ஞாயிறு, 22 மே, 2011

கடவுளுக்குத் தெரியுமா? [சிறுகதை]

                                  கடவுளுக்குத் தெரியுமா?
                                                          [சிறுகதை]

ஒரு வசந்தத்தின் மாலைப் பொழுதில்..........

யுக யுகமாக ‘மோனத்தில்’ புதையுண்டு கிடந்த இறைவன் மெல்லக் கண் விழித்தார்.

வருத்தம் தோய்ந்த முகத்துடன் அவரை அணுகிய இறைவி,  ”பூலோகத்தில் நம் மத குருமார்களின் நிலைமை ரொம்பக் கவலைக்கிடமா இருக்குங்க” என்றார்.

“ஏன்? என்ன ஆச்சு?” என்றார் இறைவன்.

“ஒரு மண் பானை இருக்குன்னா, அதை உருவாக்க...படைக்க ஒரு குயவன் 
வேணும். அது மாதிரி, உலகங்களையும் உயிர்களையும் படைக்க ஒருவர் வேணும். அவர்தான் கடவுள். அவரை வழிபட்டா துன்பங்கள் நீங்கி எப்பவும் 
இன்பமா வாழலாம். சுவர்க்கத்தில் இடம் கிடைக்கும்.....இது மத குருமார்கள் எப்போதும் மக்கள் மத்தியில் செய்யுற பிரச்சாரம்.........”

கடவுள் குறுக்கிட்டார்: ”உலகங்களைக் கடவுள் படைச்சார்னா கடவுளைப் படைச்சது யார்னு நாத்திகவாதிகள் எதிர்க்கேள்வி கேட்பாங்க. ’கடவுளை யாரும் படைக்கல’ன்னு இவங்க சொல்ல, ’உலகங்களை மட்டும் ஒருத்தர் படைக்கணுமா என்னன்னு?’அவங்க கேட்க, ’உலகம்கிறது ஜடப்பொருள். அது
தானாகத் தோன்ற முடியாது; நிலையானதாகவும் இருக்கமுடியாது. உயிர்கள்
அரைகுறை அறிவுடையவை. கடவுள் மட்டுமே முழுமையான அறிவுடையவர்; அவர்தான் படைப்புத் தொழில் செய்பவர். அவரை யாரும் படைக்கவில்லை. அவர் சாசுவதமானவர்; ’எப்போதும் இருப்பவர்’............

...............இப்படியெல்லாம் எதை எதையோ சொல்லி....கேள்வி கேட்கிற
நாத்திகர்களின் வாயை மதவாதிகள் அடைச்சுடுவாங்க. இதுதானே
பூலோகத்தில் வழக்கமா நடக்கிறது?”

இறைவன் கேட்க, இறைவி சொன்னார்...........

“ஆமா. ஆனா, இப்பெல்லாம், ”கடவுள் சாசுவதமானவர்; ‘எப்போதும் இருப் பவர்’னா அது மட்டும் எப்படி சாத்தியமாச்சு? அதைச் சாத்தியம் ஆக்கியவர் யார்?”னு நாத்திகவாதிகள் கேள்விமேல் கேள்வி கேட்டு மதவாதிகளைத் திணற
அடிக்கிறாங்களாம்........

அது மட்டுமில்ல, ’இதுக்குப் பதில் தெரியலேன்னா சும்மா இருக்கணும்.
எல்லாம் தெரிஞ்ச மாதிரி, ‘கடவுள், ஆன்மா, சொர்க்கம், நரகம், பாவம், புண்ணியம்னு கதை அளந்து மக்களை அடிமுட்டாள் ஆக்க வேண்டாம்’னு எச்சரிக்கை பண்றாங்களாம். பாவம் நம்ம பிரதிநிதிகள்! இதுக்கெல்லாம் பரிகாரம் கேட்டுப் பிரார்த்தனை பண்ணிட்டே இருக்காங்க.........”

சொல்லி முடித்த இறைவி, சிறிது இடைவெளி கொடுத்து.......

“நீங்க சாசுவதமானவர்; ’எப்போதும் இருப்பவர்’.....சரி, ’இது மட்டும் எப்படி சாத்தியமாச்சு? சாத்தியப்படுத்தியது யார்?னு நாத்திகர்கள் கேட்கிற கேள்வி களுக்கு உங்களுக்கு மட்டுமே பதில் தெரியும். அதை எல்லோருக்கும் புரியும் படி விளக்கமா சொல்லிடுங்க” என்றார்.

“எனக்கு மட்டும் பதில் தெரியுமா என்ன? இதுக்கான விடை தேடித்தான் நான் அடிக்கடி மோன தவத்தில் மூழ்கிடறேன்” என்று சொன்ன இறைவன்.........

மீண்டும் மோனத்தில் புதைந்து போனார்!

**********************************************************************************

”கடவுளுக்கும் தெரியாது என்று சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கிறது? கடவுளுக்கும் மேம்பட்ட அறிவுடையவனா நீ?” என்று இறை நம்பிக்கையாளர்கள் எம் மீது சீற்றம் கொள்வதை உணர முடிகிறது.

அவர்கள் முன் நாம் சமர்ப்பிக்கும் எதிர்க் கேள்வி இதுதான்:

’எல்லாம் அறிந்தவர் கடவுள்’ என்று சொன்னவர்களும் மனிதர்கள்தானே? மனித இனத்தைச் சார்ந்த நாம், ‘கடவுளுக்கும் தெரியாது’ என்று சொல்வது மட்டும் எப்படித் தவறாகும்?

‘அவர்கள் ஞானிகள்; நீ சாமானியன்’ என்று வாதம் செய்வதெல்லாம் பகுத்தறிவுக்கு உகந்ததன்று.

*******************************************************************************

                                


















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக