வியாழன், 19 மார்ச், 2015

‘சிடு சிடு’ குடும்பத் தலைவிகளுக்கு ஒரு ‘சுடு சுடு’ ‘சுருக்’ கதை!

கதைத் தலைப்பும் ‘சூடு’தான். எழுதி முடித்த சூட்டோடு வெளியிடுகிறேன்!


“ஏங்க, உங்களைத்தானே?

“சொல்லு.” வலைப்பூக்களை மேய்ந்துகொண்டிருந்த சேதுராமன் பார்வையை உயர்த்தாமலே சொன்னார்.

“நம்ம அகிலா எவனையோ காதலிக்கிற மாதிரி தெரியுதுங்க.” கனத்த கவலை சுமந்து சொன்னாள் கற்பகம்.

“ஏன் அப்படிச் சொல்லுறே?”

“நேரம் போறது தெரியாம செல்ஃபோனில் பேசிட்டிருக்கா.”
“ம்ம்ம்...”

“குழைஞ்சி குழைஞ்சி பேசுறா; ‘அடச்சீ...’ன்னு சொல்லி வெட்கப்பட்டுச் சிரிக்கிறா; நான் பக்கத்தில் இருக்கிறதையே மறந்துடுறா. அவன் என்ன ஜாதியோ தெரியல. நாம சம்மதிக்கலேன்னா ஓடிப்போய்க் கல்யாணம் கட்டிக்குவாளோன்னு சந்தேகமா இருக்குங்க.” படபடத்தாள் கற்பகம்.

கொஞ்சம் யோசனைக்குப் பிறகு அழுத்தம் திருத்தமான தொனியில் சொன்னார் சேதுராமன்: “அவ யாரையும் காதலிக்க மாட்டா; அப்படியே காதலிச்சாலும் கல்யாணம் பண்ணிக்க மாட்டா. கவலைப்படாதே.” 

“எதை வெச்சி இப்படிச் சொல்றீங்க?”

“சின்னச் சின்ன பிரச்சினைக்கெல்லாம், ‘உங்களைக் கட்டிகிட்டு என்ன சுகத்தைக் கண்டேன்’னு  மூக்கைச் சிந்துறது உன் வழக்கம். அகிலாவுக்கு விவரம் புரிய ஆரம்பிச்சதிலிருந்து இதைக் கவனிச்சிட்டு வர்றா. அம்மாக்காரி செஞ்ச தப்பை மகள் செய்வாளா என்ன?” சொல்லி முடித்து வலை வாசிப்பைத் தொடர்ந்தார் சேதுராமன்.

கவலை தோய்ந்த  முகத்துடன், தனி அறையில் செல்ஃபோன் பேசிக்கொண்டிருந்த மகளை நோக்கி நடந்தாள் கற்பகம்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக