திங்கள், 26 செப்டம்பர், 2011

புரியாத ‘கடவுள் கணக்கு’ !



                           புரியாத ‘கடவுள் கணக்கு’ !
                                                         [சிறுகதை]

கண் மூடி, ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்த இறைவனை நீண்ட நேரம் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் இறைவி.

அதை மனக்கண்ணால் உணர்ந்த இறைவன், ”ஏதோ சொல்ல நினைக்கிறாய் போல. சொல்” என்றார்.

“சொல்ல நினைக்கல. கேட்க நினைக்கிறேன்” என்றார் இறைவி..

“கேள்”

“கடவுள் நீங்க ஒருத்தர்தானா?”

ஒரு முறை அதிர்ந்து அடங்கியது இறைவனின் பொன் நிற மேனி.

“நான் ஒரு போதும் அப்படிச் சொன்னதில்லை” என்றார் இறைவன்.

“நீங்க சொன்னதில்லை. மண்ணுலகில் வாழும் மனிதர்கள் சொல்கிறார்கள்.”

’எல்லாரும் சொல்வதில்லை. ‘நான் ஆன்மிகவாதி’, ‘கடவுளின் அவதாரம்’ என்று சொல்லிக் கொள்பவர்கள் சொல்கிறார்கள்.”

“அதென்ன கணக்கு, ‘ஒன்று’? கட்டற்ற...கணிப்புக்கு உட்படாத... அதிபிரமாண்ட பிரபஞ்சத்தில் ஒரே கடவுள்தான் உண்டு. அவர்தான் அனைத்தையும் தோற்றுவித்து இயக்குகிறார் என்பது என்ன கணக்கு? ஒருவருக்கே அத்தனை நற்குணங்களையும் நிகரற்ற பேராற்றலையும் உரித்தாக்கிக் கொண்டாடுவது
ஏன்? நற்குணங்கள் கொண்ட பல நல்ல கடவுள்கள், ஆதிக்க மனப்பான்மை இன்றி, ஒத்த மனப் போக்குடன் ஒருங்கிணைந்து இந்தப் பிரபஞ்சத்தை ஆளுவது சாத்தியமான ஒன்றுதானே?.......இப்படிச் சிலர் கேட் கிறார்கள்! அவர்கள்.....”

குறுக்கிட்ட இறைவன்,”அவர்கள் சிறந்த சிந்தனையாளர்கள்...
பகுத்தறிவாளர்கள்.” என்றார்.

”எது? எப்படி? எப்போது? என்பன போன்ற கேள்விகள் விடை காண முடியாத
புதிர்கள். மேம்போக்காக நோக்கும் போது, பிரபஞ்ச இயக்கம் ஒரு ஒழுங்குக்கு உட்பட்டது போல் தோன்றினாலும் உண்மையில் கடவுள் என்ற ஒருவரின் கட்டுப்பாட்டில் அது இருப்பதாகத் தெரியவில்லை. எனவே கடவுள் என்ற ஒருவர் தேவையற்றவர் ஆகிறார். என்று சொல்பவர்களும் நிலவுலகில் இருக்கிறார்கள்” என்றார் இறைவி.

“அவர்கள்தான் நாத்திகர்கள்.” மெலிதாகப் புன்னகைத்தார் இறைவன்.

“கடவுள் உண்டுங்கிறாங்க. இல்லைன்னும் சொல்றாங்க. செத்த பிறகு,நரகம்
சொர்க்கம்கிறாங்க. ஆவியா பேயா அலையணும்னு அடிச்சிப் பேசறாங்க.
. அதெல்லாம் ஒன்னுமில்ல. செத்தா மண்ணு. அவ்வளவுதான்னும் அலட்சி யமா சொல்றவங்களும் இருக்காங்க. ஒன்னும் புரியல. மனுசனா ஏன் பிறந்தோம்னு தெரியல........இப்படிப் புலம்பறவங்களும் அங்கே இருக்காங்க.”
என்று இறைவி சொல்ல.......................

”அவர்கள் எல்லாம் சராசரி மனிதர்கள்” என்றார் இறைவன்.

“இப்படி இன்னும் என்னவெல்லாமோ கேள்விகள் கேட்கிறாங்க பூலோகவாசிகள். இதுக்கெல்லாம் எனக்கு விடை தெரியலையேங்கிற உறுத்தல் இருந்துட்டே இருக்கு. எல்லார்த்துக்கும் நீங்கதான் விடை சொல்லணும்” என்று தன் கேள்விகளுக்கு முத்தாய்ப்பு வைத்தார் இறைவி.

முகத்தில் சிறு விரக்திப் புன்னகை மலர்ந்து மறைய, இறைவன் சொன்னார்:

“ யுகம்... யுகம்...யுகம்...யுகம்...யுகமாய்ச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை எந்தவொரு கேள்விக்கும் விடை கிடைக்கவில்லை. எப்போது கிடைக்கும் என்பதும் எனக்குத் தெரியாது.”

மோனத்தில் புதைந்து போனார் இறைவன்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


                                                               
                     





3 கருத்துகள்:

  1. எப்படி உங்கள் உடல் என்பது ஓருயிர் சார்ந்தது இல்லையோ அது போலவே இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தும் ஓரணு சார்ந்தது அல்ல... அணு பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை...

    பதிலளிநீக்கு
  2. மகிழ்ச்சி ஜீவா.
    பிழைகளைத் தவறாமல் சுட்டிக் காட்டுங்கள்; திருத்துங்கள்.

    பதிலளிநீக்கு