வெள்ளி, 9 நவம்பர், 2012

குமுதம்[14.11.12] தீபாவளிக் கதைகளும் ஒரு ’குஷ்பு’ கதையும்!

’இந்திரா சவுந்தர்ராஜன்’ முதலான ’முன்னணி’ப் படைப்பாளர்களின் ‘பல்சுவை’க் கதைகள்!

”பேய் பிசாசுகளை நான் நம்புவதில்லை” என்றார் அவர்.

அவருக்கு அருகே நின்றுகொண்டிருந்தவர், ”நீர் நம்பவில்லையா? நான் நம்புகிறேன்” என்று சொல்லிக்கொண்டே மாயமாய் மறைந்து போனார்!

இது வழக்கிலுள்ள ஒரு திகில் கதை.

தென்னை மரத்தின் உச்சியில் ஒரு திருடனைக் கண்டுவிட்ட அதன் சொந்தக்காரர், “எதுக்கய்யா மேலே ஏறினே?” என்று அதட்ட, “புல்லுப் பறிக்க ஏறினேன்” என்று அவன் சொல்ல, “தென்ன மரத்தில் ஏது புல்லு?” என்று இவர் மடக்க, “ஏறினப்புறம்தான் தெரிந்தது இதில் புல்லு இல்லேன்னு” என்று சமாளித்து, இறங்கி ஓடினான் அந்தத் தேங்காய்த் திருடன்!

இந்தத் ‘திரில்’ கதையும் நம்மில் பலரும் கேள்விப்பட்டதுதான்.

அடுத்த வீட்டுக் கோவிந்துவை அழைத்துக் கமர்கட் கொடுத்த குஷ்பு, “குளிக்கும் மறைப்புத் தட்டி முழுக்க ஓட்டைகள் இருக்கிறதால, நான் குளிச்சி முடிக்கிறவரை யாரும் வராம பார்த்துக்கோ” என்று கூறி, அரைமணி நேரம் போல அழுக்குப் போகத் தேய்த்து, ஜாலியாகக் குளித்துத் முடித்து, ஒட்டைகள் வழியாக நான்கைந்து வாலிபர்கள் தன்னை வேடிக்கை பார்ப்பதறிந்து திடுக்கிட்டு, கோவிந்துவைத் தேட, வாலிபர்கள் கொடுத்த ‘அன்பளிப்பில்’ மில்லியடித்து ‘மஜா’வாக இருக்கும் அவனை நையப் புடைத்தாள்!

குஜாலான இந்த ஒரே வாக்கியக் குஷ்பு கதையை நீங்கள் படித்திருக்க மாட்டீர்கள்.

இது, பழைய ’குங்குமம்’[07.08.83] இதழில் வெளியானது. [கதாசிரியர் பெயரைக் குறித்து வைக்கவில்லை. மன்னித்திடுக].

மேற்கண்ட கதைகள் எல்லாம் ‘பொழுது போக்கை’ மட்டுமே நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்டவை.

’நகைச் சுவை’ சார்ந்த கதைகளும், மர்மக்[crime] கதைகளும் இவ்வகை இலக்கிய வகையுள் அடங்கும்.

தேவன், துமிலன் போன்றோருக்குப் பிறகு பாக்கியம் ராமசாமி மட்டுமே நகைச்சுவைக் கதைகள் எழுதுகிறார்.

மர்மக் கதைகளைப் பலரும் எழுதுகிறார்கள்.

இவ்வகைக் கதைகளின் சம்பவங்கள் கற்பனையானவை எனினும், அவை உண்மையானவை என வாசகன் நம்பும் வகையில் இருப்பது அவசியம். அவ்வாறு எழுதப்படும் கதைகளே தரத்தில் உயர்ந்து நிலைத்த வாழ்வைப் பெறும்.

இன்று, முன்னணி மர்மக் கதை எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் இந்திரா சவுந்தர்ராஜன்.

14.11.12 தேதியிட்ட குமுதம் இரட்டைத் தீபாவளி மலரில், ‘தந்திரமாய் ஒரு கொலை’ என்னும் இவரின் சிறுகதை வெளியாகியிருக்கிறது.

