ஞாயிறு, 18 மே, 2014

“அவன்”..... இது, ஒரு பக்க ‘முத்திரை’க்கதை! நட்சத்திரக் கதையும்கூட!!

குமுதம் ‘ஒரு பக்கக் முத்திரைக்கதை’ப் போட்டியில் ரூ1000/= பரிசு பெறுதற்குரிய படைப்பு இது. 28 ஆண்டுகளுக்கு முன்பே ‘சாவி’ வார இதழில் [28.07.1985] பிரசுரம் ஆகிவிட்டதால் அது சாத்தியம் இல்லாமல் போனது! [இதைப் படைத்த ‘அறிவுஜீவி’க் கதாசிரியன் நான் அல்லங்க!]


கதை:                                    அவன்.....

கதாசிரியன்:                     கே.ஜி.எஃப்.பழனிச்சாமி [எங்கிருந்தாலும் வாழ்க!]

‘சாய்ந்துவிடுமோ?’ என்று பார்ப்பவர்கள் அச்சப்படும் வகையில் ஏராள பயணிகளைச் சுமந்துகொண்டு, முக்கி முனகி நகர்ந்துகொண்டிருந்த அந்த நகரப்பேருந்தில் ‘அவன்’.

பார்ப்பதற்கு ஜோராக இருந்தான். கொக்கி போட்டு இழுக்கிற அழகு.

பாம்பாய் நெளிந்து, முண்டியடித்து முன்னே போக முயன்றுகொண்டிருந்தான்.

‘அவன்’ பக்கத்தில் நின்றுகொண்டிருந்தவர் பரம்பரைப் பணக்காரர் போலும்! அவருடைய வெளுப்பான உடைகள் பார்ப்பவர் கண்களுக்கு ஒளியை நல்கின. கையில் கனமான பணப்பை[?] வைத்திருந்தார்.கழுத்திலிருந்த தங்கச் சங்கிலி மார்புப் பகுதியில் ஊசலாடியது.

‘அவன்’ தன் ஒரு கையை முன்னோக்கிச் செலுத்தினான். பணக்காரரின் கழுத்தை நோக்கி அது பயணித்தது. யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான்.

இப்போது அவனுடைய கை அந்தப் பணக்காரர் அணிந்திருந்த சட்டையின் ‘காலர்’ அருகே இருந்தது.

“டிக்கெட்.....டிக்கெட்.....”

மூச்சி வாங்கச் சிரமப்பட்டு, “வழி விடுங்கய்யா” என்று சலித்துக்கொண்டு டிக்கெட் கொடுத்தவாறு கண்டக்டர் அவனைக் கடந்தபோது.....

அவனுக்குப் பின்னால் நின்றவர்கள் ‘அவன்’ மீது சரிய.....

அவனும் அந்தப் பணக்காரர் மீது சரிந்து, அவரின் தங்கச் சங்கிலியை லாவகமாகக் கை வைத்து உருவ.....

அது அவன் கையோடு வந்துவிட்டது.

யாரும் கவனிக்கவில்லை. பணக்காரரும் கழுத்துப் பக்கம் ஏதோ ஊர்கிறதே என்று தடவி விட்டுக்கொண்டார்; தலை முடியைச் சீர் செய்துகொண்டார்.

‘அவன்’ அந்தச் சங்கிலியைத் தன் பேண்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு, மெல்லத் தன் கண்களால் பயணிகளை நோட்டம் விட.....

அந்த ஏழைத் தொழிலாளி ‘அவன்’ கண்ணில் பட்டான்.

வயதான அந்தத் தொழிலாளியின் உடுப்பில் ஆங்காங்கே எண்ணைக் கறைகள் தெரிந்தன; பொத்தல்கள் நிறைந்திருந்தன.

‘அவன்’ மேலும் முன்னேறி, அந்தத் தொழிலாளியின் முதுகை ஒட்டியவாறு நின்றுகொண்டான்.

தன் சட்டைப் பையிலிருந்து பத்து நூறு ரூபாய்த் தாள்களை வெளியே எடுத்தான்; பேருந்தின் குலுக்கலுக்குக் காத்திருந்து, தொழிலாளியின் சட்டைப் பையில் தாள்களைச் சொருகினான்.

பேருந்து ஒரு நிறுத்தத்தில் நிற்க, ‘அவன்’ கீழே குதித்து, நடந்து, மறைந்து போனான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@