திங்கள், 23 செப்டம்பர், 2024

'பிரதோஷம்’ என்னும் பெயரில் விஷம் பரப்பும் பரம்பரைப் பொய்யர்கள்!!!!!!

முதம் பெறுவதற்காக அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது நஞ்சு வெளியேறியது. அதனால் விளையும் பேரழிவைத் தடுக்கச் சிவபெருமான் அதை விழுங்கினார். சிவனான தன் கணவனுக்கு ஆபத்து நேராமலிருக்கப் பார்வதி தேவி அவரின் தொண்டைக் குழியை அழுத்திப் பிடிக்க, அது அங்கேயே நின்றுவிட்டது. கழுத்து[கண்டம்[ நீல நிறமாக மாறியதால் பரமசிவக் கடவுள் ‘நீலகண்டன்’ என்று அழைக்கப்பட்டார் என்பது புராணக் கதை.

சின்னஞ் சிறுசுகளைத் தவிர இக்கதையை அறியாதார் இல்லை என்றே சொல்லலாம்.

அனைத்தையும் படைத்த முழு முதல் கடவுள் நஞ்சை விழுங்கியதால் அவருக்கு ஆபத்து நேரும் என்று எவனோ ஓர் அண்டப்புளுகன் சொன்ன கதையை ஆதாரமாக வைத்து, சிவனார் நஞ்சு விழுங்கிய நாள்தான் ‘பிரதோஷம்’ என்றும், அந்த நாளை வழிபடுவதுதான் ‘பிரதோஷ வழிபாடு என்றும் விசேட நாட்களில் கோயில்தோறும் ஆண்டாண்டுதோறும் விசேச வழிபாடு நடத்துகிறார்கள் விஷமிகள்.

'நான் ஆறறிவு மனிதன்' என்று நெஞ்சு நிமிர்த்தித் திரிகிறவர்களில் எத்தனைப் பேர் இதைக் கண்டித்தார்கள்? கண்டிக்கிறார்கள்?

கோயில்தோறும் மணியடித்துப் பொருளில்லாத மந்திரங்கள் சொல்லித் தங்களை மிக மேம்பட்டவர்களாகக் காட்டிக்கொள்பவர்கள் செய்யும் அத்தனை விசேட பூஜைகளுமே புராணப் புளுகுகளை உண்மை நிகழ்வுகள் என்று நம்பச் செய்வதற்குத்தான்.

ஒரு கேள்வி.....

ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில், சிவன் கோயில்கள் பலவற்றிலும் இவர்கள் பிரதோஷ பூஜை செய்கிறார்களே, பக்தக் கோடிகளில் எவராவது ‘பிரதோஷம்’[எல்லையற்ற ஆனந்தமாம்] என்றால் என்ன என்றோ, புராணப் புளுகை நம்பி விழா எடுப்பதால் நேரம் விரயமாகிறதே தவிர, பயன் என்ன என்றோ கேட்டிருக்கிறார்களா?

கேட்கமாட்டார்கள். காரணம், முட்டாளாகவே இருப்பதில் பெறும் சுகம் புத்திசாலியாக வாழ்வதில் இல்லை என்று நம்புகிறவர்கள் அவர்கள்!
  * * * * *
***மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தே யிருத்திக் காத்த காலவேளையே பிரதோசவேளை. பிரதோசம்(Pradosha) என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும்[விக்கிப்பீடியா].