பொழுதுபோக்குக் கதை என்றாலும் வாசகரின் அறிவை மழுங்கடிக்கக் கூடாது; நினைத்து நினைத்து மகிழ வைப்பதாக இல்லையெனினும், கணநேர இன்புறுத்தலுக்கேனும் அது பயன்படுவதாக இருத்தல் வேண்டும் என்ற எண்ணத்துடன் இவரின் கதையை அணுகுவோம்.

இந்தக் கதையின் அதி முக்கிய கதை மாந்தர்களான [அதாங்க கதாபாத்திரங்கள்] சண்முக ராஜு, ரைஸ்மில் ஆறுமுகம், கேசவரங்கன் ஆகியோரால்,  ”அய்யா” [மரியாதை காரணமா அவருக்குப் பேர் வைக்கலஎன்று அழைக்கப்படுபவர் தஞ்சை மாவட்டத்தின் ‘பெரிய புள்ளி’. வரவிருக்கிற தேர்தல்ல ‘எம்.பி’ ஆகக் கனவு காண்பவர்.

கேசவரங்கனுக்கும் இதே கனவு இருந்துச்சி. இருபது அடியாட்களைச் சேர்த்துட்டு அவரைப் போட்டுத் தள்ளிட்டான். [அவர் உடம்புல 64 குத்துங்களாம்! படிக்கப் படிக்க என் உடம்பு வெடவெடன்னு நடுங்கிச்சி. இன்னமும் நடுக்கம் போகலீங்க!!!]

அய்யா மண்டையைப் போட்டதைக் கேள்விப்பட்டு, அதிர்ச்சியில் உறைந்து போனார் ரைஸ்மில் ஆறுமுகம். காரணம், ஒரு ரசீதுகூட இல்லாம, அய்யாகிட்ட இருபது லட்சத்தைக் கொடுத்திருந்தார் அவர்!

அய்யாவோட மகன்கிட்ட பணத்தைக் கேட்டாரு. அவன், “எனக்கு எதுவுமே தெரியாது. அய்யா, நகை நட்டு, பணம் எல்லார்த்தையும் ரகசிய இடத்தில் வெச்சுட்டார்”னு சொல்லிட்டான்.

பாவம் நம்ம ரைஸ்மில் ஆறுமுகம்!

’எம்.பி’ ஆக ஆசைப்பட்டுட்டிருக்கிற சண்முகராஜுவிடம், “அய்யாவோட ஆவிகிட்டப் பேசிப் பணம் இருக்கிற இடத்தைக் கண்டுபிடிக்கணும். ஆவியோட பேசுற ஒருத்தரை உனக்குத் தெரியுமாமே, கூட்டிட்டுப் போ”ங்கிறார்.

இவரைப் பயன்படுத்தி, எம்.பி பதவிக்குப் போட்டியா இருக்கிற கேசவரங்கனைத் தீர்த்துக்கட்டத் திட்டம் போடுறான் சண்முகராஜு.

பம்புசெட் ரூமுக்குள்ள தன் சொந்தப் பணம் 20 லட்சத்தை ஒளிச்சி வெச்சுட்டு...

ஆவியோட பேசுற ஒருத்தனைக் கைக்குள்ள போட்டு, அவனை அய்யா ஆவியோட பேச வெச்சி [எல்லாம் ’செட்டப்’தாங்க] , “எம்.பி. பதவிக்குப் போட்டி போட இருந்த என்னைக் கேசவ ரங்கன்தான் கொலை பண்ணிட்டான்”ன்னு சொல்ல வைக்கிறான்.

அய்யா ஆவி, பணம் இருக்கிற இடத்தை ரைஸ்மில் ஆறுமுகத்துக்குச் சொன்னதோட, கேசவரங்கனைக் காலி பண்ணிடச் சொல்லி, ஆறுமுகத்துக்கு உத்தரவு போடுது.

20 லட்சம் திரும்பக் கிடைச்ச சந்தோசத்தில், ஆறுமுகம் கேசவரங்கனைக் காலி பண்ணிடறான்.

