பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 19 ஜூலை, 2022

மரண பயத்தை வெல்வதற்கான மிக எளிய வழிகள்!!!

ரணம் குறித்த அச்சத்திலிருந்து விடுபடுவது அத்தனை எளிதல்ல.

அவரவர் போற்றி வழிபடும் கடவுளைச் சரணடைந்தால் அது சாத்தியமாகும் என்பதாக மகான்கள் எனப்படுபவர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்பது பலராலும் அறியப்பட்ட ஒன்று.

ஆனால், அப்படிக் கிஞ்சித்தும் அச்சத்திற்கு இடம்தராமல் மரணத்தை எதிர்கொண்ட மகான்களுக்கும், அவர்கள் சொல்லும் வழியைப் பின்பற்றி அதை வென்று வாழ்ந்தவர்களுக்குமான பட்டியல் எதுவும் வெளியானதாகத் தெரியவில்லை; அறிவியல் ரீதியான போதிய ஆதாரங்களும் இல்லை.

அவர்களின் நிலை எதுவாகவோ இருந்துவிட்டுப்போகட்டும், சராசரி மனிதர்களால் மரண பயத்துக்கு இடம் தராமல் வாழ்தலும், ஒரு காலக்கட்டத்தில் அஞ்சாமல் அதைத் தழுவுதலும் சாத்தியமா என்பதே நம் கேள்வி.

ஆற்றில் நீந்தி விளையாடும் சிறார்களுடன் தன் பிள்ளையும் நீச்சலடிப்பதைக் கரையிலிருந்து வேடிக்கை பார்க்கும் ஒரு தாய், அது சுழலில் சிக்கி உயிர் பிழைக்கப் போராட நேர்ந்தால், கண்ணிமைப் பொழுதில் ஆற்றில் பாய்ந்து அதை மீட்க முயலுகிறாள்.

பிள்ளை அவளால் மீட்கப்படலாம். மாறாக, அதனுடன் சேர்ந்து அவளும் உயிரிழக்கலாம்.

தான் மூச்சுத் திணறி உயிரிழந்துகொண்டிருக்கும் அந்தக் கணங்களில் தன் பிள்ளையைப் பற்றிய கவலைதான் அவள் நெஞ்சில் நிறைந்திருக்குமே தவிர, தான் உயிரிழப்பது பற்றிய பயத்துக்கு அவள் ஆளாவதில்லை[பெற்ற குழந்தைகளைத் தவிக்கவிட்டுக் கள்ளக் காதலனுடன் ஓடிப்போகும் 'காமப் பிசாசுகள்' விதிவிலக்கு].

இது ஓர் உதாரணம்.

இந்தத் தாயைப் போலவே, தான் உயிருக்குராய் நேசிக்கிற உறவுகள் ஏதேனும் ஒரு காரணத்தால் உயிர் பிழைக்கப் போராடும்போது, தனக்குரிய உடலுறுப்புகள் மட்டுமல்லாது, உயிரையே தரத் தயங்காதவர்களும் இருக்கிறார்கள்.

எவ்வகையான தொடர்போ ஒட்டுறவோ இல்லாத ஒரு குழந்தை சாலையின் குறுக்கே சென்று விபத்துக்கு உள்ளாக நேரும்போது, இமைப் பொழுதும் தன் சாவைப் பற்றி நினையாமல் அதைக் காப்பாற்றுகிற கருணை உள்ளம் கொண்டவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

இப்படி உற்றார் உறவினர் என்றில்லாமல், தம் இனத்துக்காகவும்,  நாட்டுக்காகவும் மரண பயத்தை அலட்சியப்படுத்தித் தம் உயிரைத் தியாகம் செய்தவர்கள் வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

ஆக, ஒவ்வொரு மனிதனும் குறைந்தபட்சம் உற்றார் உறவினர் மீதும், அண்டை அயலார் மீதும் மிக்க அன்பு செலுத்தி வாழ்வதும், மேலே குறிப்பிடப்பட்டவர்களைப் போன்ற, தியாக மனம் படைத்தவர்களை அவ்வப்போது நினைவுகூர்வதும் மரண பயத்தை வெல்வதற்கான ஆகச் சிறந்த வழிகள் எனலாம்[மரணம் இயற்கையானது என்பதை ஏற்கும் பக்குவம் இருந்தால், மரணத்தைத் தழுவும்போது பாசத்திற்கு உரியவர்களின் பிரிவை நினைந்து வருந்துவதும் குறையும்]. 

மரண பயத்தை முற்றிலுமாய் வெல்வது சாத்தியப்படாமல் போயினும், இறுதி நாள்வரை பெருமளவில் அதை மறந்து வாழ்வது எளிது என்று நம்பலாம்!

=====================================================================================