மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மனித நேயத்தை ஊட்டி வளர்த்தால்...சாதி, மதம், கடவுள் ஆகியவற்றின் தேவை முற்றிலும் ஒழியும்.

Monday, February 20, 2017

உலகின் ஆகச் சிறந்த முட்டாள் திராவிடனே என்பது ‘கின்னஸ்’ சாதனைப் புத்தகத்தில் பதிவு!!!

கடவுள் உருவமற்றவர்; விருப்புவெறுப்பு இல்லாதவர் என்று பறை சாற்றும் மதவாதிகளும் ஆன்மிக மேதாவிகளும் பெருகிவரும் மூடத்தனங்களைக் கண்டிப்பதே இல்லை! 

‘16 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ தங்கம், வெள்ளி இழைகளால் செய்யப்பட்ட தர்மாவரம் பட்டு வேட்டி மற்றும் பட்டு அங்க வஸ்திரத்தைக் கடப்பா[ஆந்திர மாநிலம்] பக்தர் ஒருவர் திருப்பதி ஏழுமலையானுக்குக் காணிக்கையாக அளித்தார். இது உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தது’ என்பது இன்றைய செய்தி[தி இந்து, 20.02.2016].

இவை வேனில் ஏற்றப்பட்டு ஆந்திர மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டதாம். வேனில் இருந்த தறி மூலம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு[மூடநம்பிக்கை வளர்ப்பில் நம்பர் 1] உட்பட 60 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று ‘ஓம் நமோ நாராயணா’ என்பதை அங்கவஸ்திரத்தில் நெய்தார்களாம்!

ஒரு சந்தேகம், இவர்கள் ஏன் இத்தனை பத்தாம்பசலிகளாக இருக்கிறார்கள்? இது அதி நவீன நவநாகரிக யுகம் ஆயிற்றே. தங்கம் மற்றும் வெள்ளி இழைகளால் செய்யப்பட்ட பேண்ட் - சட்டையை ஏழுமலையானுக்குக் காணிக்கை ஆக்கியிருக்கலாமே.

பதினாறு லட்சம் ரூபாய் இங்கே பக்தியின் பெயரால் வீணடிக்கப்பட்டிருக்கிறது. விசேட நாட்களில், ஆண்டுக்கு ஒரு முறையோ இரு முறையோ இந்த வேட்டி, அங்கவஸ்திரத்தை ஏழுமலையான் சிலைக்குச் சுற்றி, கோயிலை வலம் வந்து, வெறுமனே வாய் பிளந்து வேடிக்கை பார்ப்பதற்கா இத்தனை செலவு?

இம்மாதிரி ஆடம்பரக்களைத் தவிர்த்துக் கடவுளை வழிபட்டால் அவரின் அருள் கிட்டாதா? மனம் அமைதி பெறாதா?

நாள் முழுக்க உழைத்தும் முழு வயிற்று உணவுக்கு வழியின்றி அல்லல்படும் ஏழைகளுக்கு இத்தொகையைக் கொடுத்து உதவியிருந்தால் ஏழுமலையான் கோபித்துக்கொள்வாரா?

கடப்பா பக்தரைப் போன்றவர்கள் இம்மாதிரி மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடுவது எப்போது? இவர்களை விடுபடாதவாறு தடுத்துக்கொண்டிருக்கும் ஆன்மிக ஞானிகளைக் கண்டிப்பார் யாருமில்லையா? அவர்களைத் தண்டிக்கவும் வழி இல்லையா? 

இவை இப்போதைக்கு விடை கண்டறிய இயலாத கேள்விகள்!
===============================================================================


No comments :

Post a Comment