பிச்சைக்காரர்களைக் கண்டாலே எனக்குப் பிடிப்பதில்லை! அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பிச்சை எடுக்கவே தகுதி இல்லாதவர்கள்.
சிக்குப் பிடித்த தலைக்கு ஷாம்பு தேய்த்துக் குளிக்க வைத்து, காக்கி உடுப்பை மாட்டி, ஒரு நிறுவனத்தின் வாயிலில் மடக்கு நாற்காலி போட்டு உட்கார வைத்தால், ஒரு நாள் முழுக்க அவர்களால் தூங்கி வழியாமல் காவல் புரிய முடியும்.
எதிர்பாராத சூழ்நிலையில் அனாதையாக்கப்பட்டு, அடுத்த வேளைச் சோற்றுக்கே வழி இல்லாமல் பிறரிடம் கையேந்தப் போய், அப்புறம் அதுவே சவுகரியமாய்த் தோன்ற, அவர்கள் நிரந்தரப் பிச்சைக்காரர்களாக மாறுகிறார்கள்.
பிச்சைக்காரர்கள் வருவது தெரிந்தாலே, பார்வையைத் திசை திருப்பி, எவருடைய வருகையையோ எதிர்பார்ப்பதுபோல் பாவனை செய்வதில் நான் சமர்த்தன்!
கையேந்துகிறவன் தகுதி வாய்ந்த பிச்சைக்காரனாக இருந்தால் மட்டுமே ஒத்தை ரூபாய் [அது இல்லாவிட்டால், “சில்லரை இல்லை. போ...போ”] போடுவேன். அதற்கும், அரை நிமிட நேரமாவது, “மவராசரே, ரெண்டு நாளா பட்டினி. தானம் பண்ணுங்க தர்ம துரையே”ன்னு நின்று அடம் பிடிக்க வேண்டும்.
இவ்வகையில் ‘அதர்ம துரை’யான எனக்குப் பிச்சை போடுவதில் கொஞ்சம் நாட்களுக்கு முன்பு ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்தது.
கோவை சென்றுவிட்டு, ஊர் திரும்புவதற்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த போது, காலில் பிய்ந்த செருப்புக்கூட இல்லாமல், கோலூன்றிய ஒரு கிழவன் என்னிடம் கை நீட்டிச் சொன்னான்: “வெடுக்கு வெடுக்குன்னு நெஞ்சு வலிக்குது சாமி. கபகபன்னு எரியுது. ஆஸ்பத்திரி போவணும். நடக்கச் சத்தில்ல. ஆட்டோவில்தான் போவணும். ஒரு பத்து ரூபா கொடுத்தீங்கன்னா...” அவன் சொல்ல நினைத்த மிச்சத்தைக் கலங்கிய அவனின் கண்கள் சொல்லி முடித்தன.
அவனை 100% நம்பினேன்[நீங்களும் இது கதையல்ல என்று நம்பலாம்!]. பத்து ரூபாயை நான் நீட்ட, “ஏழெட்டு பேர்கிட்ட கேட்டேன். யாரும் என்னை நம்பிப் பணம் கொடுக்கல. நீங்க கொடுத்தீங்க. நீங்க கடவுள் மாதிரி” என்று குரல் தழுதழுக்கச் சொல்லி அகன்றான்.
நடக்கவே நடக்காது என்று நம்புகிற ஒன்று நடந்து முடிந்துவிட்டால் மனிதர்களுக்குக் கடவுள் நினைப்பு வந்துவிடுகிறது. முழுசா ஒரு பத்து ரூபாயை யாரும் பிச்சையாகக் கொடுக்க மாட்டார்கள் என்பது அந்தக் கிழப் பிச்சைக்காரனுக்குத் தெரியும்தான். இருந்தும் ஓர் அவசரத் தேவைக்காகக் முயற்சி செய்திருக்கிறான். எதிர்பாராதது நடந்தபோது அவனால் கடவுளைப் போற்றாமல் இருக்க முடியவில்லை.
இந்த நிகழ்வு முடிந்த சிறிது நேரத்தில் என் சிந்தனை வானில் ஒரு சிறு பொறி.
இன்னும் கொஞ்சம் பிச்சைக்காரர்களுக்குத் தலா பத்து ரூபாய் கொடுத்து, அவர்களிடம், “நீ கடவுளை நம்புகிறாயா?” என்று கேட்டால் அவர்களின் பதில்கள் என்னென்னவாக இருக்கும்?
அறிந்துகொள்ளும் ஆர்வம் என் நெஞ்சில் ‘சிக்’ என்று ஒட்டிக்கொண்டுவிட்டது.
அறிந்துகொள்ளும் ஆர்வம் என் நெஞ்சில் ‘சிக்’ என்று ஒட்டிக்கொண்டுவிட்டது.
பார்வையை அலைய விட்டதில், நரைத்த தலைமுடியும் காதில் பேசியுமாகத் தரையில் விரித்த துண்டின் மீது கால்கள் நீட்டி, சாலையோரம் ஒருவன் அமர்ந்திருப்பது தெரிந்தது.
அவனைக் கண்டுகொள்ளாதது போல் கடக்க முயன்றபோது, “ஐயா, தர்மம் பண்ணுங்க” என்று கும்பிட்டான்.
அவனிடம் பத்து ரூபாயை நீட்ட, தயக்கமாகப் பார்த்தான்.
“பத்து ரூபா. உனக்குத்தான் வெச்சிக்கோ. நான் கேட்கிறதுக்கு மட்டும் பதில் சொல்லு. நீ கடவுளை நம்புறியா?”
“நம்புறதா? உங்க உருவத்தில் எனக்குப் பத்து ரூபா தந்தது அந்தக் கடவுள்தாங்க” என்றான் அவன்.
இன்னும் ஒன்பது பேரிடம் இதே கேள்வியைக் கேட்பது என் திட்டம்.
சொந்த ஊர் திரும்பிய பின்னர், பேருந்து நிலையம், கடைவீதி, கோயில் என்று வேறு வேறு இடங்களில் வேறு வேறு சமயங்களில் பிச்சைக்காரர்களைத் தேடிப் பிடித்ததையோ, அவர்களுக்குப் பத்துப் பத்து ரூபாய் கொடுத்து, “கடவுளை நம்புகிறாயா?” என்று கேட்டதையோ விவரித்து உங்களைச் சலிப்படையச் செய்யாமல், அவர்கள் சொன்ன பதில்களைக் கீழே வரிசைப் படுத்துகிறேன்.
இரண்டு:
‘இப்படி உங்களைக் கேட்க வெச்சதே அந்தக் கடவுள்தாங்க.”
மூன்று:
“பிச்சைக்காரன் நான் ஒருத்தன் நம்பலேன்னா கடவுள் இல்லேன்னு ஆயிடுமா?”
நான்கு:
“கடவுளை நம்பாம வேற யாரை நம்புறது? சொல்லுங்கய்யா.”
ஐந்து:
‘கோயில் வாசலில் வெச்சி இப்படி ஒரு கேள்வி கேட்குறீங்களே, இது நியாயமுங்களா?”
ஆறு:
”நான் பிச்சை கேட்குறேன். நீங்க பிச்சை போடுறீங்க. இது எதனால? எல்லாம் அந்தக் கடவுளோட திருவிளையாடல்தானுங்க.”
ஏழு:
“இந்த நேரத்தில் நீங்கதாங்க எனக்குக் கடவுள்.”
எட்டு:
“காசேதான் கடவுளுங்க. அந்தக் கடவுளுக்கும் அது தெரியுமுங்க.” [கண்கள் சிமிட்டி, ராகம் போட்டுப் பாடுகிறான்].
ஒன்பது:
“நான் பத்து வருஷமா பிச்சை எடுக்கிறேன். பைசா முதலீடு இல்லாம தினமும் நூறு ரூபாய்க்குக் குறையாம சம்பாதிக்கிறேன். எல்லாம் கடவுள் கருணையாலதாங்க.”
ஒன்பதுபேருக்குப் பத்துப் பத்து ரூபா பணம் கொடுத்துப் பேட்டி எடுத்தாயிற்று. ஒருவர் மிச்சம் இருக்கிறாரில்லையா?
ஓர் உணவு விடுதி வாசலில், கிழிசல் பேண்ட் போட்ட ஒரு பிச்சைக்காரனைச் சந்தித்தேன். அவனுக்குப் பணம் ஏதும் கொடுக்காமல் கேள்வியை மட்டும் முன் வைத்தேன்.
“நீ கடவுளை நம்புறியா?”
“தானம் பண்ணுங்கய்யா.” -அவன்.
“நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுப்பா.”
“ஒத்த ரூபா பிச்சை போட வக்கில்ல. பெருசா கேள்வி கேட்க வந்துட்டே. போய்யா நீயும் உன் கடவுளும்” என்று சொல்லி முறைத்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டான் அவன்.
அவனின் திமிர்ப் பேச்சு எனக்குள் உறுத்தியது என்றாலும் கடவுளை, “உன் கடவுள்” என்று எனக்கே எனக்கு மட்டும் சொந்தமாக்கியது பிடித்திருந்தது.
=============================================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக