மனிதனுக்கு ஆறறிவு வாய்த்ததால் விளைந்த தீமைகளுள் இந்தக் காதலும் ஒன்று. அசிங்கமான தோற்றம் கொண்ட ஆணோ பெண்ணோ காதலிக்கப்பட்டதாக வரலாறு உண்டா? கொஞ்சம் யோசித்த பின்னர் வாசியுங்கள்!
அன்பு, பாசம், நேசம், கோபம், தாபம், காதல், காமம் போன்றவை அன்றாடம் நம்மை ஆளுகிற உணர்ச்சிகளைக் குறிக்கும் சொற்கள்.
இந்தப் பதிவுக்குத் தொடர்புடைய அன்பு, கருணை, காமம், காதல் ஆகிய பதங்களுக்கான பொருள் வேறுபாடுகளையும், அந்த உணர்ச்சிகள் நம்முள் ஏற்படுத்தும் விளைவுகளையும் முதலில் புரிந்துகொள்வோம்.
அன்பு: ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் பற்றுதல். இந்த உணர்ச்சிக்கு ஆட்படுவதால் ஏற்படும் விளைவு, ஒருவர் நலனில் இன்னொருவர் அக்கறை கொள்ளுதல்; உதவுதல்.
கருணை: சொந்தமோ பந்தமோ இல்லாதவர் மீதும் செலுத்துகிற அன்பு. இதன் விளைவு, பிரதி பலன் கருதாமல் உதவுதல்.
காமம்: கவர்ச்சி காரணமாக ஆண் பெண் உடல் உறுப்புகளில் உருவாகும் கிளர்ச்சி. விளைவு, புணர்ச்சிக்கான தூண்டுதல்; இன விருத்தி செய்தல்.
காதல்: அன்பு, காமம் என்னும் பொருள்களும் இச்சொல்லுக்கு உண்டு. இன்று, ஆண் பெண் உறவைக் குறிக்க மட்டுமே பயன்படுகிறது.
அன்பு, கருணை என்பனவற்றின் பயன் பிறருக்கு உதவுதல்; காமத்தின் பயன் புணர்ச்சி என்றெல்லாம் விளக்கம் தருவது போல, காதலின் பயன் என்ன என்ற வினாவுக்கு நம்மால் தெளிவான விளக்கம் தர இயலாது.
அதன் பயன்தான் என்ன?
பக்கம் பக்கமாக உணர்ச்சியைக் கொட்டிக் கடிதங்கள் எழுதிக் குதூகலித்த காலம் மலையேறிவிட்டது.
பேசிகளில், இவளது அழகை அவன் வர்ணித்தும், அவனது ஆண்மையை இவள் வியந்தும் பேசிப் பேசிப் பேசி இன்ப உலகில் சஞ்சரிக்கிறார்கள். இது, காதலிப்பதால் விளையும் முதல் பயன்.
அடுத்து, பட்டும் படாமலும் ஒட்டியும் உரசியும் மனம் போன போக்கில் கை பிணைத்துத் திரிவது; மறைவிடம் வாய்த்தால் முத்தங்களைப் பரிமாறிக்கொள்வது.
அப்புறம்?
இருவருக்கும் ‘தில்’ இருந்தால் விடுதிகளில் தங்கி, பஞ்சணையைப் பகிர்ந்துகொண்டு, சொர்க்கபுரியை எட்டிப் பார்த்துவிட்டு வருவது. அதற்கான துணிவு இல்லையெனின், பெற்றெடுத்தவர்களுக்கு மனுப் போட்டுவிட்டு முதலிரவுக்காகக் காத்திருப்பது.
இரு தரப்பிலும் அனுமதி மறுக்கப்பட்டால், ஓடிப்போவது. அதற்கேற்ற சூழ்நிலையும் பொருளாதார வசதியும் இல்லையெனின், விஷம் தின்று செத்துப் போவது.
ஆக, இவர்கள் காதலிப்பதன் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். அது?
செக்ஸ்.....அதாவது , ‘காம சுகம்’ அனுபவித்தல்.
“இல்லை...இல்லை. இப்படிச் சொல்வது அபத்தம். காதல் என்பது புனிதமானதொரு உணர்ச்சி. அது, வெறும் கவர்ச்சியில் உதிப்பதல்ல; இரு அன்பு நெஞ்சங்களின் கலப்பில் முகிழ்ப்பது” என்று சொல்வாரும் உளர்.
“இல்லை...இல்லை. இப்படிச் சொல்வது அபத்தம். காதல் என்பது புனிதமானதொரு உணர்ச்சி. அது, வெறும் கவர்ச்சியில் உதிப்பதல்ல; இரு அன்பு நெஞ்சங்களின் கலப்பில் முகிழ்ப்பது” என்று சொல்வாரும் உளர்.
இந்தப் புனிதமான காதலை ஏட்டளவில் காண முடியுமே தவிர, நடைமுறை வாழ்க்கையில் சாத்தியமில்லை என்பதே நம் வாதம்.
காதல், தோல்வியில் முடிகிற போது காதலர்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்களே, காதலிப்பதன் நோக்கம் காமம்தான் என்றால் இது சாத்தியமா என்று கேள்வியையும் சிலர் எழுப்பக்கூடும்.
