சனி, 14 டிசம்பர், 2013

பெரியார் ‘பெரியார்’ ஆனது எப்படி?

பெரியார், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக விழா ஒன்றிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

கடவுள் வாழ்த்துக்கு மாற்றாகத் 'தமிழ் வாழ்த்து' பாடும் சூழலை 1967இல்தான் அறிஞர் அண்ணா  உருவாக்கினார்.

எனவே, தமிழ் வாழ்த்து அறிமுகம் ஆகாத காலம் அது.

விழாவின் முதல் நிகழ்வு ஆரம்பிக்கப்பட இருந்தது.

‘கடவுள் வாழ்த்து பாடுவார்களே. கடவுள் மறுப்பாளராகிய பெரியார், அமர்ந்திருப்பாரா? எழுந்து நிற்பாரா? ஆத்திரம் அடைவாரா? அமைதி காப்பாரா?’

ஆசிரியர்கள், மாணவர்கள் என இருதரப்பிலும் பலவிதமான ஊகங்கள்.

விழா நிகழ்வுகள் தொடங்கின.

முதலில் 'கடவுள் வாழ்த்து' பாடுவதும் ஆரம்பமாயிற்று.

அனைவரும் எழுந்து நிற்க ஆரம்பித்த அதே வினாடிகளில் பெரியாரும் கைத்தடியை ஊன்றிப் பிடித்தபடி தள்ளாடியவாறு எழுந்து நின்றுவிட்டார்!

உடலைத் தாங்கும் வலிமையை அவரின் கால்கள் எப்போதோ இழந்திருந்தன. கூட்டத்துக்கு அவரைத் தூக்கிக்கொண்டுதான் வருவார்கள்.

'கடவுள் வாழ்த்து' பாடி முடிக்கும்வரை உடல் வேதனையைத் தாங்கியவாறு நின்றுகொண்டே இருந்தார் பெரியார்!

உடனிருப்போரின் மன உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் இதற்குக் காரணம்.

அவர் வாழ்வில் இப்படி எத்தனையோ நிகழ்வுகள்.

கடவுளைச் சாடினாலும் சக மனிதர்களை மதித்து நடப்பதில் அவருக்கு இணை எவரும் இல்லை.

இந்த உயரிய பண்புதான், இந்த மண் அவரைப் ‘பெரியார்’ எனப் பாராட்டுவதற்குக் காரணமாக அமைந்தது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஆதார நூல்: ஏ.எஸ்.கே. எழுதிய ‘கடவுள் கற்பனையே’, சூலூர் வெளியீடு, கோவை. இரண்டாம் பதிப்பு: 2006.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@