குழந்தையை அணைத்து முத்தமிடுகிறோம். இன்பமாக இருக்கிறது.
அருவியில் குளிக்கிறோம்; கமகமக்கும் மலர்கள் நிறைந்த பூங்காவின் பசும் புல்தரையில் மெல்ல நடக்கிறோம்; மலர்க் குவியலின் மீது மல்லாந்து படுத்துத் தண்ணிய வெண்ணிலவையும் சுடர் விடும் விண் மீன்களையும் கண்ணாரக் காண்கிறோம். நமக்கு மிகவும் பிடித்தமான உணவு வகைகளை ஆர அமர அனுபவித்து உண்கிறோம். இம்மாதிரியான செயல்களில் ஈடுபடும்போதெல்லாம் இன்பமாக இருக்கிறது.
ஆக, இன்பம் எது என்று நமக்குப் புரிகிறது.
பிறப்பை அறுத்து, இறைவனின் திருவடியில் நிரந்தர இடம் பெற்று, அந்தம்[முடிவு] இல்லாத இன்பத்தில் திளைப்பது பேரின்பம் என்கிறார்களே, அந்தப் பேரின்பம் எப்படியிருக்கும்?
மீண்டும் கேட்கிறோம், சிற்றின்பம் நமக்குத் தெரியும். மேலே விளக்கிச் சொன்னது போல புலன்களால் அனுபவிக்கும் அந்தச் சிற்றின்பம் பற்றி நமக்குத் தெரியும். அந்தப் பேரின்பம்.....?
தெய்வங்களைத் தொழுவதன் மூலம் பெறுகிற இன்பம்தான் பேரின்பமா??
அந்த இன்பம், வண்ணமயமான மேகங்கள் உலாவும் விண்வெளியில், இதமாக வருடும் தென்றலை அனுபவித்துக்கொண்டே..... கமகமக்கும் பூந்தேரில் பவனி வரும்போது பெறும் அனுபவம் போல் இருக்குமா?
ஏதோ ‘அமுதம்’ என்கிறார்களே, அது போன்றதொரு பானத்தை மூச்சு முட்டக் குடித்துவிட்டு, கடவுளின் திருவடியில், கோடி கோடி கோடி ஆண்டுகள், யுகயுகாந்தரங்கள் என எஞ்ஞான்றும் கிளுகிளுத்துக் கிடக்கும்போது கிடைப்பதா?
என்னய்யா பேரின்பம்?
பேரின்பமாம் பேரின்பம்... பெருங்காயம்! வெங்காயம்!!