அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 22 பிப்ரவரி, 2024

கோவையில்... ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீரவிசங்கரின் ‘தில்லாலங்கிடி’ தியானம்!!!

நாட்டு மக்களின் சிந்திக்கும் அறிவைச் சீரழிக்கும் பிரபலச் சாமியார்களில் ஸ்ரீஸ்ரீரவிசங்கரும் உள்ளடக்கம்.

‘ஸ்ரீ’ என்பதன் பொருள், ‘நன்மதிப்பிற்குரிய’ என்பதாகும்; ‘வணக்கத்திற்குரிய’ என்றும் சொல்லலாம்.

இந்த ரவிசங்கர் மதிக்கத்தக்க நபர் என்று வைத்துக்கொண்டாலும், பெயருக்கு முன்னால் ஒரு ‘ஸ்ரீ’ போதும். இரண்டு ஸ்ரீ[ஸ்ரீஸ்ரீ]  தேவையா?

தேவைதான் என்றால், காசா பணமா ஐந்தாறு போட்டுக்கொள்ளலாமே?

கடவுளின் குரு என்னும் பொருள்பட ‘சத்குரு’ என்று அடைமொழி சேர்த்து ஒட்டுமொத்த உலகையும் ஏமாற்றும் சாமியாரும், இந்தச் சாமியாரும் ஒரு குட்டையில் ஊறும் மட்டைகள்.

‘வாழும் கலை’ ரவிசங்கராம். இந்தக் கலை இந்தச் சாமியாருக்கு அத்துபடி. இல்லையென்றால் கோடி கோடியாச் சம்பாதித்திருக்க முடியுமா?

இந்தக் கோடீஸ்வரச் சாமியாரின் தலைமையில்.....

மார்ச் மாதத்தில்[2, 3 ஆகிய தேதிகளில்] கோவையில் பிரமாண்ட நிகழ்ச்சி  நடக்கவுள்ளதாம்.

நான் ஏற்கனவே கேட்ட கேள்வியைத்தான் மீண்டும் கேட்கிறேன்.....

அதென்ன தியானம்?

தியானம் செய்பவர்கள் சப்பணமிட்டு அமர்ந்து, கைகளை முழங்கால்கள் மீது வைத்து, கண்களை மூடி என்னவெல்லாமோ முணுமுணுக்கிறார்கள்.

‘சிவ சிவ’ என்றோ, ‘ராம் ராம்’ என்றோ, ‘கந்தா கந்தா’ என்றோ, ‘சமந்தா சமந்தா’ என்றோ முணுமுணுப்பதால் என்ன பயன்?[தன்னம்பிக்கையை வளர்க்கும் விதத்தில் ‘இதைச் செய்துமுடிப்பேன், செய்தே தீருவேன், சாதிப்பேன் என்று சிறிது நேரம் உள்ளுக்குள்ளே சொல்லிக்கொள்வதால் பயன் விளையக்கூடும். யோகாவில் ஒரு பிரிவான மூச்சுப் பயிற்சியால் நல்ல பலன்கள் கிட்டும்].

ஒருவேளை, சாமிகளின் பெயர்களை மனதுக்குள் உச்சரிப்பதால் பயன் உண்டு என்றாலும், இதற்குப் பயிற்சி கொடுக்க ஸ்ரீஸ்ரீ போன்ற கபட சன்னியாசிகள் தேவையில்லை. தனிப்பட்ட முறையில் இதைத் தினசரிப் பயிற்சியாகச் செய்யலாம்.

தியானம் கற்றுத் தருவது இருக்கட்டும், ‘மகா ருத்ர பூஜை’[இப்படிப் புரியாத பூஜைகளின் பெயரால்தான் மக்களை மீள இயலாத மன மயக்கத்தில் ஆழ்த்துகிறார்கள்] வேறு நடக்கவிருக்கிறதாம். 5 ஆயிரம் பேர் பங்கேற்பார்களாம்[கூடுதலாக வருபவர்களுக்கு அனுமதி தரமாட்டார்களா?] அதற்கு  நன்கொடை[வரி ஏய்ப்புச் செய்ய] வேறு.  லட்சக்கணக்கில் கொள்ளையடிக்க ஆகச் சிறந்த வழி இது.

போலிச் சாமியார்கள் அடிக்கும் கொட்டத்தையோ கொள்ளையையோ தடுத்து நிறுத்த... தேவைப்பட்டால் கைது செய்து கம்பி எண்ணவைக்க ஆட்சியாளருக்குத் ‘தில்’ இல்லை.

மூடநம்பிக்கைகளைச் சுமந்து திரிவதில் கொள்ளை இன்பம் காணுகிற மக்களும் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை.

நல்ல மனம் கொண்ட நாத்திகர் எவரேனும் இந்த நாட்டின் சர்வாதிகாரி ஆவது பெரிதும் வரவேற்கத்தக்கது!