எனது படம்
மனிதன் விசித்திரமானவன்; விரும்பியது கிடைக்காவிட்டால் விதியை நொந்துகொள்கிறான்; தடங்கல் ஏதுமின்றி கிடைத்துக்கொண்டிருந்தாலோ, “இன்னும் வேண்டும்... இன்னும் வேண்டும்” என்று பித்துப்பிடித்து அலைகிறான். ஆசை ஐயா ஆசை... பேராசை! தடை எதுவும் இல்லாவிட்டாலோ அது அடங்கவே அடங்காது!

திங்கள், 5 ஜனவரி, 2026

'அவன்’ கனவு கண்டான்; “ஐயோ”ன்னு அழுதான்!


மிழாசிரியர் சொன்னார்:

"பத்து வரியில் கவிதை எழதணும்."

தலைப்பு... 'நான் கண்ட கனவு'.

மாணவர்கள் உற்சாகமாக எழுதினார்கள்.

னைத்தையும் படித்தார் தமிழாசிரியர்.

முதலாவது.....

//இந்திய-பாகிஸ்தான் ஒரு நாள்
கிரிக்கெட் போட்டியில் நான் சதம் அடித்தேன்.
ரசிகர்களின் கரவொலியில் கனவு கலைந்தது//

அடுத்தது.....

//வகுப்பறையில் கவிதை எழுதினேன்.
காதல் கவிதை. அடி பின்னியெடுத்தார் ஆசிரியர்.
என் கற்பனை கலைந்தது//

அடுத்தடுத்த  கவிதைகளும் ரசிக்கவைத்தன.

கடைசியாக ‘அவன்’ கவிதை.

அது…..

//கல்யாணப் பந்தியில் நான்.

என் இலையில்
பொறியலும் கூட்டும் இனிப்புகளும் பிரியாணியும்.
ஆசையாக இலையில் கை வைத்தேன்.
அத்தனைப் பண்டங்களும் காணாமல் போயின. 
சுத்தி இருந்தவங்க வாய்விட்டுச் சிரிச்சாங்க.
நான் “அய்யோ”ன்னு அழுதேன்.
“ஏன்டா அழுறே?"...அம்மா. என் கனவு கலைந்தது//

ஆசிரியர் உட்பட
எல்லோர் முகங்களிலும் அடர் சோகம். 

=======================      

*** ‘அவன்’ ஒரு குடிகாரக் கூலித் தொழிலாளியின் மகன்.