சண்முக ராஜு ஆனந்தத்தில் மிதக்கிறான்.

இதோட கதையை முடிச்சுட்டா, தீயவனான சண்முகராஜு தண்டிக்கப்படலையேன்னு நீங்களும் நானும் வருத்தப்படுவோம் இல்லீங்களா?

அதனால..............

சண்முகராஜு, ஜாலியா காரில் போகும்போது, பின் சீட்டில் பதுங்கியிருக்கிற கேசவரங்கன் ஆவி, ஒரு புகை மூட்டம் போல இருந்து, “என்கிட்டேவா உன் தந்திரம்?”ன்னு கேட்டுச்சாம். [ஹா...ஹா...ஹான்னு சிரிச்சுதுன்னு வெச்சுங்குங்க].

சண்முகராஜுக்கு உதறல் எடுக்க, அவன் ஓட்டிட்டுப் போன கார், மேம்பாலத்தை உடைச்சுட்டுக் கீழே கீழே விழ ஆரம்பிச்சுதுங்களாம்!

இப்படியொரு மர்மக் கதையை இதுக்கு முந்தி நீங்க படிச்சதில்லைதானே?

உங்க வீட்டில் உள்ள அத்தனை பேரையும் இதைப் படிக்கச் சொல்லுங்க. உங்க ஃபிரண்ட்ஸ்கிட்டேயும் சொல்லுங்க.

நீங்க அனுபவிச்ச இன்பத்தை அவங்களும் அனுபவிக்கட்டும்.

ஆனா, ஒன்னு.............

”அய்யா ஒரு பெரிய புள்ளியாச்சே, அவர் போயி 20 லட்சத்தை பம்ப்செட்ல ஒளிச்சி வைப்பாரா?”ன்னு அவங்க கேள்வி கேட்டா, ‘திருதிரு’ன்னு முழிக்காதீங்க. “வரிவரியா பத்து தடவை படி. புரியும்”னு சொல்லிச் சமாளிச்சுடுங்க. “ஆமா, எவ்வளவு பெரிய எழுத்தாளர். இப்படி மடத்தனமா எழுதியிருக்காரே?”ன்னு உளறிக் கொட்டிடாதீங்க.

“அய்யா கிட்ட கொடுத்த 20 லட்சமும் கிடைச்ச பிறகு. அவர் சொல்றார்னு ரைஸ்மில் ஆறுமுகம் ஒரு கொலைக் குற்றவாளியா ஆவாராங்கிற சந்தேகம் சண்முகராஜுக்கு ஏன் வரலை?”ன்னும் அவங்க கேள்விக்கணை தொடுக்கலாம். 

“ரைஸ்மில் ஆறுமுகம் மூலமா, தன்னைத் தீர்த்துக் கட்டினது சண்முகராஜுதான்னு கேசவரங்கன் ஆவிக்கு எப்படித் தெரிஞ்சுது?”

இப்படியெல்லாம் மேலே மேலே கேள்விகள் கேட்டு அவங்க உங்களைத் திணறடிப்பாங்க. எப்படிச் சமாளிக்கறதுன்னு நல்லா யோசிச்சி வெச்சுக்கோங்க.

என்ன................இன்னும் நிறையக் கேள்விகள் இருக்கு. எங்கே ஓடுறீங்க?

                                *                                    *                                        *

அடுத்து வருவது, புஷ்பா தங்கதுரையின் ‘அஞ்ஞானம்’ என்னும் கதை.

ஆல்பர்ட் ஸ்டீபன் என்னும் விஞ்ஞானி ஒரு கருவி கண்டிபிடித்தார்.

‘ஏ’என்பவனின் காதுகளுக்குச் சற்று மேற்புறமாக, இரு பக்கங்களிலும் இரு ‘ரிஸீவிங் ஆண்டெனாக்களை’ப் பொருத்திவிட வேண்டியது. பாக்கெட் சைஸ் கருவியை, ஆறு வோல்ட் பாட்டரி போட்டு, பாண்ட் பைக்குள் அவனைப் போட்டுக் கொள்ள வைப்பது.

அதே மாதிரி, ‘பி' என்பவன் காதுகளுக்கு மேல் ஒரு ‘பிராட்காஸ்டிங் ஆண்டெனா’க்களைப் பொருத்திவிட வேண்டியது.

இப்போது விசையைத் தட்டிவிட்டால் போதும். ‘பி’ என்ன உணர்ச்சிகளை அடைகிறானோ, அதை அப்படியே இம்மி பிசகாமல் ‘ஏ’ என்பவனும் அனுபவிப்பான்.

’ நாஸா’ விஞ்ஞானிகள், நான்கு பேரை ‘செவ்வாய்’க்கு அனுப்புகிறார்கள்.

அவர்களின் காதுகளில் ‘பிராட்காஸ்டிங் ஆண்டெனா’க்கள் பொருத்தப்படுகின்றன.

அமெரிக்காவில் உள்ள பெரிய நிறுவனம் ஒன்று, துரிதகதியில் உற்பத்தி செய்த, ‘ரிஸீவிங் ஆண்டெனா’க்களை அமெரிக்க மக்கள் பொருத்திக் கொள்கிறார்கள்.

செவ்வாயில், வீரர்கள் பெற்ற உணர்ச்சிகளை இந்த மக்களும் உணர்வார்கள்.

செவ்வாய் மனிதர்கள் வீரர்களைத் தாக்குகிறார்கள்.

அவர்கள் அலற, அமெரிக்க மக்களும் அலறுகிறார்கள்.

இதுதான், புஷ்பா தங்கதுரை எழுதிய பெரிய கதையின் சிறிய சுருக்கம்.

கருவியைப் பற்றிச் சொல்லும் போதே, ‘பிராட்காஸ்டிங் ஆண்டெனா பொருத்திக் கொண்டவரின் நல்லது கெட்டது என அனைத்து உணர்ச்சிகளையும், ரிஸீவிங் ஆண்டெனா பொருத்திக் கொள்பவர் அனுபவிப்பார் என்பது தெளிவாகப் புரிந்துவிடுகிறது.

அப்புறம் என்ன நாஸா, பூஸா, செவ்வாய், ஆராய்ச்சி எல்லாம்?

இப்படிப்பட்ட கருவிகளக் கண்டுபிடிப்பது சாத்தியமா? அது எப்போது? என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. இப்போதே இப்படியொரு கற்பனைக் கதை படைத்து, அமெரிக்க விஞ்ஞானிகளையும் நாஸாவையும் சாடுகிறார் புஷ்பா தங்கதுரை! ”விஞ்ஞானத்தைக் கொல்லுங்கள்” என்று மக்கள் கோஷங்கள் எழுப்புவதாகக் கதையை முடிக்கிறார்.

இக்கதை மூலம் அதே கோஷத்தை இவரும் எழுப்புகிறாரா?

அறிவியல் துறையில் வளர்ச்சி பெறாத[???] இந்தியா திருப்தியோடு வாழ்வதாகப் பின் குறிப்பில் குறிப்பிடுகிறார். இது எத்தனை சதவீதம் உண்மை?

”ஐயா எழுத்தாளரே, நீண்ட பெரிய கட்டுரையில் விரிவாகச் சொல்லவேண்டியதை ஒரு சிறுகதைக்குள் அடக்க முயன்றிருக்கிறீகள் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?”

                             *                                           *                                            *

இதையடுத்து, வெ.இறையன்பு படைத்த, ‘துறந்தான்! மறந்தான்’ சிறுகதை.

தரமான ஒரு படைப்பைத் தர வேண்டும் என்றுதான் இறையன்பு முயற்சி செய்திருக்கிறார். ஆனால், அவர் எண்ணம் ஈடேறவில்லை.

ஒரு மன்னன், 20 ஆண்டுகள் உழைத்துத் தன் நாட்டை மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்கிறான்.

மக்கள் அவனைத் தெய்வமாக மதிக்கிறார்கள்.

இரண்டாண்டுகள் மழை பொய்த்துப் போகிறது.

