செவ்வாய், 7 ஏப்ரல், 2015

வைரமுத்துவின் ‘குமுதம்’ சிறுகதைகளில் குறைகளே இல்லையா?!?! [விமர்சனங்களுக்கு ஒரு விமர்சனம்]

விமர்சனம் என்றால் என்ன?

ஒரு படைப்பிலுள்ள நிறைகளுடன் குறைகளையும் பட்டியலிடுவதோடு, வடிவமைப்பு, உள்ளடக்கம், மொழிநடை, உத்தி என அதன் பல்வேறு கூறுகளையும் தற்சார்பின்றி ஆராய்ந்து சொல்வதே பயனுள்ள நல்ல விமர்சனம் ஆகும்.

வைரமுத்துவின் சிறுகதைகளை வெளியிட்டு வருகிற குமுதம்,  ஐந்து ‘அறிவுஜீவி’களைத் தேடிப் பிடித்து, ‘விமர்சனக் கலந்துரையாடல்’ என்னும் பெயரில் அவர்மீது ‘புகழ்மாரி’ பொழியச் செய்திருக்கிறது.

கலந்துரையாடல் மூலம் வைரமுத்துவைப் பாராட்டுவதில் தவறேதும் இல்லை. ‘விமர்சனம்’ என்னும் பெயரில் அதைச் செய்தது தவறு என்பதைச் சுட்டிக்காட்டுவது இப்பதிவின் நோக்கமாகும்.
‘...தான் பிறந்து வளர்ந்த சமூகம் சார்ந்த அனுபவம், சென்னை வந்து வாழ்ந்து பெற்ற அனுபவம், திரையுலகில் பெற்ற அனுபவம் என இம்மூன்றும் இவர் சிறுகதைகளில் வெளிப்பட்டிருக்கின்றன’ என்று பாராட்டுகிறார் காவ்யா சண்முகசுந்தரம்.

‘...சிறந்த சிறுகதை ஆக்கம் சற்றே குறைந்துபோன நிலையில் வைரமுத்து சிறுகதைகள் எழுதிவருவது வரலாற்றில் ஒரு திருப்புமுனை’ என்று புகழ்கிறார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அருணன்.

‘ஒரு கவிஞனால் எழுதப்பட்ட சிறுகதைகள் என்பதை அவற்றை வாசிக்கும்போது என்னால் உணர முடிந்தது’ இப்படிச் சிலாகிப்பவர் இயக்குநர் சீனு ராமசாமி.

‘நல்ல ஆழ்ந்த வாசிப்புக்குள் இளைஞர்களைக் கொண்டுவருவதற்கான செயலைக் கவிஞர் செய்து வருகிறார்’ இது கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனின் பாராட்டுரை.

‘நிறைய எழுத்தாளுமைகள் தோற்றிருக்கிற இத்துறையில் வைரமுத்து ஜெயித்திருக்கிறார்’ என்று உறுதிபடச் சொல்பவர் மேடைப் பேச்சாளர் பர்வீன் சுல்தானா.

இவ்வாறாக, இந்த ஐந்து அறிவுஜீவிகளும் கொஞ்சமும் வஞ்சனையில்லாமல் எழுத்தாளர் வைரமுத்துவைப் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

இப்படிப் புகழ்மொழிகளை அள்ளி இறைப்பது மட்டுமே விமர்சனம் ஆகுமா?

கவிஞரின் சிறுகதைப் படைப்புகளில், சுட்டிக்காட்டும் அளவுக்கு எந்தவொரு குறையும் இல்லையா?

'வேதங்கள் சொல்லாதது’[26.01.2015 குமுதம்] - இது, குமுதத்தில் வெளியான வைரமுத்துவின் கதைகளில் ஒன்று.

நடே அய்யர் தனக்குச் சொந்தமான தென்னந்தோப்பை விற்பனை செய்கிறார். வாங்குபவரிடம், தோப்பில் உள்ள ஒரு காரை வீட்டைக் காட்டி, “இதுதான் தெய்வம் சயனம் பண்ணின இடம். பாதயாத்திரை போன பரமாச்சாரியார் தங்கி யக்ஞம் பண்ணி அருள்பாலித்த இடம் இதுதான். அவாள் தங்கிப்போன பெறகு ஸந்நிதானம் ஆயிடுத்து......நான் சொல்ற நிபந்தனை ஸட்டத்துல வராது. பரமாச்சாரியார்[தெய்வம்] தங்கியிருந்த இந்த ஸந்நிதானத்தை நீங்க ஸந்நிதானமாகவே பாதுகாக்கணும். செவ்வாய் விளக்குப் போடணும். பரமாச்சாரியாளுக்கு விரோதமான எதுவும் உள்ள பொழங்கப்படாது” என்ற நிபந்தனையையும் விதிக்கிறார்.

கதையின் இந்தவொரு ஆரம்பக் கட்டத்திலேயே நிகழ்ச்சியமைப்பில்  தவறு செய்திருக்கிறார் வைரமுத்து.

இந்த நிகழ்ச்சி, அதாவது, அய்யர் விதிக்கும் நிபந்தனை நடைமுறை சாத்தியமானதா? பரமாச்சாரியாரைத் தெய்வமாகப் போற்றும் ஒரு பிராமணர், எத்தனைதான் சோதனைகள் வந்தாலும் இந்த இடத்தை விற்பனை செய்வாரா? அப்படியே விற்றாலும் வாங்குபவர் ஏற்கமாட்டார் என்பதை அறியாதவரா? ஒருவேளை வாங்குபவர் ஏற்றாலும், அடுத்தடுத்து இத்தோப்பு கை மாறுகிறபோது, அடுத்தடுத்து வாங்குபவர்களும் ஏற்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? 

இப்படியொரு நிகழ்வைக் கவிஞர் ஏன் தேர்வு செய்தார்?

இதற்கான விடையைக் கதையின் முடிவில் அறிய முடிகிறது.

தோப்பைப் பராமரித்துவந்த காளியப்பனும்[பிராமணர் அல்லாதவர்] அவர் மனைவியும் குடியிருந்த குடிசை ஒரு பேய்மழையில் முற்றிலுமாய்ச் சிதைந்து போக, ’மகா பெரியவா’ தங்கி யக்ஞம் பண்ணிய வீட்டில் அவர்களைத் தங்க வைக்கிறார் தோப்பை விலை கொடுத்து வாங்கியவர். “என் முடிவை மகா பெரியவர் ஏற்றுக்கொள்வார். நடேச அய்யர் ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ, போகப் போகப் புரிந்துகொள்வார்” என்று அவர் சொல்வதாகக் கதையை முடிக்கிறார் வைரமுத்து.

‘பெரியவர் ஏற்பார்’ என்று வைரமுத்து சொல்வது எந்த அடிப்படையில்? அல்லது நம்பிக்கையில்? இப்படி ‘அவர்’ ஏற்றுக்கொண்டதற்கு முன்னுதாரணங்கள் உண்டா? யாரைத் திருப்திபடுத்த இப்படியொரு கதைக் கருவை வைரமுத்து தேர்ந்தெடுத்தார்?

இந்தக் கதையை வாசித்த சாதாரண வாசகனான என்னால் இப்படியொரு கேள்வியை எழுப்ப முடிகிறதென்றால், உரையாடலில் பங்கு பெற்ற ஐந்து அறிவுஜீவிகளில் ஒருவர்கூட அதைச் செய்யவில்லையே ஏன்?

ஊழல் வர்மனும் மூன்று மந்திரிகளும்’[குமுதம், 02.02.2015] என்றொரு சிறுகதை.

‘ஊழல் வர்மன்’ என்றொரு மன்னன்[‘வேதாளம் - விக்கிரமாதித்தன்’ கதை சொல்லும் பாணியில்] அவனிடம் துணை அரசன் பதவி பெறுவதற்காக, மூன்று ஊழல் அமைச்சர்கள், முறையே தண்ணீரையும் காற்றையும் ஒளியையும் விற்றுக் கோடி கோடியாய்ப் பணம் சேர்க்கிறார்கள்.

இவர்களில் சிறந்த ஊழல்வாதி யார் என்று வேதாளம் கேட்க, தவறான பதில் சொல்லித் தலை வெடித்துச் சாகிறான் விக்கிரமாத்த மன்னன்.

காலங்காலமாகக் கதைசொல்லிகள் மூலம் வாழ்ந்துகொண்டிருக்கும் விக்கிரமாத்தித்தனைச் சாகடித்த கவிஞர், கதையைக் கீழ்க்காணுமாறு முடிக்கிறார்:

‘தவறான விடை சொன்ன விக்கிரமாத்தித்தன் தலை வெடித்துச் செத்தான். [ஊழல்]மந்திரிகள் உயிரோடிருக்கிறார்கள்.’

வைரமுத்து இந்தக் கதை மூலம் வாசகனுக்குப் புதிதாக  உணர்த்துவது என்ன?

மந்திரிகள் என்ன, இன்னும் எத்தனை எத்தனையோ ஊழல் பெருச்சாலிகள் இம்மண்ணில் நிரந்தரமாய் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பது அனைத்து வாசகர்களும் மக்களும் அறிந்த ஒன்றுதானே?

கதையில் புதுமையில்லை; புரட்சியும் இல்லை என்பது உண்மை.

இந்த உண்மையை அறிவு ஜீவிகள் ஐந்து பேருமே  அறிந்திருக்கவில்லை என்பது பேராச்சரியம்!

இறந்த காலங்கள் இறந்தே போகட்டும்’[குமுதம், 16.03.2015] சிறுகதையில்.....

அடிவயிற்றில் வரிவரியாய் விழுந்திருந்த கோடுகளைப் [மணமகன் வீட்டுப் பெண்கள்]பார்த்தததன் விளைவு, மணப்பெண்ணான முத்துராணி நிராகரிக்கப்படுகிறாள். இச்செய்தி அண்டை அயலிலும் பரவியதால் வேறு யாரும் அவளை பெண்ணெடுக்க முன்வரவில்லை. மனம் நொந்து தற்கொலை செய்துகொள்கிறாள் முத்துராணி.

