மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மனித நேயத்தை ஊட்டி வளர்த்தால்...சாதி, மதம், கடவுள் ஆகியவற்றின் தேவை முற்றிலும் ஒழியும்.

Monday, April 10, 2017

"விகடன் ஒழிக!”...விகடனின் ஆயுள்கால வாசகன் கதை!!!

ஆனந்த விகடனில் என் படைப்பு வெளியாக வேண்டும் என்பது என் ஆயுள்கால ஆசை. அது நிறைவேறாத விரக்தியில் விகடனில் வெளியான ஒரு கதையை நக்கலடித்து எழுதப்பட்டது இந்தக் கதை. விகடனாருக்குப் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் எப்போதோ எழுதிய இந்தப் ‘பழைய சரக்கை’  மீண்டும் பதிவு செய்கிறேன்.
குப்புச்சாமி, சன்னலோர இருக்கையில் அமர்ந்தவாறு நகரப் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தான்.

அவன் கையில் ‘ஆனந்த விகடன்’ இருந்தது.

அவன் ஒரு ‘விகடப்பித்தன்’.

படித்து முடித்த பிறகும் கையில் விகடனோடுதான் அலைவான். அது கையில் இருப்பது ‘அறிவு ஜீவி’களுக்கான அடையாளமாம்!

வெளியே வேடிக்கை பார்த்து வந்தவனின் கவனத்தை, முன் இருக்கையிலிருந்த இரு இளம் பெண்களின் உரையாடல் ஈர்த்தது.

“என்னவோ தெரியல. இப்போ எல்லாம் நான் அடிக்கடி கோபப்படுறேன். உப்புப் பொறாத விசயத்துக்கெல்லாம் அடாவடியாப் பேசி அடுத்தவங்க மனசை நோகடிக்கிறேன். அப்புறம் கொஞ்ச நேரத்துலயே அதுக்காக வருத்தப்படுறேன்” என்று வருத்தத்துடன் சொன்னாள் சன்னலோர இருக்கைக்காரி.

“கோபம்  வர்ற மாதிரி தெரிஞ்சா ஒன்னு ரெண்டு மூனு எண்ண ஆரம்பிச்சுடு. ஐம்பது எண்ணுறதுக்குள்ள அதெல்லாம் இருந்த இடம் தெரியாம போயிடும்” என்றாள் அவளோடு இருந்தவள்.

“அதையும் பார்த்துட்டேன். பலனில்ல.”

அந்த முன்கோபக்காரியின், ‘முக்கால் நிலா’ வடிவத்தில் தெரிந்த அழகிய முதுகையும், வெண் சங்குக் கழுத்தையும், இரு ‘பளீர்’ காதுகளின் பின்புறங்களையும் ஆராய்ந்தான் குப்புச்சாமி.

ஏமாற்றம் அவனை ஆரத் தழுவியது.

அவளின் மேற்சொன்ன அழகுப் பிரதேசங்களில் ஒரு மச்சம், மரு, தழும்பு என்று எதுவுமே இல்லை.

தன் முகத்தைச் சற்றே முன்னுக்கு நகர்த்தி, “கோபத்தை விரட்டியடிக்க நான் வழி சொல்லட்டுமா?” என்றான் குப்புச்சாமி.

சடக்கெனத் திரும்பிய இரு பெண்களும் அவனை ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.

முன்கோபக்காரி, “சொல்லுங்க சார்” என்றாள், ஏராள எதிர்பார்ப்புகளுடன்.

“உங்க உடம்பில் மச்சம், மரு, தழும்புன்னு எதுனாச்சும் இருக்கும் இல்லியா? கோபம் வரும்போது அதுல ஒன்னை வருடிக் கொடுங்க. சில நேரம் ரத்தம் வர்ற வரைக்கும்கூடத் தேய்க்க வேண்டியிருக்கும். அப்புறம் பாருங்க, கோபம் மாயமாய் மறைஞ்சுடும்” என்றான் குப்பு. [இனி, ’குப்பு’ என்றே செல்லமாக அழைப்போம்].

“அப்படியா!” என்று வியப்பின் எல்லைவரை சென்று திரும்பிய அவள், “என் உடம்பில் இதுல ஒன்னுகூட இல்லீங்க. என் அம்மாகூட நீ அதிசயப் பிறவியடின்னு அடிக்கடி சொல்வாங்க. சார், ஒரு சந்தேகம். எனக்கு வேண்டப்பட்டவங்களோடதைத் தடவலாமா?”

