தேடல்!


Sep 24, 2011

மனிதனுக்கு ஆயிரம் வயது!!!

                                     மனிதனுக்கு ஆயிரம் வயது!!!


சாவைப் பற்றிய அச்சம் உருவாவதற்கான காரணங்களில் முதலாவது, மரணம் அடையும் போது நம் உடம்பை வருத்தும் ‘வலி’ அல்லது ‘வேதனை’ பற்றிய சிந்தனை ஆகும்.


குறையில்லாத உடல் நலத்துடன் ஒருவர் சாவைத் தழுவுகிற போது, எந்தவொரு வலிக்கோ துன்பத்திற்கோ அவர் ஆளாவதில்லை என்பது நிரூபிக்கப் பட்டுவிட் டால் இந்தப் பயத்திலிருந்து ஓரளவுக்கு மனிதன் விடுபட்டுவிடுவான்.


இந்த நிரூபணம் அறிவியலால் மட்டுமே சாத்தியப்படக் கூடிய ஒன்று.


இதற்கு விஞ்ஞானிகளின் கடின உழைப்பு தேவை.


அவர்களைப் பேரார்வத்துடன்...ஏன்...ஒருவித வெறியுடன் ஆராயத் தூண்டுவது ஒவ்வொரு மனிதனின் கடமை ஆகும்.


கடவுளின் அவதாரம் என்று சொல்லிக் கொண்டு, மக்களின் மனங்களில் கணக்கற்ற மூட நம்பிக்கைகளைத் திணித்துத் தம்மை வழிபட வைத்து, சுக
போகங்களில் திளைக்கும் ஏமாற்றுப் பேர்வழிகளின் பின்னால் ஓடுவதை.......
அவர்களின் கால்களில் விழுவதை நிறுத்தி, அறிவியல் அறிஞர்களைத் தேடிச் சென்று, அவர்களைப் போற்றுவதற்கும் புகழ்வதற்கும் நாம் கற்க வேண்டும்.


தேவைப்பட்டால் அவர்களுக்கு நிதியுதவியும் செய்தல் வேண்டும்.


எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் வெறும் கற்பனையில் உருவாக்கப்பட்ட கடவுளுக்கு விழா எடுப்பதைத் தவிர்த்து, சாதனைகள் நிகழ்த்தும் அறிஞர்களுக்கு விழா எடுத்துச் சிறப்பித்துப் போற்றும் மனப் போக்கை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

சுகபோகப் பற்று


மரணத்தை எதிர்கொள்ளும் தெம்பும் திராணியும் மனிதருக்கு இல்லாமல் போனதற்கான அடுத்த காரணம்.....

பற்று!

வாழ்க்கையில் அனுபவித்த இன்பங்களின் மீது கொண்ட பற்று! அவற்றை வாரி வழங்கிய இம்மண்ணின் மீது கொண்ட பற்று!

வாழ்க்கையில் துன்பங்களையே அனுபவித்துத் துவண்டவனும்கூட, இம்மண்ணில் நீண்ட காலம் வாழ்ந்து, ஆசைப்பட்டதெல்லாம் அனுபவிக்க நினைக்கிறானே தவிர இங்கிருந்து விடுபட்டுப் போகச் சம்மதிப்பதில்லை!

இன்பங்களின் மீதான...இம்மண்ணுலகின் மீதான பற்றுதலிலிருந்து விடுபட வழி உண்டா எனின் இல்லை என்றே சொல்லலாம்.

’இந்தப் பிரபஞ்சத்தில் அழிவுறாதது எதுவும் இல்லை. பழையன அழிவதும் புதியன தோன்றுவதுமான மாறுதல் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. நாம் மட்டும் விதி விலக்கா என்ன?’ என்பன போன்ற சிந்தனைகளால் நம்மை நாமே ஆற்றுப் படுத்துவதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த இயலாமையைப் பயன் படுத்தித்தான் ஆன்மிகவாதிகளும் அவதாரங் களும் மக்களை நிரந்தர முட்டாள்களாக ஆக்கி வருகிறார்கள்.


மரணத்தைத் தவிர்ப்பது ஒரு போதும் சாத்தியமற்ற ஒன்று என்றாலும், மனித னின் ஆயுளை ஐநூறு ஆயிரம் பல்லாயிரம் இலட்சம் கோடி என்று நீட்டித்துக் கொண்டே போவது அறிவியலால் சாத்தியப்படுவதுதான் என்பதை எண்ணி மனித இனம் ஆறுதல் கொள்ளலாம்.


ஆக, இம்மண்ணின் மீதுள்ள பற்றால் மரணத்தை எதிர் கொள்ள நாம் அஞ்சும்
கோழைத்தனத்தை அறிவியலின் துணையுடன் படிப்படியாகக் குறைக்க முடியும் என்பதில் ஐயத்திற்கு இடமில்லை.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++