சனி, 26 ஆகஸ்ட், 2023

ஆணின் ‘விரைவீக்கம்’ நோயும் பிரபல எழுத்தாளினியின் ‘கால்வேக்காடு’ சிறுகதையும்!!!

ஓர் அழகான பெண்; இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தவர். அவரின் கணவர் ‘விரை வீக்கம்’ என்னும் நோயால் பாதிக்கப்பட்டவர்[இதைக் கவனத்தில் கொள்ளுங்கள்].

தேடிப்போய் உதவி செய்யும் நல்ல மனம் கொண்டவர் என்பதால் ஊராரின் நன்மதிப்பைப் பெற்றவர், கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண்.

கதையைத் தொடர்வதற்கு முன், கதையின் ‘உள்ளடக்கம்’ குறித்துக் கொஞ்சம் அலசிவிடுவோம்.

அந்தப் பெண்ணின் மீது நீண்ட நாட்களாகக் கண்[இரண்டு கண்ணும்தான்] வைத்திருந்த அதே ஊரைச் சேர்ந்த ஒரு கூலித் தொழிலாளி, அவருடன் தனிமையில் இருக்கும்போது ஒரு கேள்வி கேட்கிறான். அது.....

“அம்மா, அய்யாவுக்கு அடி பெருத்திருக்கே[விரை வீக்கம்]. உங்களோடு எப்படித் தாம்பத்தியம் வெச்சிக்கிட்டாரு? எப்படி ரெண்டு குழந்தைகளைப் பெத்துகிட்டீங்க?”

அவன் இப்படிக் கேட்டவுடன் அந்த அம்மா, “பொறுக்கி நாயே...” என்று சீறிக்கொண்டே கால் செருப்பைத் தேடியிருப்பார், அல்லது சரமாரியாக அவன் கன்னங்களில் அறைந்திருப்பார், அல்லது அவன் புட்டத்தின் மீது எட்டி உதைத்திருப்பார் என்றுதானே நினைக்கிறீர்கள்.

இந்தக் கதையில் அப்படி ஏதும் நிகழவில்லை என்பதோடு, வெறுமனே வேதனைப்படுகிறார் அந்தப் பெண். குழந்தைகளைப் பெற்ற பிறகே தன் கணவர் அந்த நோயால் பாதிக்கப்பட்டார் என்பதை[அந்தப் பொறுக்கி நாய்க்கு இது தெரியாமல்போனது எப்படி?] நினவுகூர்வதோடு, கதை அடுத்தக் கட்டத்திற்கு நகர்கிறது.

அடுத்து வரும் சம்பவங்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படி ஏதுமில்லை.

கதையின் முடிவும் எதார்த்தமானதாக இல்லை.

பண்ணைக்கார அம்மாவின் ரவிக்கையையும் பாடியையும் திருடிச் சென்றதோடு, தன் வீடு தேடிவந்து தன்னோடு படுத்துவிட்டுச் செல்வதாக ஒரு புரளியைப் பரப்புகிறான் அந்த தினக்கூலி[பெயர் மாணிக்கம்].

ஊரும் அதை நம்புகிறது.

பஞ்சாயத்து கூட்டப்படுகிறது.

பஞ்சாயத்தில், மாணிக்கத்தை நெருங்கி அவன் முகத்தில் காறித் துப்பிய அந்த அம்மா[தங்கம்மா] “இப்படியெல்லாமா கதை கட்டுவே... என் சேலையைத் திருடத் தோணலையா?” என்கிறார்.

பஞ்சாயத்தில் இப்படிக் கேட்ட தங்கம்மா அன்று அவன் அசிங்கமாகக் கேள்வி கேட்டபோது ஏன் மௌனம் சாதித்தார் என்பதாகக் கேள்வி ஏதும் கேட்டுவிடாதீர்கள். 

ஏனென்றால்.....

இந்தக் கதையை எழுதியவர் என்னைப் போன்ற ஒரு கத்துக்குட்டிக் கதாசிரியர் அல்ல; பிரபல எழுத்தாளர் ‘இந்துமதி’யாக்கும்!

கதையை வெளியிட்டது உலகத் தமிழ் வார இதழ்களில் ‘நம்பர் 1’ ஆகத் திகழும் ‘குமுதம்’(30.08.2023)ஆக்கும்!!

ஒரு கட்டத்தில், பஞ்சாயத்தைப் புறக்கணித்த தங்கம்மாவின் கணவர் அவரை அழைத்துக்கொண்டு வீடு திரும்புகிறார்.

முக்கியக் குறிப்பு:

‘அவரது பிறப்புறுப்பு[விரை] வீங்க ஆரம்பித்தது. ... மகோதரம் என்றார்கள். புட்டை என்று பேர் சொன்னார்கள். பார்க்காத வைத்தியம் இல்லை. குணமாகவில்லை என்று விரை வீக்கம் நோய் குறித்து விளக்கம் தந்திருக்கிறார் இந்துமதி அம்மையார் அவர்கள்.

அவருக்காகவும், குமுதம் வரதராசனுக்காகவும் விக்கிப்பீடியா தரும் இந்நோய் குறித்த குறிப்பு இடம்பெறுகிறது. அதைத் தொடர்ந்து, விரை வீக்க அறுவைச் சிகிச்சை குறித்த ஒரு காணொலி இணைக்கப்பட்டுள்ளது[கொசுறாக இன்னொன்று>கண்டிப்பாக மணமானவர்களுக்கு மட்டும்]

//கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விரை வீக்கம் (hydrocele / hydrocoele) என்பது ஆண்களின் விரையைச் (Testicle) சுற்றியிருக்கும் சவ்வுப் பையில் அளவுக்கதிகமாக நீர் சுரப்பதால் விரை வீக்கம் உண்டாகிறது. சிலருக்கு இந்தச் சுரப்பு நீர் சாதாரண அளவில் சுரந்தாலும், சுரப்பு நீர் உடலுக்குள் திரும்பிச் செல்கிற நிணநீர்ப் பாதையை அடைத்துக்கொள்வதால் விரை வீக்கம் உண்டாகிறது. யானைக்கால் நோய் (Filariasis) நோயினால்கூட விரை வீக்கம் ஏற்படுவதுண்டு.

விரையின் ஒரு பக்கத்திலோ அல்லது இரு பக்கங்களிலோ வீக்கங்கள் காணப்படுவது இதன் அறிகுறியாகும்.

அறுவை மருத்துவத்தாலும் விரை வீக்கத்தைக் குணப்படுத்த இயலும். மருந்து மாத்திரைகளால் விரை வீக்கத்தைக் குணப்படுத்த இயலாது. விரை வீக்கம் பரம்பரை நோயன்று//