இந்தக் கேள்வியின் பொருள், ஜெயகாந்தனின் நூல்களைப் படித்திருக்கிறீர்களா என்பதல்ல; அந்த விசித்திர மனிதனின் உள்மனதை வாசித்திருக்கிறீர்களா என்பதே. பழைய குமுதத்தில் வெளியான அவரின் இந்த அதிரடிக் ‘கருத்துப் பதிவு’ அதற்கு உதவக்கூடும்.
சென்ற 69 - 71’ல் வெளிவந்த உரைநடை நூல்களில் என்னுடைய புத்தகமொன்று சிறந்ததெனத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறதாம். என்ன அளவுகோல் கொண்டு, என்ன முறையில் இத்தேர்வு செய்யப்பட்டதென்பது எனக்குச் சம்பந்தம் இல்லாத விவகாரம்.
நானோ என் பதிப்பாளர்களோ நூலை இவர்களுக்கு அனுப்பவில்லை. வாசகர்களில் பலர் இதைப் படித்து மகிழ்ந்திருக்கிறார்கள் என்ற ஒரு காரணத்தினால் இதைத் தேர்ந்தெடுத்தார்களாம். பிற நூல்களை அவர்கள் சரியாகப் படிக்காத காரணத்தினால் இதை தேர்ந்தெடுத்தார்கள் என்றும் சொல்லலாம் அல்லவா?
யாரோ ஒரு வியாபாரி அவரது இலக்கிய நன்கொடையாக - நான் விரும்புகிற புத்தகங்களை வாங்கிக்கொள்ள நூறு ரூபாய் அளிக்கப் பெரிய மனதுடன் இசைந்திருக்கிறாராம். ஏன் நான் விரும்புகிற புத்தகங்கள் என்று சலுகை? அதையும் அவர்கள் விருப்பப்படியே வாங்கிவந்து என் தலையில் கட்டலாமே?
நான் ஒரு விபரீதப் பிராணியாம். என்னைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று ‘இலக்கியத் தரகர்’ ஒருவர் பகிரங்கமாக எழுதி அங்கலாய்த்துக்கொள்கிறார்.
எந்தப் புகழ், எவரால், எவ்வழி வருகிறது? தனக்கு அது பொருந்துமா என்றெல்லாம் சிந்திக்காமல், தராதரமற்று அலைவதே நமது சமூக வாழ்க்கையாக மாறிவிட்ட நிலையில் என்னைப் புரிந்துகொள்ள முடியாதுதான்.
எந்தப் புகழ், எவரால், எவ்வழி வருகிறது? தனக்கு அது பொருந்துமா என்றெல்லாம் சிந்திக்காமல், தராதரமற்று அலைவதே நமது சமூக வாழ்க்கையாக மாறிவிட்ட நிலையில் என்னைப் புரிந்துகொள்ள முடியாதுதான்.
நான் இம்மாதிரிப் போக்குகளை மற்றவர்கள் விசயத்தில் ஆவேசமாக எதிர்த்தவன். என்னைப் பொருத்தவரை அதை அங்கீகரிப்பேனேயாகில் நான் ஒரு ‘ஹிப்பகிரட்’[hipocrite] ஆவேன். எந்த ஒன்றை நான் மறுக்கிறேனோ அந்த ஒன்றிலிருந்து நானாவது விடுதலை அடைய வேண்டாமா?
நான் அன்பளிப்புகள் தரக்கூடாது என்று சொல்ல வரவில்லை. ‘உங்கள் மீது எனக்குள்ள மதிப்புக்காக இதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று ஏதோவொரு அன்பளிப்பை என்னிடம் கொண்டுவந்து தருகிற செயலை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இலக்கிய விமர்சனத்துக்கும் இந்த அபிமானங்களுக்கும் சம்பந்தம் இல்லை.
இங்கே நடப்பது வேறு.
இன்னாருக்கு இன்ன காரணத்துக்காக நூறு ரூபாய் தர முடிவு செய்துள்ளோம் என்று மேளம் கொட்டிக்கொண்டு, சம்பந்தம் இல்லாத ஒருவர் ஊர் திரட்டி வருகிற ஒரு காரியத்தை, இதைச் செய்கிற ஏஜன்ஸிக்கு நன்றி கூறித் தெண்டனிட்டு நான் அங்கீகரிக்க வேண்டுமா?
என்னால் முடியாது.
நானே ஜனங்களைக் கூட்டி, ‘ஒரு கதை சொல்கிறேன். ஆளுக்குப் பத்து பைசா கொடுத்து உதவுங்கள்’ என்று கேட்பது இதைவிடக் கௌரவமான காரியமாக இருக்கும்.
நான் வாழ்க்கையையும் வாழ்க்கை என்னையும் பாதிப்பதைத் தவிர்க்க முடியாது. தனிப்பட்ட நபர்களை நான் தொடுவதில்லை; என்னைத் தொடுவதையும் அனுமதிப்பதில்லை.
எந்தப் புகழுக்கும் ஏங்கித் தவிக்கிற வேட்கை எனக்கில்லை; அந்த வேட்கை இல்லாததால் எனக்கு விரக்தியும் இல்லை.
=============================================================================================
சிதைந்து மக்கிப்போன பழைய குமுதம் இதழிலிருந்து எடுத்தாண்டது. [1971 ஆம் ஆண்டை ஒட்டி வெளியான ஓர் இதழ்]
============================================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக