தேடல்!


Feb 14, 2017

மானசீகமாய் நான் செருப்படி வாங்கிய கதை!!! [24.04.2013இல் வெளியானது]

உண்மை நிகழ்வைக் கதையாக்கியிருக்கிறேன். வாசிக்கும் சகோதரிகள் என்னைச் சபிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். நன்றி!
[நன்றி: கூகிள்]
நிறை மாதக் கர்ப்பிணியாய் ஊர்ந்துகொண்டிருந்த அந்த நகரப் பேருந்தில் நான் நின்றவாறு பயணித்துக்கொண்டிருந்தேன்.

அந்த அழகிய இளம் பெண்ணின் முதுகுப் பக்கம் அவன் பல்லி போல ஒட்டிக்கொண்டிருந்தான். அசிங்கமான சேட்டைகள் வேறு.

ஓரிரு முறை அவனைத் திரும்பிப் பார்த்தாள் அவள். கொஞ்சமாய் முகம் சுழித்ததோடு சரி. அவளுக்குப் ’பயந்த சுபாவமோ?’ என்று நினைத்தேன்.

‘இருவரும் காதலர்களாகவோ மிக நெருங்கிய பந்தம் உள்ளவர்களாகவோ இருக்கலாமே’ என்றது என் உள் மனசு.

“டிக்கெட்...டிக்கெட்...” - நடத்துனர்.

இருவரும், தனித்தனியே சில்லரை நீட்டினார்கள்.

என் சந்தேகம் அகன்றது. அவள் நிச்சயம் பயந்த சுபாவம் கொண்டவள்தான் என்ற முடிவுக்கு வந்தேன்.

“ஏம்ப்பா, கொஞ்சம் தள்ளி நில்லேன். பொண்ணு நிற்கிறது தெரியல?” என்றேன், சற்றே உரத்த குரலில்.

அவன் என்னை முறைத்தான்; “தெரியுது. நான் ஒன்னும் தப்பா நடந்துக்கல. உன் வேலையைப் பாரு” என்று சிடுசிடுத்துவிட்டு, நல்ல பிள்ளையாய் ஓரடி பின்வாங்கி நின்றான்.

பத்துப் பதினைந்து நிமிடம்போல, பயணம் தொடர்ந்தது.

எனக்குரிய நிறுத்தம் வந்ததும் நான் இறங்கினேன். அந்தப் பெண்ணும் இறங்கினாள்.

நன்றி சொல்வாள் என்ற எதிர்பார்ப்புடன், நடையின் வேகத்தை மட்டுப்படுத்தி, என் பின்னால் வந்துகொண்டிருந்த அவளைத் திரும்பிப் பார்த்தேன்.

அவள் முகம் ‘கடுகடு’ என்றிருந்தது. நன்றி சொல்வதற்குப் பதிலாக, உதட்டளவில் ஏதோ முணுமுணுத்துக்கொண்டு என்னை முறைத்துப் பார்த்தாள்; வேகமாகக்  கடந்து போனாள்.

நனைத்த பழைய செருப்பால், என் இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி யாரோ அடிப்பது போலிருந்தது!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++