தவறான நடத்தையால் குழந்தை பெற்று அடிவயிறு சுருங்கி, வரிகள் விழவில்லை முத்துராணிக்கு. சிறு வயதில் கரம்பை மண்ணைத் தின்றதால் அவளுக்கு வயிறு பருத்துப்போனது. வைத்தியம் பார்த்ததில் வயிறு சுருங்க அடிவயிற்றில் கோடுகள் விழுந்தன.  இந்த உண்மை முத்துராணி இறந்த பிறகு ஆத்தாகாரியால் வெளிப்படுத்தப்படுகிறது.

முத்துராணியை முதலில் பெண்பார்க்க வந்தவர்கள் தவறான புரிதலால் அவளை நிராகரித்துப் போனாலும், பின்னர் பெண்பார்க்க வந்தவர்களிடம் இந்த உண்மையைக் கிழவி எடுத்துரைக்காதது ஏன்? அவள் சொல்லியும் மாப்பிள்ளை வீட்டார் ஏற்கவில்லையா? இவை பற்றிப் போதிய விளக்கம் சேர்க்கக் கவிஞர் மறந்தது ஏன்?

மகா தர்மர்’[02.03.2015] கதையில், முதன்மைக் கதைமாந்தர் இருவர். ஒருவர் ‘கதைப்பித்தன்’. மற்றொருவர் ‘மகாதர்மர்’. கதை, நிகழ் காலத்தது. கதைப்பித்தன் என்னும் பெயரும் நவீனமானது. ஆனால், மகாதர்மர் என்னும் பெயர் போதி தர்மர் காலத்ததுக்கு அழைத்துச் செல்கிறது. பெயர் சூட்டுவதில் கவிஞர்  நிலைதடுமாறியிருக்கிறார்?

கொஞ்ச நேரம் மனிதனாய் இருந்தவன்’[23.02.2015] என்னும் சிறுகதையில்.....

‘ஆற்றில் பெருக்கெடுத்து வரும் வெள்ளத்தில், ஊறி மிதந்து வருகிறது ஒரு பெண் பிணம். அதைக் கைப்பற்றிய காடையன், “புதுச்சீலடி...ஆத்துல வந்துச்சி. அலசிக் கட்டிக்க” என்று பெண்டாட்டியிடம் சீலயக் கொடுத்துட்டு நகைநட்டை மறைச்சிட்டான்’ என்பது ஒரு நிகழ்வு.

‘நகைநட்டை மறைச்சிட்டான்’ ...சரி, பிணத்தைச் சுற்றியிருந்த சேலையை உடுத்துக்கொள்ளச் சொல்வது...? உறுத்துகிறதே!

ஒரு சராசரி வாசகனுக்குப் புலப்படுகிற இம்மாதிரிக் குறைகள் அறிவுஜீவிகளான ஐவர் குழுவுக்குப் புலப்படாமல்போனது  ஏன் என்று புரியவில்லை.

வைரமுத்துவின் வேறு சில கதைகளிலும் சிறு சிறு குறைகள் தென்படவே செய்கின்றன..

வைரமுத்து சிறந்த கவிஞர்; தேர்ந்த நாவலாசிரியர்; உயரிய சிந்தனையாளர்; பக்குவப்பட்ட சிறுகதை ஆசிரியர் என்பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமே இல்லை. அவர் குமுதத்தில் எழுதிவரும் சிறுகதைகளில் குறை கண்டு அவர் பெற்றிருக்கும் புகழுக்கு மாசு கற்பிப்பதும் என் நோக்கமல்ல.

கலந்துரையாடிய பல்துறை அறிஞர்கள் முறையான விமர்சனப் போக்கைப் பின்பற்றவில்லை என்பதைச் சுட்டிக்காட்டவே இந்த ‘விமர்சனங்களுக்கான விமர்சனம்’.

கதை  நிகழ்வுகளில் உள்ள குறைகள் மட்டுமே இங்கு சுட்டிக்காட்டப்பட்டன. அவற்றின் பிற கூறுகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

நீட்சி அஞ்சி  இப்பதிவு  நிறைவு செய்யப்படுகிறது. இது முழுமையான ஒரு விமர்சனம் அல்ல; குறையற்றதும் அல்ல என்பதையும்  குறிப்பிடக் கடமைப்பட்டிருக்கிறேன்.

நன்றி.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


















1 கருத்து:

  1. நண்பரே,
    வைரமுத்துவுக்கு இலக்கியத்தில் எந்த இடமும் இல்லை. அவர் காவியங்கள் என்ற பெயரில் எழுதியவை யாவும், வெறும் வார்த்தை ஜாலங்களால் பின்னப்பட்ட மொக்கைக் சரக்குகள்தாம்.

    ஏதோ சினிமாவில் நான்கு பாடல்கள் எழுதிவிட்டார் என்பதற்காக, அவர் பெரிய அறிவுஜீவி ஆகிவிட மாட்டார்.

    பதிலளிநீக்கு