துயரத்தில் மூழ்குகிறான் மன்னன்.

ஒரு மடாலயத் தலைவரைத் தேடிப் போகிறான்.

”யாரோ செய்த பாவம்தான் மழை பொய்த்ததற்குக் காரணம். அதற்கான பிராயச்சித்தமே நாட்டைக் காப்பாற்றும்” என்கிறார் அவர்.

“பிராயச்சித்தமாக என் உயிரைத் தியாகம் செய்வேன்” என்று சொல்லிப் பாடலிபுத்திரம் திரும்புகிறான் மன்னன்.

மழை பெய்தது. நாடு செழித்தது.

மன்னன், ஆட்சியைத் தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டு, ’ஷ்ரவணகுண்ட்’ என்னும் இடத்தை அடைகிறான்.

தியானத்தில் அமர்ந்து, உண்ணா நோன்பிருந்து உயிர்விடத் துணிகிறான். [மன்னன் பெயர் சந்திரகுப்த மவுரியன் என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர்]

இது இந்தச் சிறுகதையின் சுருக்கம்.

கதையின் தொடக்கத்திலிருந்தே பல சந்தேகங்கள் எழுகின்றன.

மழை பெய்து நாடு வளம் பெறுவதும், அது பொய்த்து, பஞ்சம் தலைவிரித்தாடுவதும் இயற்கை என்பது யாவரும் அறிந்தது. அதனை மன்னனும் அறிந்திருக்க வேண்டும்.

அவ்வாறிருக்கையில், வறட்சியை நினைத்து அவன் துவண்டு போவதும், ஒரு மடாலயத் துறவியைத் தேடிப் போவதும் ஏன்?

யாரோ பாவம் செய்ததாகத் துறவி சொல்கிறார். அவர் யார்?

யாரோ செய்த பாவத்துக்கு, மிக நல்லவனான மன்னன் எப்படிப் பொறுப்பாவான்?

இது பற்றி, எழுத்தாளர் ஏன் சிந்திக்கவில்லை?

மன்னன் நோன்பிருந்து உயிர் துறப்பதாக முடிவெடுத்ததும் மழை பெய்ததே, அது எப்படிச் சாத்தியமாயிற்று?

வெ. இறையன்புவின் அடுத்த கதை முழுமை பெற்ற ஒன்றாக அமைய நமது வாழ்த்துகள்.

                                 *                                             *                                  *

ஆறு சிறுகதைகளைப் படித்து மனம் சலித்த நமக்கு ஆறுதல் தருவதாக அமைவது, ’மேலாண்மை பொன்னுச்சாமி’யின் ‘காவல் வேட்டை’

ஏழைப் பாட்டாளி மக்களின் உணர்ச்சிப் போராட்டங்களையும், அவர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளையும் எதார்த்தமான கதைகளாக வடித்துத் தருகிற பொன்னுச்சாமி, இந்தக் கதையில், ஒரு ஏழை விவசாயி ஆன முத்துசாமி, அறுவடைக்குக் காத்திருக்கும் தன் நிலத்துக் கடலைப் பயிரைக் கொள்ளை போகாமல் காப்பதற்குப் படும் பாட்டை அற்புதமாகப் படம் பிடித்திருக்கிறார்.

இருளைக் கண்டால் அஞ்சி நடுங்கும் முத்துசாமி நம் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்துவிடுகிறார். அந்த அளவுக்குப் பாத்திரப் படைப்பு சிறப்பாக அமைந்துள்ளது.

இரண்டு நபர்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டு அவர் கடலைக் காட்டைக் காவல் காக்கச் செல்லும் நிகழ்வை, நகைச்சுவை உணர்வுடன் அவர் விவரித்திருக்கும் பாங்கு வெகுவாகப் பாராட்டத்தக்கது.

மொத்தத்தில், குமுதம் தீபாவளி மலருக்குக் கதை வழங்கிய எழுவரில் ,மேலாண்மை பொன்னுச்சாமி மட்டுமே தேர்ச்சி பெறுகிறார்!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

































4 கருத்துகள்: