திங்கள், 26 ஆகஸ்ட், 2013

நான் ஏன் சாத்தானை வழிபட நினைக்கிறேன்?

‘பிரபஞ்சத்தைப் படைத்த கடவுள், தானாகத் தோன்றினார்’ என்றால், மண்பானை படைத்த குயவன் பரம்பரையும் தானாகத் தோன்றியதுதான்!

“கடவுள் உண்டா இல்லையா?”

‘முடிவு’ஏதும் எட்டப்படாமல், பல நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் விவாதம் இது.

’பிரபஞ்சத்தைப் படைத்தது யார்? [யாராவது படைத்திருந்தால், அவரைப் படைத்தது யார்?]. மரணத்துக்குப் பின் என்ன ஆகிறோம்...ஏதாவது ஒரு தொடர்ச்சி உள்ளதா? இவ்விரண்டு கேள்விகளுக்கும் வெவ்வேறு நூற்றாண்டுகளில் வெவ்வேறு சிந்தனையாளர்கள் பதிலளித்திருக்கிறார்கள். அவர்களின் சிந்தனா சக்தியின் வலிமை, எளிமை...ஏன், அவர்கள் காலத்து அறியாமைகளுக்கு ஏற்ப பதில்கள் வேறுபடுகின்றன............ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்ல முடிகிறது. இது விசயத்தில் no one is sure. அதனால் தைரியமாக இதில் இறங்கலாம்’ என்கிறார்[’கடவுள்’, உயிர்மை பதிப்பகம், மூன்றாம் பதிப்பு 2012] காலஞ்சென்ற புனைகதை & அறிவியல் எழுத்தாளரும், சிறந்த சிந்தனையாளருமான சுஜாதா.

தான் முன்வைக்கும் கருத்துக்குப் போதிய விளக்கம் தர முடியாத போதும், மாற்றுக் கருத்துக்கு ‘மறுப்பு’ச் சொல்ல இயலாத நிலையிலும், “எனக்குத் தெரியவில்லை” என்று சொல்லித் தோல்வியை ஒத்துக் கொள்ளும் உயரிய பண்பு, ஆன்மிகப் பிரச்சாரம் செய்வோரிடம் எப்போதும் இருந்ததில்லை.

குயவன் பானை செய்யும் தொழிலை உதாரணம் காட்டி, “பானை என்பது படைக்கப்பட்ட ஒரு பொருள். அதைப் படைத்தவன் குயவன் [இந்த உதாரணம் ரொம்பப் பழசு. புது எ.கா. கணினி]. அது போல, இந்தப் பிரபஞ்சம் என்பது ஒரு ’படைப்பு’. இதைப் படைப்பதற்குப் ’படைப்பாளன்’ தேவை. அவனே கடவுள்” என்று வெகு எளிதாகக் கடவுளை மக்கள் முன் நிறுத்தினார்கள் இவர்கள்.

கொஞ்சமே கொஞ்சுண்டு சிந்திக்கத் தெரிந்தவன் எவனோ கேட்டான்; [இதெல்லாம் கேட்டுக் கேட்டுப் புளிச்சிப் போன விவாதம். கொஞ்சம் பொறுமையா படிங்க] “கடவுளைப் படைத்தது யார்?"

நம்மைப் போன்றவர்களைப் பார்த்துக் கேட்டிருந்தால் “தெரியவில்லை” என்று அப்பிராணியாய்ச் சொல்லியிருப்போம். ஆனால், கடவுளின் நகலான அவதாரங்களின் ஆசி பெற்ற ஆன்மிகங்களின் அகராதியில் ‘தெரியாது’ என்ற வார்த்தைக்கே இடமில்லை. “முழுமுதல் கடவுளை ஒருவர் படைப்பதாவது? அவர் சுயம்பு. தானாகவே அவதரித்தார்” என்றார்கள்.

ஒரு பொருளைச் சுட்டிக் காட்டி, அதன் தோற்றம் குறித்து ஏதும் தெரியாது என்று சொன்னால் அங்கே விவாதத்துக்கே இடமில்லை.

அதை விடுத்து, “அது படைக்கப்பட்டது” என்று சொன்னால், “படைத்தவன் யார்?” என்ற கேள்வி எழுகிறது.

அடுத்து, “அந்தப் படைத்தவனைப் படைத்தது யார்? அதாவது, குயவனைப் படைத்தது யார்?” என்ற கேள்வியும் தவிர்க்க முடியாதது.

”குயவனைப் படைத்தது யார்?” என்னும் கேள்விக்குக் ”கடவுள்” என்பது அவர்களின் பதிலாக இருக்கிறது.

இங்கே, படைப்பாளனாக இருந்த குயவன் வெறும் படைப்பாக ஆகிப் போகிறான் என்பது நினைக்கத்தக்கது. குயவனாகிய படைப்பாளனைப் படைத்தது யார் என்று கேள்வி கேட்டு, பதிலும் பெறுகிறவருக்கு, “கடவுளாகிய படைப்பாளனைப் படைத்தவர் யார்?” என்று கேட்கவும் உரிமை இருக்கிறது. கடவுளைப் படைத்தது இன்னார் என்று பதில் தர வேண்டிய கடமை ஆன்மிகங்களுக்கு இருக்கிறது.

“அவரைப் படைத்தது அவருக்கும் மூத்த ஒரு கடவுள்” என்று ஏதாவது பிதற்றினால், அந்த மூத்தவரை...அவருக்கும் முந்தினவரை....” என்று கேள்வி கேட்பது முடிவில்லாமல் நீண்டுகொண்டே போகும். பதிலும் நீளும்.

எனவே,  “தெரியவில்லை” என்று சொல்வது உத்தமம். “நம்புகிறோம்” என்று சொல்லியிருந்தாலும்கூட அவர்களின் கவுரவத்துக்கு எந்தவிதப் பங்கமும் நேரப் போவதில்லை. ஆனாலும், அப்படிச் சொல்ல மாட்டார்கள். காரணம்.....

”தெரியவில்லை” என்னும் போது, இவர்களும் சாமான்ய மக்களும் சமம் என்றாகிறது. ‘நாங்கள் அப்படி இல்லை.  அவனின் அனுக்கிரகம் எங்களுக்கு இருக்கிறது’ என்று மக்களை நம்ப வைக்க, “அவரை யாரும் படைக்கவில்லை. அவர் எப்போதும் இருப்பவர் “என்று பொய்யுரைத்தார்கள்;

“அவன் எப்போதும் இருப்பது எப்படிச் சாத்தியமாயிற்று?” என்னும் அறிவு பூர்வமான கேள்விக்கு அவர்கள் ஒருபோதும் பதில் தந்ததில்லை.

பதில் தெரியாத பரிதாப நிலையிலாவது, ”தெரியவில்லை” என்று பெருந்தன்மையுடன் ஒத்துக்கொண்டார்களா என்றால், அதுவும் இல்லை. 

இவையெல்லாம் உலகறிந்த உண்மைகள்.

இப்படியொரு கேள்விக்குப் பதில் தெரியாத போதே, கடவுளைப் பற்றிப் பேசுவதற்கான அருகதையை இழந்துவிட்டார்கள் இந்த ஆன்மிகங்கள்.

’முழுமுதல் கடவுள் ஒருவரே’ என்றார்கள். அது ஏன்?

கணக்கு வழக்கில்லாமல் விரிந்து பரந்து கிடக்கிற பிரபஞ்சத்துக்கு ஒரே ஒரு கடவுள்தானா?

அதென்னய்யா கணக்கு? ஒன்னே ஒன்னு......? 

ஆயிரக் கணக்கில் கடவுள்கள் இருந்து, ஆதிக்கப் போட்டியில் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டதில் அத்தனை பேரும் மண்டையைப் போட, இந்த ஒருவர் மட்டும்தான் மிஞ்சினாரா?

இந்தக் கேள்விக்கேனும் அவர்களால் பதில் தர முடியுமா?

‘கடவுள் தூணிலும் இருப்பார்...துரும்பிலும் இருப்பார்...அணுவிலும் இருப்பார்’ என்றார்கள்.

தூண் தூணாகவும், துரும்பு துரும்பாகவும், அணு அணுவாகவும் இருந்தால் இவர்களுக்கு ஏன் அடி வயிறு வலிக்கிறது? அங்கெல்லாம் கடவுளைத் திணிக்கிறார்களே, அது ஏன்? ஏன்? ஏனய்யா?

கடவுள் எப்படியிருப்பார் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு,   “அவன் ஆணோ பெண்ணோ அலியோ அல்லன்; இருப்பவனும் அல்லன்; இல்லாதவனும் அல்லன். அவன் எப்படி இருப்பான் என்ற கேள்விக்கு விடை சொல்வது சாத்தியமில்லை”[நம்மாழ்வார்]என்றார்கள்!

‘அவன் இருப்பவனும் அல்லன். இல்லாதவனும் அல்லன்’ ...இப்படியொரு கடவுளைக் கற்பனை செய்ய முடிகிறதா? அப்புறம் எப்படிக் கடவுளை  நம்புவது?

இப்படி எத்தனையோ கட்டுக் கதைகளைக் கட்டிவிட்டதோடு இந்த அவதாரங்களும் ஆன்மிகங்களும் திருப்தி அடையவில்லை. எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்த மாதிரி, கடவுளை அத்தனை நற்குணங்களும் நிறைந்த ஓர் உத்தமபுத்திரனாக மக்கள் மனங்களில் சித்திரம் தீட்டிப் பதிய வைத்தார்கள்.

கடவுள் என்று ஒருவர் இருப்பதாக வைத்துக் கொண்டாலும் அவர் நல்லவர்தானா என்ற கேள்வியையும் தவிர்க்க இயலவில்லை.

கடவுள் ஏன் இந்த உலகில் நம்மை உலவ விட்டார் என்ற வினா, சதா காலமும் நம் மண்டையைக் குடைந்து குடைந்து நிம்மதியைக் குலைத்துக்கொண்டே இருக்கிறது.

நமதே நமதான இந்த உடம்பு நம் கட்டுப்பாட்டில் இல்லை. மனமும் இல்லை. இவற்றைக் கட்டுப்படுத்தி, ஆசை, பாசம், காமம், வெகுளி, பொறாமை, சூது, வாது, வஞ்சகம் போன்றவற்றிலிருந்து தற்காத்து நிம்மதியுடன் வாழ்வதற்கு எத்தனைப் போராட்டங்கள் நடத்த வேண்டியிருக்கிறது?. இப்படியொரு அவல வாழ்க்கை வாழ நம்மைப் பணித்த இந்தக் கடவுளா நல்லவர்?

நோய், வறுமை, முதுமை, இயற்கைப் பேரிடர் என்று எத்தனை எத்தனை அழிவு சக்திகள் நம்மை ஓட ஓட விரட்டிக் கொண்டிருக்கின்றன. இப்படியொரு விடுபட முடியாத இடர்ப்பாட்டுக்கு நம்மை உட்படுத்திய கடவுள் நல்லவரா என்ன?

தீமையின் ஒட்டு மொத்த வடிவம் மரணம். மரணத்தைக் காட்டிலும் நம்மைத் தினம் தினம் அச்சுறுத்திச் சிறுகச் சிறுகச் சாகடிக்கிறது மரண பயம். மரணமே இல்லாத கடவுள் நம்மை மட்டும் மரணதுக்கும் மரண பயத்துக்கும் உள்ளாக்கலாமா? இவரா நல்லவர்?

செத்த பிறகு என்ன ஆவோம் என்பதும் நமக்குத் தெரியாது. இந்த மர்ம முடிச்சைப் போட்டவரும் இவர்தான். இவரேதான்.

ஆக, நம் ஆன்மிகங்கள் கற்பனை செய்த கடவுளை நல்லவர் என்று நம்புவதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை.

நம்மினும் மேலான அறிவார்ந்த சக்தி என்று ஒன்று இருந்து நம்மை ஆட்டிப் படைப்பது உண்மையென்றால்[கடவுள்தான் எல்லாம் என்று இவர்கள் சொல்லவில்லையென்றால், எல்லாம் இயற்கை; நடப்பது நடக்கட்டும் என்று துன்பங்களை ஏற்கும் சக்தியை வளர்த்துக்கொண்டு வாழ்நாளைக் கழிப்போம்] அது நம் ஆன்மிகங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட கடவுளல்ல; தீமையின் மறு உருவம் என்று சொல்லப்படுகிற  சாத்தானே என்பதில் எள் முனை அளவும் சந்தேகமில்லை.

எனவே, இனி எஞ்சியிருக்கும் வாழ்நாளையேனும் நிம்மதியாகக் கழிப்பதற்குக் கெட்ட சக்தியான சாத்தானை வழிபடுவதே புத்திசாலித்தனம் என்பது என் நம்பிக்கை.

உங்கள் நிலையும் இதுவாகத்தானே இருக்க முடியும்?

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000