மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மனித நேயத்தை ஊட்டி வளர்த்தால்...சாதி, மதம், கடவுள் ஆகியவற்றின் தேவை முற்றிலும் ஒழியும்.

Saturday, April 8, 2017

சிலை வழிபாடும் விவேகானந்தரும் நானும்!

“சிலைகளை[விக்கிரகங்களை] வணங்கும் பக்தர்கள் தங்கள் மனதில் இறைவனுக்கு என்ன வடிவம் கொடுக்கிறார்களோ, அதையேதான் வழிபடுகிறார்கள்” என்கிறார் விவேகானந்தர். இவ்வாறு அவர் சொன்னதன் பின்புலமாக ஒரு நிகழ்வும் சொல்லப்படுகிறது[’விவேகானந்தர் கதைகள்’, ஹர்ஷவர்த்தினி பப்ளிகேஷன்ஸ், மேற்கு மாம்பலம், சென்னை; பதிப்பு: 2010].
‘ஆல்வார்’ என்பது ஒரு சமஸ்தானமாக இருந்தது. அதன் மன்னர் ஒருமுறை விவேகானந்தரைச் சந்தித்தார்; அவரை ‘மகா புருஷர்’ என்றும் கேள்விப்பட்டிருந்தார்.

“விக்கிரக ஆராதனை பற்றி என்ன நினக்கிறீர்கள்” என்று விவேகானந்தரிடம் கேட்டார் அவர்.

“முற்றிலும் சரியே” என்றார் விவேகானந்தர்.

“விக்கிரக ஆராதனை சரியானது என்று நான் நினைக்கவில்லை. காரணம் ஆராதனையின்போது எனக்குப் பக்தி உண்டாவதில்லை” என்றார் மன்னர்.

விவேகானந்தர் யோசித்தார்; சுவரில், மன்னரின் ஓவியம் மாட்டப்பட்டிருப்பது கண்ணில் பட்டது. மன்னருடன் இருந்த திவானை அழைத்து, “நான் ஒன்று சொல்வேன். செய்வீர்களா?” என்றார்.

“கண்டிப்பாக” என்றார் திவான்.

“உங்கள் மன்னருடைய சித்திரத்தின்மீது எச்சில் துப்புங்கள்.” -இது விவேகானந்தர்.

“என்ன காரியம் செய்யச் சொன்னீர்கள்?” என்று பதறினார் திவான்.

“அது வெறும் ஓவியம்தானே? சும்மா துப்புங்கள்” என்றார் ஞானி.

“சுவாமிஜி, அது வெறும் ஓவியம்தான். ஆனால், அது எங்கள் மன்னரின் பிரதிபிம்பம். அவர் மீது எப்படி எச்சில் துப்ப முடியும்?” என்றார் திவான்.

“விக்கிரக ஆராதனையும் இது போல்தான். கடவுளை நம்பும் பக்தர்கள், கடவுளின் பிரதிபிம்பமான சிலையை வணங்குகிறார்கள். இதில் தவறேதும் இல்லை” என்கிறார் சுவாமி.

அவரின் விளக்கத்தைக் கேட்டுப் பரவசப்பட்டு, மன்னரும் பிறரும் மெய் சிலிர்த்தார்களாம். 

இந்தக் கதையை வாசித்தபோது[கதைதான்!] எனக்கு மெய் சிலிர்க்கவில்லை.

காரணம்.....

விவேகானந்தர் செய்த ஒப்பீடு முழுமையானதல்ல; தவறானதும்கூட.

சுவரில் இருந்த சித்திரம், மன்னரைத் தன்  கண்களாலும் பார்த்த ஒருவரால் வரையப்பட்டது. அதை மன்னரின் பிரதிபிம்பம் என உணர்தல் சாத்தியம். ஆனால், கோயில்களில் வடிக்கப்பட்டுப் பக்தர்களால் வணங்கப்படும் சிலைகள் கடவுளை அல்லது கடவுள்களைப் பார்த்துச் செதுக்கப்பட்டவை அல்ல. அவை அத்தனையும் புராண இதிகாசங்களில் இடம்பெற்ற கற்பனைப் பாத்திரங்கள்.

கற்பனையில் வடிவமைக்கப்பட்ட சிலைகளைக் கடவுளின் பிரதிபிம்பம் என்று சுவாமியவர்கள் சொன்னது ஏற்கத்தத்தக்கதன்று.

ஒப்பீடுகள் மூலமோ அனுமானங்கள் வாயிலாகவோ பலராலும் நம்பப்படும் கடவுளின் ‘இருப்பை’ உறுதிப்படுத்துதல் அத்தனை எளிதல்ல; ஏன்? எப்படி? எப்போது? என்பன போன்ற கேள்விகளை முன்வைத்து ஆழ்ந்து  சிந்திப்பதன்  மூலமே அது சாத்தியப்படக்கூடும்.

வெறும் நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாக் கொண்டு, கடவுளின் பிரதிபிம்பங்களை அனுமானிப்பதும், விதம்விதமாய் வகைவகையாச் சிலைகளை வடிவமைத்து வழிபடுவதும் வரையறையற்ற மூடநம்பிக்கைகளின் பெருக்கத்திற்கு வழி வகுக்கும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

8 comments :

 1. கடவுளும் மின்சாரம்போல பார்த்து உணர முடியாது என்று கதை அளப்பார்கள் :)

  ReplyDelete
  Replies
  1. இப்படிக் கதை கதையாய்ச் சொல்லித்தான் மூடநம்பிக்கைகளைக் கணக்குவழக்கில்லாமல் மக்கள் மனங்களில் விதைத்துவிட்டார்கள்.

   நன்றி பகவான்ஜி.

   Delete
 2. //இந்தக் கதையை வாசித்தபோது[கதைதான்!] எனக்கு மெய் சிலிர்க்கவில்லை.//
  எப்படி மெய் சிலிர்க்கும்? ஒப்பீடே தவறாக இருக்கும் போது.
  இப்படி தான் விவேகானந்தரே செல்லிட்டாரே, அவர் சொன்னால் சரியாக தான் இருக்கும் அல்லது அவர் சொன்னால் மறுக்க கூடாது, என்பதால் தான் மூடநம்பிக்கைகள் பெருகுகின்றன.
  உங்கள் விளக்கம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. //இப்படி தான் விவேகானந்தரே செல்லிட்டாரே, அவர் சொன்னால் சரியாக தான் இருக்கும் அல்லது அவர் சொன்னால் மறுக்க கூடாது, என்பதால் தான் மூடநம்பிக்கைகள் பெருகுகின்றன//

   உண்மை. மக்கள் எப்போது திருந்துவார்களோ?!

   நன்றி நண்பரே.

   Delete
 3. கல்லை வணங்கினாலும்
  சிலையை வணங்கினாலும்
  கடவுளை நினைப்பவருக்கே
  கடவுள் அருள் கிட்டும்!

  ReplyDelete