புதன், 14 மே, 2014

இந்த ஒ.ப.கதை புரிந்தால் நீங்கள் வயிறு குலுங்கச் சிரிக்கலாம்!!

பணி முடிந்து வீடு திரும்பியதும், கைலிக்கு மாறி, கைகால் அலம்பி தொ.க.முன் அமர்ந்தான் மனோகரன்.

“பைனான்ஸ்காரங்க ஃபோன் பண்ணினாங்க. தவணைத் தேதி முடிஞ்சி ரெண்டு வாரம் ஆச்சாம். இன்னிக்கிக் கண்டிப்பா பணம் கட்டணும்னு சொன்னாங்க” என்றாள் அவன் மனைவி பூர்ணிமா.

“இன்னிக்கே கட்டலேன்னா தலையை வாங்கிடுவானோ? வட்டிக்கு வட்டி போடுவான். வேறென்ன? நாலு நாள் போகட்டும். உன் வேலையைப் பாரு”என்று கடுப்படித்தான் மனோகரன்.

சமையலறைக்குள் நுழைந்து, தேனீர்க் கோப்பைகளுடன் திரும்பிய பூர்ணிமா, “தமண்ணா மளிகையிலிருந்து பையன் வந்திருந்தான். ’ரெண்டாயிரம் ரூபா பாக்கி இருக்கு. இன்றே பணத்துடன் வரவும்’னு செட்டியார் சீட்டு அனுப்பியிருந்தார்” என்றாள்.

“இன்னும் யாரெல்லாம் கடன்காரங்க வந்தாங்க?” தேனீரை உறிஞ்சிக்கொண்டே கேட்டான் மனோகரன்.

“டைலர் ரவி வந்தான்......”

குறுக்கிட்டான் மனோகரன். “அவனும் இன்னிக்கே பாக்கிப்பணம் தரணும்னு சொன்னானோ?”

“ரொம்ப அவசரமா பணம் தேவைப்படுதாம்.”

“தைக்கத் துணி கொடுத்தா, ஒரு வாரத்தில் தர்றேன்னு சொல்லிட்டு ஒரு மாசம் கழிச்சிக் கொடுப்பான். கூலியை மட்டும் கறாராக் கேட்டு வாங்கிடுவான். மறுபடியும் வந்தான்னா நாலு நாள் போகட்டும்னு சொல்லிடு.”

“அப்புறம்....வந்து....”

“சொல்லு.”

“நெளிநெளியா தலைமுடியோட கவர்ச்சியா டிரஸ் பண்ணிட்டு ஒரு லேடி வந்தா. முப்பது வயசு மதிக்கலாம். பேரு குமுதாவாம். மேட்டுத்தெருவுல குடியிருக்காளாம். 'உன் புருஷன் ஆயிரம் ரூபா எனக்குப் பாக்கி வெச்சிருக்கான். ஒரு மாசம் ஆச்சு. நேர்ப்படும் போதெல்லாம் இதா தர்றேன்...அதா தர்றேன்னு சாக்குப் போக்குச் சொல்லி இழுத்தடிச்சிட்டே இருக்கான். இன்னிக்கு ராத்திரிக்குள்ள பணம் வரலேன்னா நாளைக்கு வந்து அவன் மானம் மரியாதை எல்லார்த்தையும் கப்பலேத்திடுவேன்; தெருப்பூரா சிரிப்பா சிரிக்க வெச்சுடுவேன். அவன் கிட்டே சொல்லி வை’னு சொல்லிட்டுப் போனா. ஆளப் பார்த்தா ‘எதுக்கும்’ துணிஞ்சவள்னு தெரியுது.”

மனோகரனின் முகம் முழுக்கக் ‘குப்’பென்று  பீதி பரவியது.

சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பினான்.

“அவகிட்ட எதுக்குக் கடன் வாங்கினீங்க?” வெள்ளந்தியாய்க் கேட்டாள் பூர்ணிமா.

“அவகிட்ட கடன் வாங்கல; சொன்னேன்” என்று தனக்கு மட்டும் கேட்கும்படியாய் முணுமுணுத்துக்கொண்டு வெளியேறினான் மனோகரன், குமுதாவிடம் மேலும் ஒரு வாரம் அவகாசம் கேட்க!