சாத்தியம்தான். இம்மாதிரி தற்கொலைகளுக்குக் காரணம் காதலர்களைப் அழுத்தமாகப் பற்றியிருக்கும் ஒருவிதமான மன நோய்தான்.
இந்நோய்க்கு வித்திட்டவர்கள், காதல் கவிதைகள் எழுதிப் புகழ் பெற விரும்புகிற, பிழைப்பு நடத்துகிற கவிஞர்களும் கதாசிரியர்களும் சினிமாக்காரர்களும்தான்.
“காதல் போயின் சாதல்” என்று பாரதி பாடியிருக்கிறானே என்றால், வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்கள் சொன்னவையெல்லாமே இன்று நம்மவர்க்கு உடன்பாடானவை அல்ல என்பதே நம் பதில்.
மனிதன் விலங்காக இருந்தவரை, சூழ்நிலை வாய்க்கும் போதெல்லாம் உடலுறவு கொண்டு காம இன்பத்தைத் துய்க்க முடிந்தது. ஆறறிவு வாய்த்து, அது வளர்ச்சி பெற்ற நிலையில், பொருளாதாரம், குடும்பச் சூழல் போன்ற காரணங்களால் அது சாத்தியம் இல்லாமல் போனது. நடைமுறையில் துய்க்க முடியாத இன்பத்தைக் காதல் என்னும் பெயரில் கற்பனையில் துய்க்க ஆரம்பித்தான். இவனின் இந்த பலவீனத்தை நம் கவிஞர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்; காதல் கவிதைகளை எழுதிக் குவித்தார்கள்.
இனி யாரும் காதல் கவிதைகள் படைக்கக் கூடாது என்று ஒரு தடைச் சட்டம் பிறப்பிக்கப் படுமேயானால், இன்றுள்ள கவிஞர்களில் பலர் தற்கொலை செய்து கொள்வார்கள்!
உண்மையில், சிறப்பித்துப் பாடப்பட வேண்டியது காமம்தான்.
ஆறாவது அறிவின் வளர்ச்சி காரணமாக, மனிதன் தனக்குத் தானே விதித்துக் கொண்ட கட்டுப்பாடுகளும் தடைகளும் போட்டிகளும், இவற்றால் விளையும் துன்பங்களும் காமத்தின் மீதான வெறுப்புணர்வையும், அது பற்றி நாலு பேர் முன்னிலையில் வெளிப்படையாகப் பேசுவதற்கான தயக்கத்தையும் உண்டுபண்ணிவிட்டனவே தவிர, இப்போதும் மக்களால் மதிக்கப்பட வேண்டியது காமம்தான்.
நினைத்த போது நினைத்த இடத்தில் எவருடைய அல்லது எதனுடைய குறுக்கீடும் இல்லாமல் ஆசைப்பட்டபடியெல்லாம் அதைத் துய்க்க நேர்ந்தால் அதுவே மகத்தான இன்பம்! பேரின்பம்!!
”அடேய்! பண்ணாடைப் பயலே...காமாந்தகா...களிமண் மண்டையா, இதெல்லாம் அற்ப சுகமடா; சிற்றின்பமடா. நிறையப் புண்ணியங்கள் சேர்த்து, இறைவனின் திருவடியை அடைந்து பெறுகிற இன்பம்தான் பேரின்பம். தெரிந்துகொள்” என்று இதைப் படித்துக் கொண்டிருப்பவர்களில் யாரோ ஒருவர் ஓங்கிய குரலில் அலறுவதை ‘அசரீரியாய்’ என்னால் இப்போது கேட்க முடிகிறது!
என்ன செய்ய? நானும் எவ்வளவோ முயற்சி பண்றேன். கடவுள், பாவம், புண்ணியம் சொர்க்கம், நரகம், பேரின்பம் பத்தியெல்லாம் எனக்கு ஒரு மண்ணும் புரியலீங்க. நீங்கள் எத்தனை திட்டினாலும் நான் திருந்த மாட்டேன்.
அது கிடக்கட்டும். நான் காமம் உயர்வானதுன்னு சொல்லிட்டிருந்தேன் இல்லையா?
’ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிட்டு, உரிய முறையில் காம சுகத்தைப் பகிர்ந்துகிட்டா கணவன் மனைவிக்கிடையே அன்பு பெருகும்; இல்லத்தில் ஆனந்தம் தவழும்’னு அறிஞர்கள் சொல்லியிருக்காங்க.
இதையும், மேலே சொன்ன அவ்வளவையும் மனதில் இருத்தி, மணமாகாத இளைஞர்களுக்கு நான் சொல்ல விரும்புவது..........
“தயவு செய்து காதல் செய்ய வேண்டாம்.”
=============================================================================================
இது, http://kaamakkizaththan.blogspot.com என்னும் என் வலைப்பதிவில்[முடக்கப்பட்டது], ஏறத்தாழ 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. அடுத்த பதிவு நிச்சயம் புத்தம் புதியதாக இருக்கும்!
=============================================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக