்தை முடிச்சிட்டுப் போயிடலாம்னு நினைக்கிறியா?" என்று வருத்தம் விரவிய தொனியில் நக்கலடித்த கனகா, "அவரைப் பத்தி உனக்குத் தெரியாது. ரொம்பப் பொல்லாத ஆளு. மதியச் சாப்பாட்டுக்குன்னு இல்ல, கடைக்குப்போன கையோடு எப்போ வேணுன்னாலும் வருவாரு. 'கடைக்காரன் போடுற டீ நல்லாவே இல்லை. உன் கையால போடுற டீயின் ருசியே தனி'ன்னு ஐஸ் வைப்பாரு..... இதெல்லாம் எதுக்குத் தெரியுமா, தனியா இருக்குற நான் தனியாத்தான் இருக்கிறேனா, எவனோடவாவது படுத்திருக்கிறேனான்னு கண்டுபிடிக்கத்தான்" என்றாள்; வறட்சியானதொரு சிரிப்பை உதிர்த்தாள்.

பன்னீர் பேசினான். "நான் அம்மாவோடு இந்த வீட்டுக்குக் குடி வந்து ஒரு வருசம்போல ஆகுது. என்னை நீ ஆசை ததும்பப் பார்க்கும்போதெல்லாம் உன்னோட புருசன் உன்னை அது விசயத்தில் சந்தோசமா வெச்சிக்கலேன்னு புரிஞ்சுகிட்டேன். அப்புறம், சமயம் கிடைக்கும்போதெல்லாம் புன்னகையைப் பரிமாறிகிட்டோம்.  ஒரு கட்டத்தில் பறக்கும் முத்தம் பகிர்ந்துகிட்டோம். போன் மூலமா பேச ஆரம்பிச்சோம். நாசூக்கா அந்தரங்க உறவுகள் பத்திப் பேசிச் சந்தோசப்பட்டோம்....."

பேச்சை நிறுத்தினான் பன்னீர். கனகா பதில் பேசவில்லை என்றாலும் காதிலிருந்து போனை விலக்கிக்கொள்ளாதது தெரிந்தது.

"நான் போட்டோகிராபர். தொழிலில் சரியா செட் ஆகாததால் இன்னும் கல்யாணம் கட்டிக்கல. துணைக்குக் கண் பார்வை மங்கின அம்மா மட்டும். என்னைக் கட்டுப்படுத்த யாரும் இல்ல. தப்போ சரியோ, வாய்ப்புக் கிடைச்சா உன்னோட சந்தோசமா 'இருக்க' ரொம்பவே ஆசைப்பட்டேன். உன் புருசன் கடைக்குப் போறதைப் பார்த்துட்டு, வரட்டுமான்னு கேட்கும்போதெல்லாம் வேண்டாம்னு திட்டவட்டமா சொல்லிடுவே. நேத்துவரைக்கு இதுதான் நடந்தது. இப்பவும் வரவேண்டாம்னு சொல்லிட்டே. உன்னைப் புரிஞ்சிக்க முடியல" என்று வெகுவாக ஆதங்கப்பட்டான் பன்னீர்.

"எனக்கும் அந்த ஆசை இருக்கு. ஆனா....."

சிறிதே இடைவேளி விட்டுத் தொடர்ந்தாள் கனகா: "உன்னை என் வீட்டுக்குள்ள வந்து 'இருக்க' அனுமதிச்சி, அவர்கிட்டே மாட்டிகிட்டோம்னா, குத்துவெட்டு, கொலைன்னு எதுவும் நடக்கலாம். குறைஞ்சபட்சத் தண்டனை தர நினைச்சார்னா, கடைக்குப் போகும்போதெல்லாம் கதவு ஜன்னல் எல்லாம் அடைச்சுட்டு என்னை வெளியே தலைகாட்ட முடியாம பண்ணிடுவார். அப்புறம், இப்போ நாம் வரம்பு மீறாம அனுபவிக்கிற அற்பச் சந்தோசங்கள் எல்லாமே எட்டாக்கனி ஆயிடும். அதனாலதான், வரம்பு மீற வேண்டாம்னு சொல்லுறேன்." 

வருத்தம் தோய்ந்த முகத்துடன் "பை" சொல்லி வீட்டுக்குள் சென்று மறைந்தாள் கனகா.

=====================================================================================

மிக முக்கிய அறிவிப்பு:

'எக்குத்தப்பா' எதையாவது நான் எழுதினால், பேசியில் தொடர்பு கொண்டு, அதிரடியாகக் கேள்விகள் கேட்டுத் திணற வைக்கிற உள்ளூர் நண்பர் கேட்டார்: "பரமு, இப்படியெல்லாமா நாட்டுல நடக்குது? கற்பனைக்கு ஒரு வரம்பே இல்லையா?" 

என் பதில்: "அலைகடல் அளவுக்கு மனதில் ஆசை இருந்தாலும், அவமானத்துக்குப் பயந்து, 'இது போதும்'னு மனசைக் கட்டுப்படுத்தி வாழுற மக்கள்தான் இங்கே 99%க்கும் மேலே. இதைச் சொல்லத்தான் இந்தக் கதை. இந்தப் பரிதாப நிலை தொடரணுமா, மாற்றப்படணுமா, அது சாத்தியமா என்றெல்லாம் தீர்மானிக்க வேண்டியவங்க சமூகச் சிந்தனையும் தொண்டுள்ளமும் கொண்ட அறிஞர்கள்தான்."

நண்பர் சொல்லிக்கொள்ளாமல் தொடர்பைத் துண்டித்தார்!

=====================================================================================