'பிரபஞ்சத் தோற்றம்' குறித்து ஆழ்ந்து சிந்தித்தால், 'ஏதும் புரியவில்லை' என்பது புரியும். தோற்றுவித்தவர் கடவுள் என்பது வெறும் அனுமானம்தான்!

Sunday, March 19, 2017

புத்தன் ஞானம் பெற்றது...ஒரு வரலாற்றுப் பிழை!

ஆறறிவு படைத்தவர் அனைவரும் மனிதர்களே. மரபு மற்றும் வாழும் சூழ்நிலை காரணமாகச் சிந்திக்கும் திறன் கூடவோ குறையவோ செய்யலாம். ஞானிகள், அவதாரங்கள் என்று எவரும் இல்லை.
கவுதம புத்தன் அரச குலத்தில் பிறந்து, அளப்பரிய சுகபோகங்களை அனுபவித்து வாழ்ந்தவன். அதிலிருந்து விடுபட்டு, எளிய மக்களின் வாழ்க்கை அவலங்களை எதிர்கொள்ள நேரிட்டபோது கடும் அதிர்ச்சிக்கு உள்ளானான். அந்த அதிர்ச்சி அவனை ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டியது.

துன்பங்களுக்கான காரணங்களைக் கண்டறிவதற்காகக் கானகங்களில் அலைந்தான்;வைசாலியில் தங்கியிருந்த அலாரர் என்பவரிடம் பாடங்களைக் கேட்டறிந்தான். பின்னர் இராஜகிரகத்தில தங்கியிருந்த ஆசிரியரான உருத்திரிகா என்பவரிடம் சீடராக அமர்ந்தான். அவருடைய போதனை புத்தனை வெகுவாகக் கவரவில்லை. எனவே அவரை விட்டு விலகிச் சென்றான்.

சுயமாகச் சிந்தித்தான்;  எங்கெல்லாமோ அலைந்து திரிந்துகொண்டே சிந்தித்தான்; இடம் பெயராமல் இருந்த இடத்தில் இருந்துகொண்டே சிந்தித்தான்; ஊண் உறக்கமின்றிச் சிந்தித்தான். துன்பங்களுக்கான மூலகாரணங்கள் ஒவ்வொன்றாகப் புரிய ஆரம்பிக்கின்றன.

துன்பங்களிலிருந்து விடுபட.....

‘ஆசையைத் துறக்க வேண்டும்’ என்ற உண்மையை ஒரு நாள் உணர்ந்திருப்பான். இது போதி மரத்தடியில் நிகழ்ந்திருக்கலாம் 

‘உயிர்வதை கூடாது’ என்னும் அறநெறியைப் பிறிதொரு நாள் உய்த்துணர்ந்திருப்பான். இது, வேம்பு போன்ற வேறொரு மரத்தின்கீழ் நிகழ்ந்திருக்கக்கூடும்.

‘அழுக்காறு வேண்டாம்’ என்னும் உயர் நெறியை ஓராண்டு கழித்து அவன் ஆராய்ந்து அறிந்திருக்கக்கூடும். இந்த நீதி, ஓடும் ஆற்று நீரில் குளித்துக்கொண்டிருக்கும்போது அவன் சிந்தனையில் மலர்ந்திருக்கலாம்.

‘தீமை புரிய வேண்டாம்; நல்லதே நினை; செய்' என்பன போன்ற பல அறநெறிகளைச் சிந்தித்து அறிவதற்குச் சில ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கலாம். இந்த எண்ணம், தீச்செயல் புரிவோரை நினைவுகூர்ந்தபோது மனதில் அரும்பியிருக்க வாய்ப்புள்ளது.

ஆக, புத்தன் சொன்ன அறவுரைகளும் வகுத்தளித்த வாழ்க்கை நெறிகளும் குறிப்பிட்ட ஓரிடத்தில், குறிப்பிட்ட சில/பல நாட்களில்  அவனால் அறியப்படுவதும் உணரப்படுவதும் சாத்தியம் அல்ல என்பது அறியத்தக்கது. 

//கயாவில் உள்ள போதி என்ற இடத்தில் ஒரு மரத்தின் கீழ் 49 நாட்கள் தவம் இருந்து ஞானம் பெற்றார் புத்தர்// [wikivisually.com/lang-ta/wiki/கௌதம_புத்தர்].  

//தனது 35ஆம் வயதில், இந்தியாவின் தற்போதைய பீகார் மாநிலத்தில் உள்ள கயை எனும் இடத்தில் சுமேதை என்பவளிடம் மோர் வாங்கிக் குடித்துவிட்டு போதி மரத்தினடியில் அமர்ந்த சித்தார்த்தர், ஞான நிலை அடையும் வரை அந்த இடத்தை விட்டு எழுந்திராமல் நிகழ்வுகளைக் கவனிப்பது என தீர்மானித்தார். ஒரு வாரம்[?] தனது மிக நுண்ணிய கவனிப்பின் பலனாக முதன் முறையாகக் கவலைக்கும், துன்பத்திற்குமான காரணம் பற்றியும், தான் முதன் முறையாக மிக மகிழ்ச்சியாக அப்போது இருப்பதையும் உணர்ந்தார்// -விக்கிப்பீடியா

//49 நாட்கள் தொடர்ந்து தியானத்தில் இருந்த கௌதமருக்கு ஞானோதயம் கிடைத்தது. ஞானோதயம் கிடைத்தப் பின்னர், இணக்கமான மற்றும் சீரான வாழ்விற்கு வழிகாட்டகூடிய சமயபோதனைகளையும், உபதேசங்களையும் போதித்தார்// -etamilwin.blogspot.com/2015/04/blog-post_21.html

என்றிவ்வாறான பல நம்பிக்கைகள் இன்றளவும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன. போதி
மரத்தடியில் புத்தனுக்கு ஞானம் பிறந்தது என்ற இந்த நம்பிக்கை உலகெங்கிலும் உள்ள மக்கள் 
மனங்களில் ஆழமாக விதைக்கப்பட்டுவிட்டது.

ஞானம்’,  அரிதாக வெகு சிலருக்கு மட்டுமே வாய்ப்பது’ என்பதான ஒரு நம்பிக்கையும், 
காலங்காலமாக மக்கள் மனங்களில் திணிக்கப்பட்டு வருகிறது. இவை  முற்றிலுமாய் 
அகற்றப்படவேண்டியவை. 

ஆறறிவு படைத்த அனைவரும் மனிதர்களே. மரபு மற்றும் வாழும் சூழ்நிலை காரணமாகச் சிந்திக்கும் திறன் கூடவோ குறையவோ செய்யலாம். ஞானிகள், அவதாரங்கள் என்று எவரும் இல்லை.
===============================================================================

8 comments :

 1. அறிவுப்பூர்வமான சிந்தனை அருமை நண்பரே

  ReplyDelete
  Replies
  1. மனம் திறந்த பாராட்டுரைக்கு நன்றி கில்லர்ஜி.

   Delete
 2. அருமையான கருத்து.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் பாராட்டுரைக்கு மிக்க நன்றி வேகநரி.

   Delete
 3. Replies
  1. மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 4. அருமையான கருத்து நண்பரே

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு நன்றி நண்பரே.

   Delete