'பிரபஞ்சத் தோற்றம்' குறித்து ஆழ்ந்து சிந்தித்தால், 'ஏதும் புரியவில்லை' என்பது புரியும். தோற்றுவித்தவர் கடவுள் என்பது வெறும் அனுமானம்தான்!

Friday, May 6, 2016

பாரு பாரு...குஜராத்தைப் பாரு! குருட்டுத் தமிழா பாருடா!!

ருத்துவ நுழைவுத் தேர்வுக்கு மாநிலங்கள் பலவும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன; எதிர்ப்பதற்கான காரணங்களையும் சொல்லியிருக்கின்றன.

‘கடந்த 9 வருடங்களாக நுழைவுத் தேர்வே இல்லாததால் மாணவர்கள் தேர்வுக்குத் தயாராகவில்லை. 2009இல் மருத்துவக் கவுன்சில் கொண்டுவந்த சட்டத்திருத்தம், தமிழகத்தில் செல்லாது என, சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது என்று சட்டம் உள்ளதால், அதற்குப் பதிலாக நாடாளுமன்றம் சட்டம் கொண்டுவந்தால் மட்டுமே தமிழக அரசின் சட்டத்திற்குத் தடை ஏற்படும்’ என்பது தமிழக அரசின் வாதம்[தினகரன், மே 6, 2016].

நாடாளுமன்றம் சட்டம் இயற்றுமேயானால் இந்த அரசு என்ன செய்யும்? அதை எதிர்க்குமா, இல்லை, மறுப்பேதும் சொல்லாமல் நுழைவுத் தேர்வை ஆங்கிலம் அல்லது இந்தியில் நடத்தச் சம்மதிக்குமா?

குஜராத் அரசின் வாதம் இக்கேள்விகளுக்கெல்லாம் இடம்தரவே இல்லை. ‘எங்கள் மாநிலத்தில் குஜராத்தி மொழியில்தான் அனைத்து மாணவர்களும் கல்வி பயிலுகின்றனர். இந்தி அல்லது ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்று உத்தரவிட்டதால் எங்கள் மாணவர்கள் கலக்கத்தில் உள்ளனர். எனவே, எங்கள் மாநிலத்திற்கு விலக்களிக்க வேண்டும்[தினகரன், மே 6, 2016]’ என்று அடித்துச் சொல்லியிருக்கிறது.
“தமிழ் வழியில் படித்தால் மத்திய அரசில் வேலை கிடைக்காது. இந்தி அல்லது ஆங்கில வழியில் பயில வேண்டும்” என்று சொல்லித் திரிபவர்கள் நாம். சோத்துக்கும் சுகபோக வாழ்வுக்கும் தாய்மொழியைப் புறக்கணிப்பவர்கள் நாம். நம்போன்றவர்கள் அல்லர் குஜராத்திகள்.

நடுவணரசின் அனைத்துத் துறைப் பணிகளுக்குமான நுழைவுத் தேர்வுகளைத் தங்கள் தாய்மொழியாம் குஜராத்தியில் நடத்த வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கிறார்கள்; சாதித்தும் இருக்கிறார்கள்.

‘ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பி.இ. பி.டெக் படிக்க வேண்டுமெனில் ஜேஇஇ என்ற நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கான நுழைவுத்தேர்வு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது . இதற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வழக்கமாக இத்தேர்வுக்கான கேள்வித்தாள் ஆங்கிலத்திலும், இந்திலும் மட்டுமே இருக்கும். ஆனால், இம்முறை குஜராத்தி மொழியிலும் தேர்வெழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.’ -இது 2015இல் தினசரிகளில் வெளியான தகவல். இவ்வறிவிப்பை எதிர்த்தும் ஆதரித்துக் கருத்துகள் வெளியாயின. அவற்றை விவரிப்பது இங்கு தேவையற்றது.

“தாய்மொழி வழியில் கல்வி பயின்றால் குண்டுச்சட்டியில் குதிரை ஓட்ட வேண்டியதுதான்” என்று குஜராத்திகள் சொல்வதில்லை. தாய்மொழியைப் போற்றும் அவர்கள் பிறமொழி பயில்வதற்கும் தயக்கம் காட்டியதில்லை. அயல்நாடுகளில் பணிபுரிகிறார்கள்; தொழில் செய்கிறார்கள்; வணிகத் துறையில் கோலோச்சுகிறார்கள்.

கிரிக்கெட் விதிகளை வகுப்பது இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் (http://www.lords.org) நிர்வாகம். அந்தத் தளத்தில் கிரிக்கெட் குறித்த சட்டங்கள் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதே சமயத்தில் பிறமொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. அம்மொழிபெயர்ப்புகளில் இடம்பெற்றிருக்கும் ஒரே ஒரு இந்திய துணைக்கண்ட மொழி 'குஜராத்தி'! இந்தி அல்ல; குஜராத்தி! இங்கிலாந்தில் வாழும் குஜராத்திய மக்களின் மொழிப்பற்றின் வெளிப்பாடு இது!

குஜராத்திகள் [மலையாளிகளும்தான்] நம்மைப்போல் மேடை மேடையாக முழங்க மாட்டார்கள். ஆனால், செயல்பாடுகள் உச்சத்தில் இருக்கும். அவர்களிடமிருந்து தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஆக்கபூர்வமான செயல்பாடுகள் இன்னும் எவ்வளவோ உள்ளன.

இன்னும் எழுதலாம். பயணம் மேற்கொள்ளவிருப்பதால் இத்துடன் முடிக்கிறேன்.

தங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி.
===============================================================================


No comments :

Post a Comment