இந்தியாவில் வழக்கில் உள்ள மொழிகளில் இந்தியும் ஒன்று.
35% சதவீத மக்களால்[வரிவடிவம் பெறாத மொழிகள் பேசுவோரையும் சேர்த்து 45% என்று கணக்குக் காட்டுகிறார்கள்] பேசப்படுவதால், இது பெரும்பான்மை இந்தியர்களால் பேசப்படும் மொழி என்றுரைப்பது ஏற்கத்தக்கதல்ல[இது பெரும்பான்மையோர் பேசும் சிறுபான்மை மொழி என்பதே சரி].
நாட்டை ஆளும் அதிகாரம் அவர்கள் வசம் இருப்பதால், ஆங்கில மொழியோடு இந்தியை இந்த நாட்டை ஆளும் மொழியாக அவர்கள் ஆக்கிவிட்டார்கள்.
இதன் விளைவு.....
பல்வேறு துறைகளிலும் ‘இந்தி’யரின் ஆதிக்கம் நாளும் அதிகரிக்கிறது.
இந்நிலை நீடித்தால், இந்தியா, இந்து சாம்ராஜ்ஜியம் ஆகிறதோ இல்லையோ[இது இந்து வெறியர்களின் கனவு] குறுகியக் கால அவகாசத்திலேயே ‘இந்தி நாடு’ ஆகும் என்பது உறுதி.
இது இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத அனைத்து மாநிலத்தவருக்கும் தெரியும்.
தெரிந்தும், பிற மொழிகளுக்கும் இந்திக்கு இணையான வாய்ப்பை வழங்கும்படி ‘இந்தி’யர் அல்லாதார் வெகுண்டெழுந்து போராடாமல் இருப்பதற்கான காரணம் புரியவில்லை.
பத்தோடு பதினொன்றாகத் தமிழ்நாட்டவரும் இந்த அநியாயத்தை வேடிக்கை பார்ப்பது புரியாத புதிராக உள்ளது[வெறுமனே அறிக்கை விடுவதெல்லாம் நம்மை நாமே முட்டாள்கள் ஆக்கும் செயல்].
இந்தப் பதிவை எழுதுவதற்குத் தூண்டுதலாக அமைந்தது அடுத்து இடம்பெற்றுள்ள நாளிதழ்ச் செய்தி[ஊடகங்கள் பலவற்றிலும் வெளியாகியுள்ளது].
‘இந்தி’யர்கள் இந்தியாவின் அரசு சார்ந்த அத்தனைத் துறை அதிகாரங்களையும் பெருமளவில் கைப்பற்றுவதற்கு, இந்தியக் குடிமைப் பணிக்கான தேர்வுகளை[சிவில் சர்வீசஸ்] ஆங்கிலத்தோடு[ஆங்கிலம் நம் தாய்மொழி அல்ல] இந்தியிலும் நடத்துவது வாய்ப்பாக அமையும் என்பதில் சிறிதும் சந்தேகத்துக்கு இடமில்லை.
இதை[இந்தி அல்லாத மொழிகளைப் புறக்கணிப்பது] எதிர்த்துத்தான் தனியொரு நபர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார். உயர் நீதிமன்றத் தீர்ப்பு நமக்குச் சாதகமாக அமைவதோ[அமைந்தாலும் நடுவணரசு அதை மதித்து அமல்படுத்துவது சந்தேகமே], பாதகமாக அமைவதோ ஒரு புறம் இருக்க, நம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளிடம்[ஆளும் ‘திமுக’ உட்பட] நாம் கேட்க விரும்புவது.....
“மிகப் பல ஆண்டுகளாக இந்த அநீதியை[இந்திக்கு முக்கியத்துவம்] நடுவணரசு நிகழ்த்திக்கொண்டிருக்கிறது என்பது நீங்கள் அறியாததல்ல.
அறிந்திருந்தும், வெறுமனே மேடை ஏறி கூச்சல் போடுவதைத் தவிரக் களத்தில் இறங்கி நீங்கள் தீவிரமாகப் போராடாதது ஏன்?
தனியொரு மனிதருக்கு உள்ள அக்கறை பெரும் பெரும் குழுவாக இயங்கும் உங்களுக்கு இல்லாமல்போனது ஏன்? மொழியுணர்வும் இனவுணர்வும் உள்ளவர்களாகக் காட்டிக்கொள்வது மக்களை மயக்கித் தேர்தல்களில் வாக்குகளை அள்ளுவதற்கு மட்டும்தானா?”
“ஆம்” என்பதே தமிழ் மக்கள் அனைவரின் ஒருமித்த கருத்து[உங்களின் உள்மனதின் கருத்தும் இதுதான்] என்பதால், உங்கள் அனைவருக்கும் நாம் விடுக்கும் அழைப்பு.....
“வாங்க... வாங்க, நாம் எல்லோரும் இணைந்தே ஆணி புடுங்குவோம்!”