வியாழன், 13 ஏப்ரல், 2017

கடவுளைக் காண ‘சூஃபி ஞானி’ காட்டும் வழி!!!

'தம்மை எந்த வரன்முறைக்கும் உட்படுத்தாத மனோநிலையும் இதன் வெளிவீச்சான சொல்லும் செயலும் கொண்டவர்கள்தான் சூஃபிகள்’ என்கிறார்கள். ‘இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றியதோடு முற்போக்குச் சிந்தனைகளுடன் ஆன்மிகம் வளர்த்தவர்கள் சூஃபி ஞானிகள்’ என்ற கருத்தும் உண்டு.  

சூஃபிகள், சூஃபியிஸம், சூஃபி இயக்கம் என்பன குறித்துப் பலரும் பலவிதமான விளக்கங்கள் தருகிறார்கள். இவை குறித்த ஆய்வு இங்கு தேவையற்றது. படியுங்கள்.
#ந்த சூஃபி ஞானி மலையின்மீது சிறிய குடில் அமைத்து வாழ்ந்து வந்தார். மாதம் ஒரு முறை மலை அடிவாரத்தில் இருந்த கிராமத்திற்கு வந்து போவார்.

அன்று அவர் வந்தபோது ஒரு மனிதன் அவரைச் சந்தித்தான்; “ஞானியே, இதுவரை என்னால் கடவுளைக் காணவே முடியவில்லை. உங்களால் காட்ட முடியுமா?” என்றான்.

“நிச்சயமாக. நான் சொல்வதை நீ செய்தால் அது சாத்தியம்” என்றார் சூஃபி.

“சொல்லுங்கள்.”

“நான் மலையிலுள்ள என் வீட்டைச் சுற்றித் தாழ்வாரம் ஒன்றை அமைக்க நினைக்கிறேன். அதற்கு ஒரே அளவு எடையுள்ள ஐந்து சதுரக் கற்கள் தேவை. எடுத்துவந்து எனக்கு உதவுவாயா?” என்றார்.

சம்மதித்தான் அவன்.

சூஃபி மலைமீது ஏற, அவனும் கற்களைச் சுமந்துகொண்டு அவரைப் பின்தொடர்ந்தான்

சிறிது தொலைவு சென்றவுடனே களைத்துப் போனான். அதை அறிந்த சூஃபி, “ஒரு கல்லைக் கீழே போட்டுவிடு” என்றார்.

மலைப் பயணம் தொடர்ந்தது.

நான்கு கற்களைச் சுமந்து சென்ற அவன் மீண்டும் உடல் சோர்ந்தான்.

“இன்னொரு கல்லைக் கீழே போடு” என்றார் சூஃபி.

மூன்று கற்களுடன் சென்ற அவனுக்கு மீண்டும் மூச்சு வாங்கியது. “இன்னொரு கல்லையும் கீழே போடு” என்றார் ஞானி.

இரு கற்களுடன் சென்ற அவனுக்கு உடல் சோர்வு நீடீக்கவே, அடுத்தடுத்து எஞ்சியிருந்த கற்களையும் கீழே போட்டுவிட்டுத் தன்னைப் பின்தொடரச் சொன்னார் சூஃபி ஞானி. அவனும் புத்துணர்ச்சியுடன் அவர் பின்னால் சென்றான்.

மலை உச்சியை அடைந்ததும் சூஃபி சொன்னார்: “கடவுளைக் காண்பதும் மலை ஏறுவது போல்தான். கடவுளைக் காண நீ ஐந்து சுமைகளை வீசி எறிய வேண்டும். இந்த ஐந்து கற்களும் ஐந்து சுமைகளைக் குறிக்கின்றன. அவை, உன்னுடைய கோபம், பேராசை, பற்று, அகந்தை, காமம் ஆகியவை. இந்த ஐந்து சுமைகளையும் நீ தூக்கி எறியக் கற்றுக்கொள். அப்புறம் எந்தச் சிரமும் இன்றி நீ கடவுளைக் காணலாம்#

இந்தச் சுவாரசியமான கதையைப் படித்துச் சொக்கிப் போனீர்களா?

“ஆம்” என்றால் நீங்கள் இன்னும் இன்னும் இன்னும் கொஞ்சம் கூடுதலாகச் சிந்தித்தல் தேவை.

கோபம், தாபம், பற்று, அகந்தை, காமம் எனப்படும் ஐந்து சுமைகளையும் முற்றிலுமாய்[100%]த் தூக்கி எறிந்துவிட்டு வாழ்தல் என்பது சாத்தியமே இல்லை; இந்த மண்ணில் அவ்வாறு வாழ்ந்து காட்டியவர் எவருமே இல்லை. வாழ்ந்ததாகச் சொல்வது அப்பட்டமான பொய். கற்பனைக் கதைகளிலும் இதிகாச புராணங்களிலும் மட்டுமே அப்படிப்பட்டவர்களைக் காண இயலும்.

ஞானி சொன்னவாறு மேற்குறிப்பிடப்பட்ட ஆசாபாசங்களைத் துறந்தால்.....

கடவுளைக் காண முடியுமா?

முடியும் என்றால், கடவுள் என்ன வடிவத்தில்/ கோலத்தில் காட்சி வழங்கி அருளுவார்? என்ன மொழி பேசுவார்? எட்ட நின்று பேசுவாரா, தொட்டுத் தடவிக் கொஞ்சிக் குலாவுவாரா?

வைக்கும் கோரிக்கைகளை அப்போதே நிறைவேற்றுவாரா, இல்லை, தவணை முறையிலா?

மேற்கண்டவற்றில்,  கொஞ்சமே கொஞ்சம் மிச்சம் வைத்துப் பெருமளவில் துறந்து வாழ்ந்தவர்களுக்கு, தன் திருப்பாதங்களையேனும் காணும் பேற்றை நல்குவாரா எல்லாம்  வல்ல இறைவன்?

“கடவுளைக் காண முடியும்...முயன்றால் முடியும்” என்கிறார்கள். 

நாம் ஏன் முயல வேண்டும். அனைத்தையும் படைத்தவன் அவனே என்றால், கருணை வடிவானவன் என்றால் படைத்த அவனுக்கு உயிர்களின் தேவைகள் எவை என்பது தெரியாதா? அவற்றை நிறைவேற்றுவது அவன் கடமை அல்லவா?

அவனுக்கு உணர்ந்து தெளிவதற்கான புலன்கள் இல்லையா? ஆராய்ந்து அறிவதற்கான பேரறிவு இல்லையா?

அப்புறம் எதற்கு அவனைக் காண முயற்சிப்பது?

கண்டு மெய்சிலிர்த்து ஆனந்தக் கண்ணீர் சிந்தி விரல் சூப்பி நிற்பதற்கா?!

“கடவுளைக் காட்ட முடியுமா?” என்று கேட்ட அப்பாவி மனிதனை ஆற்று நீரில் அமுக்கி மூச்சுத் திணற வைத்து, “முயன்றால் கடவுளைக் காணலாம்” என்று சொன்ன இந்துமத ஞானியின் கதை[‘கடவுளைக் காட்டிய மகான்?!?! http://kadavulinkadavul.blogspot.com/2012/08/58.html நாடறியும். அந்தக் கதைக்கும் இந்தச் சூஃபியின் கதைக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை.

ஆக, ஒருதலைப்பட்சமாகக் கதைகள் சொல்லி மக்களை முட்டாள்களாக்கும் அத்தனை மதவாதிகளும் ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள்தாம் என்பதில் எள்முனையளவும் ஐயத்திற்கு இடமில்லை!
===============================================================================

கதை இடம்பெற்ற நூல்: ‘சூஃபி கதைகள்’, சங்கர் பதிப்பகம், வில்லிவாக்கம், சென்னை - 600 049; முதல் பதிப்பு: 2010.

*இந்நூலில் அறிவுபூர்வமான பயனுள்ள கதைகளும் உள்ளன. கடவுள் தொடர்பானது என்பதால் இக்கதையை மட்டும் கையாண்டுள்ளேன்.


6 கருத்துகள்:

  1. //ஆக, ஒருதலைப்பட்சமாகக் கதைகள் சொல்லி மக்களை முட்டாள்களாக்கும் அத்தனை மதவாதிகளும் ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள்தாம் என்பதில் எள்முனையளவும் ஐயத்திற்கு இடமில்லை!// ஆம் நண்பரே. மிக சரியாக சொன்னீர்கள்.
    இந்த முட்டாள் தன மாயயையில் மூழ்கி மூளை மழுங்கி கிடக்கும் இருக்கும் கடவுள் நம்பிகளை திருத்த இன்னும் பல பெரியார்கள் தேவை.

    பதிலளிநீக்கு
  2. தன்னைப் போல் பிறரை நேசித்தால் போதும்...

    பதிலளிநீக்கு
  3. கடவுளைக் காண்பது என்பது
    ஏழைகளுக்கு
    உதவும் உள்ளங்களில் தான்...

    பதிலளிநீக்கு