“அது வந்து.....” என்று குப்பு ஏதோ சொல்ல முயற்சிக்கையில், பின்னாலிருந்து ஒருவர், “கோபத்தைப் போக்க இப்படியொரு வழி இருக்கா? சார், நீங்க மச்ச மரு ஜோதிடரா?” என்று கேட்க, பேருந்து முழுக்கப் பெருத்த சிரிப்பலை பரவி அடங்கியது.

"கவலையை மறக்கவும் இப்படி எதையாவது தடவலாமா?” என்றார் ஒரு பழங்கிழம்.

ஓர் இளவட்டம், “பொண்ணுகளை ‘சைட்’ அடிக்காம இருக்கவும் இது உதவுமா?” என்றான்.

இப்படி, ஆளாளுக்குக் கேள்விக் கணை தொடுக்க, ஒட்டு மொத்த பஸ் பயணிகளும் நக்கலாய்ச் சிரித்தார்கள்; நினைத்து நினைத்துச் சிரித்தார்கள்; குப்புவை ஓரக் கண்ணால் பார்த்துப் பார்த்துச் சிரித்தார்கள்.

அவமானத்தால் தலை குனிந்தான் குப்பு.

அடுத்த நிறுத்தத்திலேயே இறங்கிக் கொண்டான்.

இப்போதும் தலை குனிந்தே நடந்தான்.

எதிர்பாராதவகையில் ஒரு பெண்ணின் மீது மோதிவிட்டான்; அவள் மார்பகத்தின் மீது அழுத்தமாகத் தன் கரம் பதிந்துவிட்டதை அறிந்து அதிர்ந்தான்.

“ஏண்டா பொறுக்கி, என்ன தைரியம் இருந்தா, பட்டப் பகலில், பொது இடத்தில், தாலி கட்டியவன் கண் முன்னால, ஒரு வயசுப் பொண்ணு மேல கை வைப்பே?” என்று அவள் கணவன் சீற, ‘ எதிர்பாராம நடந்த தப்புக்குப் பொறுக்கின்னு சொல்லிட்டானே’ என்ற நினைப்பால் மனதில் கடுங் கோபம் முகிழ்ப்பதை உணர்ந்த குப்பு, அவசரமாக, தன் பின்புறக் கழுத்தில் இருந்த மருவை வருட முற்பட்டான்.

இவன் முயற்சி முழுமை பெறுவதற்குள், இவனைக் கீழே தள்ளி, உருட்டிப் புரட்டி எடுத்துவிட்டான் அவன்.

சுதாரித்து எழுந்த குப்பு, அவன் மீண்டும் தாக்குதலுக்குத் தயாராவதை அறிந்து, “சார், நான் வேணுன்னு செய்யல. நான் சொல்வதைக் கேளுங்க. அதுக்கு முந்தி, உங்க உடம்புல இருக்கிற ஏதாவது ஒரு மருவையோ மச்சத்தையோ தழும்பையோ தடவுங்க. அழுத்தி அழுத்தித் தேய்ங்க” என்றான். அவன் இவனை வினோதப் பிறவியாகப் பார்க்க, “மெண்டல் மாதிரி தெரியுது. வாங்க போகலாம்” என்று அந்தப் பெண் அவனை இழுத்துக்கொண்டு போனாள்.

வேதனையின் உச்சத்தைத் தொட்டிருந்தான் நம் குப்பு.

அந்த வேதனையிலிருந்து விடுபடக் கழுத்து மருவைத் தடவிக்கொண்டே வீடு போய்ச் சேர்ந்தான்.

வேதனை குறையவில்லை. அதற்குச் சற்று நேரம் பிடிக்கும் என்று தன்னைச் சமாதானப் படுத்திக் கொண்டான்.

“என்னடா உடம்பெல்லாம் வீங்கிக் கிடக்கு? யார் அடிச்சது? டாக்டரிடம் போலாம்” என்றாள் அவன் அம்மா.

“எதுவும் பேசாதே. சும்மா கிட. மருவை ரத்தம் வர்ற வரைக்கும் தேய்ச்சிட்டே இருந்தா எல்லாம் சரியாயிடும்” என்று சொன்ன மகனைக் கவலையோடு பார்த்தாள் அவன் தாய்.

அவனுக்குப் புத்தி பேதலித்துவிட்டதாக நம்பினாள்.

அவனிடம் கெஞ்சிக் கூத்தாடிச் சம்மதிக்க வைத்து, ஒரு மனநோய் மருத்துவரிடம் அழைத்துப் போனாள்.

மருத்துவரிடம் மனம் திறந்தான் குப்பு.

“ஆனந்த விகடன் அ.வெண்ணிலா எழுதின ஒரு சிறுகதை படிச்சித்தான் இந்த நிலைக்கு ஆளானேன்” என்றான்.

“சிறுகதை படிச்சா? புரிகிற மாதிரி சொல்லு” என்றார் மருத்துவர்.

தான் எழுதிய கதையில், “எனக்குக் கோபம் வந்தா என்ன செய்யறதுன்னு தெரியாது. வேறு எதுவும் செய்ய முடியாத நிலையில், என் காதுக்குப் பின்புறம் இருக்கும் மருவை வருடுவேன்; சொறிவேன். ரத்தம் வரும். என் கோபத்துக்கு நிவாரணம் என் ரத்தம்’னு ஒரு பெண் சொல்லுறதா வெண்ணிலா எழுதியிருக்காங்க.

ஒரு நட்சத்திர எழுத்தாளர் இப்படிச் சொல்லுறது நிஜமாத்தான் இருக்கும்னு நினைச்சேன்; விகடன் ஆசிரியர் குழுக்காரங்களும் இதை டெஸ்ட் பண்ணிப் பார்த்துட்டுத்தான் கதையைப் பிரசுரம் பண்ணியிருப்பாங்கன்னும் நம்பினேன்.....

.....நேத்துத்தான் கதை படிச்சேன். இன்னிக்கே என் வாழ்க்கையில் சோதிச்சிப் பார்த்துட்டேன். பலன்? பட்டது போதும் டாக்டர்” என்று சொல்லி முடித்தான் குப்பு.

“கதையில் பாராட்டிச் சொல்லும்படியா எதுவும் இல்லையா?” என்றார் டாக்டர்.

”பாராட்டுற மன நிலையிலா நான் இருக்கேன்? இருந்தாலும் சொல்றேன்.........

ஒரு பள்ளியில், பத்தாம் வகுப்புப் படிக்கிற பொண்ணுகளுக்கு அங்க அடையாளம் குறிக்கப் போறதா அறிவிச்சதும், அந்த வகுப்புப் பொண்ணுக பண்ணுற அலப்பறையைத்தான் கதை முழுக்க விவரிச்சிருக்காங்க பிரபல கதாசிரியை அ.வெண்ணிலா.

கடைசியில் அஞ்சாறு பத்தியில், கணவருடனான கருத்து வேறுபாட்டில், மனம் வேதனைக்குள்ளானதையும், அதை மறக்க, மருவை வருடிச் சொறிந்து புண்ணாக்கிக் கொள்வதையும் வாசகர் மனதில் பதியும்படி சொல்லியிருக்காங்க.

கதையின் இந்த இறுதிக் கட்டம் மனசில் ஆழமாப் பதிஞ்சிடிச்சி.

பத்தாம் வகுப்புப் பொண்ணுக அடிக்கிற லூட்டியும் ரசிக்கும்படியா இருக்கு.

அப்புறம் வேறென்ன, சொல்ல வேண்டியதைத்தான் சொல்லிட்டேனே? இப்போ எனக்கு வர்ற கோபத்தில் ‘விகடன் ஒழிக. வெண்ணிலா ஒழிக’ன்னு கத்தணும் போல இருக்கு” என்றான் குப்பு.

“வேண்டாம். உன் கழுத்து மருவை லேசா வருடிக் கொடு, போதும்” என்று சொல்லிச் சிரித்தார் மனநல மருத்துவர்.
===============================================================================

8 comments :

 1. விகடன் ஒழிக!!! நிச்சயமாக நடக்காது இருந்தாலும் நம்பிக்கையில்....

  ReplyDelete
  Replies
  1. நம்பிக்கையில்தானே நாட்களை நகர்த்துகிறோம்.

   நன்றி வலிப்போக்கன்.

   Delete
 2. அனைவருக்கும் பிடிக்கும்...

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்குப் பிடித்திருக்கிறதே, அதுவே எனக்குப் பெரு மகிழ்ச்சி தனபாலன்.

   Delete
 3. ஆஹா கதையை வைத்து எழுதிய கதை சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. முரளியின் மனம் திறந்த பாராட்டுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

   Delete
 4. ஒரு நல்ல கதையை வெளியிடாத விகடன் ஒழிக

  ReplyDelete
  Replies
  1. வாசகரை ஈர்ப்பதற்காக விகடனைக் கிண்டல் செய்கிறேனே தவிர, விகடனில் என் கதை ஏற்கப்படாதது குறித்து வருத்தம் ஏதுமில்லை. அவர்கள் எதிர்பார்க்கிற ‘தரம்’ என் படைப்புகளில் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.

   ‘நல்ல கதை’ என்று பாராட்டும் தங்களின் நல்ல மனதுக்கு என் நன்றி.

   Delete