செவ்வாய், 14 ஏப்ரல், 2015

சறுக்கியவர் யார்? புத்தரா, வைரமுத்துவா? [20.04.2015 குமுதம் சிறுகதைக்கான விமர்சனம்]

‘புத்தருக்கும் அடிசறுக்கும்’ என்பது வைரமுத்துவின் இந்த வாரக் குமுதம் கதை. இதை ‘உருவகக் கதை’[?] என்கிறது குமுதம். அதற்கும்  அடிசறுக்கியிருக்கிறது!
‘சங்கல்பன்’ என்பவனின் தந்தை ‘பிக்கு’வாக மாறுகிறார். இதற்குக் காரணமாக இருந்தவர் புத்தரே என்று எண்ணி அவரைப் பழிவாங்க எண்ணுகிறான் அவன்; பொது மக்களும்  சீடர்களும் சூழ்ந்து நிற்க, அறவுரை நிகழ்த்திக்கொண்டிருந்த புத்தரின் மீது கூர்மையான ‘கத்திக் கருங்கல்’லை வீசுகிறான். 

புத்தரின் புருவப்பொட்டைத் தாக்கிக் குருதியில் நனைந்து புத்தரின் மடியில் விழுந்த அந்தக் கல் தங்கக் கட்டியாக மாறுகிறது. “மகனே, என்னைத் தொட்டதும் கல் தங்கமாயிற்று. ஏனென்றால் நான் புத்தநிலை அடைந்துவிட்டேன்.....” என்று சங்கல்பனிடம் சொல்கிறார் புத்தர். 

இது, கதையின் முற்பகுதியில் இடம்பெறும் நிகழ்வாகும்.

ஒரு கல் தங்கக் கட்டியாக மாறும்  அதிசயம் எப்படி நிகழ்ந்தது?

‘ரசவாதம்’ என்கிறார் கதாசிரியர் வைரமுத்து.

‘புத்தரின் மடியில் கிடந்த கல் புத்தரின் குருதியில் நனைந்து மெல்ல மெல்ல ரசவாதம் கண்டது. கல்லின் கருவண்ணப் புள்ளிகளில் பொன்னணுக்கள் பூத்தன. சற்று நேரத்தில் மொத்தக் கருங்கல்லும் தங்கக் கட்டியாய் மாறித் தகதகத்தது...’ என்பன வைரமுத்துவின் வைர வரிகள்.

புத்தர் என்றுமே தம்மை ஒரு தேவன் என்றோ, கடவுளின் அவதாரம் என்றோ கூறிக்கொண்டதில்லை[விக்கிப்பீடியா]. நடைமுறை வாழ்வு பற்றியே சிந்தித்தவர். அவர் வாழ்க்கையில் இப்படியொரு ரசவாதம் நிகழ்ந்தது என்று சொல்லும் துணிவு கவிஞருக்கு எப்படி வாய்த்தது?

கல் வீசிய சங்கல்பனிடமே கல்லை ஒப்படைக்கிறார் புத்தர். அவன் கை பட்ட பிறகும்கூட அது, கல்லாக மாறாமல் தங்கக் கட்டியாகவே இருக்கிறதாம். உன் மனமாசு கழிந்து நீயும் புத்தனாகிவிட்டாய். அதனால்தான் உன் கை பட்ட பிறகும் கல் தங்கமாகவே ஜொலிக்கிறது” என்கிறாராம் புத்தர்.

புத்தர் ஒரு பகுத்தறிவாளர் என்கிறது வரலாறு. கவிஞரின் கற்பனை அவரை ஒரு ரசவாதியாக ஜொலிக்க வைக்கிறது.

இத்துடன் முடித்திருந்தால் இது ஓர் ஒரு பக்கக் கதையாக வடிவம் பெற்றிருக்கக்கூடும். அதைத் தவிர்க்கிறார் கதாசிரியர்.

இடையிடையே புத்தரின் சில போதனைகளுக்குப் புதிய விளக்கவுரைகள் தருகிறார்.

“நீங்கள் பிராமண துவேஷியா?” என்று கூடியிருந்தவர்களில் ஒருவரைக் கேள்வி கேட்க வைக்கிறார்; “நான் எல்லா உயிர்களுக்கும் விசுவாசி” என்று புத்தரைப் பதில் சொல்ல வைக்கிறார். ஆமாம்...சொல்ல வைக்கிறார், தான் சொல்ல நினைத்ததை!

கதை நீளுகிறது.

கையில் மூட்டையுடன் ஓடி வருகிறான் ஓர் அழுக்கு மனிதன். அவனைத் திருடன் என்று சொல்லி ஓர் ஊர் மக்கள் விரட்டி வருகிறார்கள். 

அவனுக்குப் புகலிடம் தந்த புத்தர், “திருடனும் மனிதன்தான். மனிதனை மனிதன் கொல்வதற்கு அதிகாரம் இல்லை” என்கிறார்; ஜடாமுடியுடன் இருந்த அந்தத் திருடன்தான் தன் மீது கல் எறிந்த சங்கல்பன் என்பதையும் அறிகிறார்.

அவன் வைத்திருந்த மூட்டையில் தங்கக் கட்டி இருப்பதையும் காண்கிறார். தான் திருடனல்ல என்று சங்கல்பன் உறுதியளித்த பின்னர், தங்கக் கட்டியைப் புத்தர் தம் கையால் எடுக்க, அது கல்லாக மாறுகிறது.

இது, கதையில் நிகழ்ந்த இரண்டாவது ரசவாதம். இது நிகழ்ந்ததற்கான காரணத்தைப் புத்தர் வாயிலாகச் சொல்கிறார் கவிப்பேரரசு.

“நான் இவனைத் திருடன் என்று தவறாக நினைத்ததால் புத்தர் என்ற நிலையிலிருந்து திரிந்தேன். என் மனம் மாசு பட்டது. தங்கக் கட்டி கல்லாக மாறியது.”

புத்தர் ஒரு மனிதராகப் பிறந்து மனிதராகவே வாழ்ந்து மறைந்தவர்; தெய்வ நம்பிக்கை அற்றவர். ரசவாதம், மாயாஜாலம் போன்ற வித்தைகளை அறியாதவர். அவர் வாழ்க்கையில் ரசவாத அதிசயங்கள் நிகழ்ந்ததாகக் கதாசிரியர் கற்பனை செய்து கதை படைத்திருக்கிறார்.

இந்தப் படைப்பு, புத்தருக்குப் பெருமை சேர்க்கவில்லை; அவரை இழிவுபடுத்துகிறது.

புத்தர் மறைந்த பிறகு, அவர் வகுத்த வழியில் செல்வதாகச் சொல்லிக்கொண்டவர்கள் அவரையே கடவுளாக்கினார்கள். அந்த மூடர்களைக்கூட மன்னிக்கலாம்; அவரை ஒரு ரசவாதி ஆக்கிய வைரமுத்துவை மன்னிக்கவே முடியாது.

வைரமுத்து என்னை மன்னிப்பாராக.

=============================================================================================

பிழைகளுடன்[இரண்டு இடங்களில் ‘சருக்கி...’] பதிவைத் தமிழ்மணத்தில் இணைத்த எனக்கும் அடிசறுக்கிவிட்டது!!

‘சறுக்கியது யார்?’ என்பதும் பிழையே; ‘சறுக்கியவர் யார்?’ என்பதே சரி.

=============================================================================================





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக