சனி, 2 ஜூலை, 2022

கடவுள் சிலையை, "இது கல்தான்" என்று பட்டரைச் சொல்லவைத்த பெரியார்!!!

"ருவறையில் இருப்பது கல்லென்றார் பெரியார், அது உண்மைதான் என நிருபித்தார் காஞ்சி தேவநாதன் என்கிறார் வீரமணி. இதை விளக்க முடியுமா?" - இது 'Quora' தளத்தில் கேட்கப்பட்ட கேள்வி.

இதற்கான வெகு சுவையான பதிலும் அத்தளத்தில் வெளியாகியுள்ளது.

பதில்:

ஒரு சமயம் பெரியாரின் கார் பழுதுபட்டு, சொல்லி வைத்தாற்போல ஒரு கோவிலின் முன்பு நின்றுவிட்டது. "ஐயா, ஒரு பத்து நிமிடங்களில் சரி செய்துவிடலாம். கொஞ்சம் இறங்கிக் காற்றாட நில்லுங்கள்" என்றாராம் சாரதி. பெரியார் இறங்கி வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றார்.

பலர் அவரைச் சூழ்ந்துகொண்டார்கள். அப்போது ஒரு பக்தர், "ஐயா, நாங்கள் வணங்கும் கடவுளை நீங்கள் எப்படிக் கல் என்று சொல்லலாம்?" என்று கேட்டாராம்.

"அப்படியா? சரி வாருங்கள் கோவிலுக்குள் போவோம்" என்று அந்தப் பக்தரை அழைத்தாராம் பெரியார். பக்தருக்கோ பரம சந்தோசம்.

மூலஸ்தானத்தின் முன்பு போய் நின்றுகொண்டு, பெரியார் பட்டரைப் பார்த்து அருகே வருமாறு கை அசைத்து அழைத்தார். பட்டர் திகைப்பும் பணிவுமாக வந்து நின்றார். அப்போது பெரியார் சிலையைக் காண்பித்து, "இந்தச் சிலை ஐம்பொன்னா? பித்தளையா?" என்று கேட்டாராம்.

அதற்குப் பட்டர், "இல்லய்யா கல்லுதான்" என்றாராம்.

பெரியார் திரும்பிப் பார்த்தாராம். பக்கத்தில் நின்ற பக்தர் வெலவெலத்துப் போய் நழுவினாராம்.

வெளியே வந்த பெரியார், கூட்டத்தைப் பார்த்து, "பட்டர் சொன்னதைத்தான் நானும் சொல்கிறேன். ஆனால், என்னிடம் சண்டைக்கு வருகிறீர்கள்" என்றாராம்.


  • உண்மையில் கோவிலுக்குள் இருப்பது கல்லுதான். இதனால்தான் இன்னும் சிலர் காஞ்சி தேவநாதன் போல சிலர் கோவில் கருவறை என்றுகூடப் பார்க்காமல் அசிங்கம் செய்துவருகின்றனர்.

  • ஆசிபா என்ற சிறு பெண்ணைக் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதும் ஒரு கோவிலில்தான். இதற்கு, சங்பரிவார் கூட்டத்தின் ஆதரவு வேறு.

  • கோவில் நகைகளை இன்றும் திருடிப் பிழைப்பு நடத்துவதும் இங்குதான் நடந்துவருகிறது. சுமாராக ஆயிரம் கோடிக்கு மேல் சிலைத் திருட்டு எல்லாம் நடந்து இருக்கிறது.

இந்த மூன்று விசயத்தையும் பார்க்கும்போது அங்கு இருப்பது சிலை மட்டுமே என்பது தெளிவாகிறது.

==========================================================================================
நன்றி: ta.quora.com