மருத்துவ மனையிலிருந்த நண்பரைப் பார்க்க ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தேன்.
பழைய பேருந்து நிலையத்திற்குச் சற்றுத் தொலைவிலிருந்த திவள்ளுவர் சிலையைக் கடந்து மருத்துவமனைக்குச் செல்லும் சாலையில் திரும்பியபோது, ஒரு தேனீர்க் கடையின் முன்னால் திரண்டிருந்த கும்பல் என் கவனத்தைக் கவர்ந்தது.
ஸ்கூட்டரை ஓரங்கட்டி நிறுத்தி, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒரு முதியவரிடம், “என்னங்க ஐயா கும்பல்?” என்றேன்.
“டீ குடிக்க வந்த ரெண்டு பேருக்குள்ள ஏதோ தகராறு. கும்பல் சேரவும் ரெண்டு பேர் ஜாதிக்காரங்களும் தலையிட ஆரம்பிச்சுட்டாங்க. எந்த நேரத்திலும் ‘கைகலப்பு’ நேரலாம். அது பெரிய ஜாதிக்கலவரமாக மாறவும் வாய்ப்பிருக்கு” என்றார் ’அனுபவசாலி’யான அந்தப் பெரியவர்.
அடுத்து நடக்கவிருப்பதை அறியும் ஆர்வம் இருந்தாலும், நண்பர் ஆபத்தான கட்டத்தில் இருந்ததால், நின்று கவனிக்க நேரமில்லை; ஸ்கூட்டரைக் கிளப்பினேன்.
நேர்ச் சாலையில், அரை நிமிடப் பயணம். இடப்புறம் திரும்ப வேண்டும். எதிரே வந்த ஒரு பைக்காரர், உரத்த குரலில், “என்ன சார் அங்கே கும்பல்?” என்று கேட்டு வழி மறிப்பது போல் நின்றார்.
“ஏதோ ஜாதிப் பிரச்சினை” என்று சொல்லிவிட இருந்தேன்; சொல்லவில்லை. அப்படி நான் சொல்ல, அந்த இரண்டு சாதிகளில் ஒன்றைச் சார்ந்தவராக இவர் இருந்துவிட்டால், நிச்சயம் தன் ஆட்களுடன் கை கோர்ப்பார். அதைத் தடுக்கும் நல்லெண்ணத்துடன், ”ரெண்டு குடிகாரனுங்க சண்டை போட்டுக்குறானுங்க. அதை வேலை வெட்டி இல்லாத ஒரு கும்பல் வேடிக்கை பார்க்குது. நீங்க போங்க சார். போயி உங்க வேலையைப் பாருங்க” என்று ஒரு பொய்யை உதிர்த்துவிட்டு வண்டியை நகர்த்தினேன். ஒரு ஜாதி மோதலைத் தடுப்பதில், என்னாலான சிறு பங்கைச் செலுத்திவிட்ட திருப்தி எனக்கு.
பொய் சொல்லக் கூடாதுன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. ஆனா, நல்லதை நினைச்சி ஒரு பொய் சொல்லிட்டேன்.
என்னிடத்தில் நீங்க இருந்திருந்தா நீங்களும் இப்படி ஒரு பொய்யைச் சொல்லியிருப்பீங்கதானே?
* * * * * *