மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மனித நேயத்தை ஊட்டி வளர்த்தால்...சாதி, மதம், கடவுள் ஆகியவற்றின் தேவை முற்றிலும் ஒழியும்.

Thursday, April 6, 2017

பணி ஓய்வா? ஐய்யய்யோ.....!!! [சிரிப்பூட்டும் உண்மைக் கதை]

ம்பது வயதிற்குப் பிறகு, மனிதனின் முதுமைப் பருவம் ஆரம்பமாகிவிடுகிறது. எனினும், பதவியிலிருந்து ஓய்வு பெறும்போதுதான், தனக்கு வயதாகிவிட்டதையும், அந்திம காலத்தை நோக்கிய பயணம் தொடங்கிவிட்டதையும் ஒருவன் முழுமையாக உணர்கிறான்.

ஓய்வுக்குப் பிறகு, எதேச்சையாக எதிர்ப்படும் ஓர் அழகுப் பெண்ணை ‘வெறுமனே’ ரசிக்கும்போதுகூட, உள்மனம் உறுத்தும்! “உன் வயசென்ன?” என்று  கேட்டு மனசாட்சி நகைக்கும்!!

வாலிபப் பருவத்துக் கனவுகள், குறும்புகள், அடித்த கொட்டங்கள் எல்லாம் இனி ‘நினைவு கூர்தலில்’ மட்டுமே சாத்தியம் என்பதை உணரும்போது மனதில் இனம் புரியாத வலி பரவும்.

வயது ஏற ஏற  வாடிக்கையாய் எதிர்கொள்ளும் நோய்கள்;  உறக்கத்தை விரட்டும் மரண பயம்; ஒதுங்கிப் போகும் உறவுகள்; சரிவடையும் குடும்ப மரியாதை என்று எதை எதையோ எண்ணித் தன்னைத்தானே வருத்திக் கொள்ளத் தொடங்குகிறான் ஓய்வு பெற்றவன்.

இது போதாதென்று, வெந்த புண்ணில் வேல் சொருகும் சொந்தபந்தங்களின் விசாரிப்புகள்.

நான் ஓய்வு பெற்ற போது, என்னையும் இம்மாதிரி 'விசாரிப்புகள்’ பாடாய்ப்படுத்தின. அந்த அனுபவங்களைப் பல முறை அசை போட்டதன் விளைவு இந்தக் கதை. சுவைபடச் சொல்லியிருப்பதாக எண்ணுகிறேன். கதையின் முடிவு  உங்களை ஒரு முறையேனும் புன்னகை செய்யத் தூண்டும் என்று நம்புகிறேன்.

சின்னஞ்சிறு கதைதான். படியுங்கள்.
கதையின் பெயர்:                   அப்புறம்.....

ரசாங்கத்தில் ஓய்வு கொடுத்தாலும் கொடுத்தான், என்னால் வெளியே தலைகாட்ட முடியவில்லை.

எனக்குத் தெரிந்தவன், என்னைத் தெரிந்தவன் என்று எதிர்ப்பட்ட அத்தனை பேரும், “அப்புறம்.....” என்று தொடங்கி வாக்கியத்தை முடிக்காமல், என்  ரிட்டையர்மெண்ட் பற்றி என்னைப் புலம்பவிட்டு ரசிக்கக் காத்திருப்பார்கள்.

நான் உஷாராகி, “சொல்லுங்க” என்று சொல்ல, வேறு வழியில்லாமல், “ரிட்டையர் ஆயிட்டீங்க. பொழுது போகாதே. இனி என்ன செய்யப் போறீங்க?” என்று துக்கம் விசாரிப்பதுபோல் ‘கை நீட்டாத’ குறையாகக் கேட்பார்கள்.

“பொழுது அதுவா போகுமா என்ன? நெம்புகோல் போட்டு நாமதான் தள்ளணும்” என்று நான் அடிக்கும் கடி ஜோக்குக்குக் கொஞ்சமும் சிரிக்காமல் அறிவுரை வழங்குவார்கள்.

“மார்க்கெட் போயிக் காய்கறி வாங்கணும். பேரக் குழந்தைகளைக் குளிப்பாட்டி விடணும். அவங்களை ஸ்கூல் பஸ்ஸுக்கு அனுப்பறது; கூட்டிட்டு வர்றது; பாடம் சொல்லித் தர்றது; கதை சொல்றதுன்னு அவங்க தேவைகளை நீங்களே நிறைவேத்தணும். உங்களுக்குப் பொழுதும் போயிடும். வீட்டுப் பொம்மணாட்டிகளுக்கு உதவி செஞ்ச மாதிரியும் இருக்கும். உங்ககிட்டே மரியாதையும் காட்டுவாங்க. அப்புறம்....”

அவர்களிடமிருந்து தப்பிச் செல்ல ஏதேனும் பொய்யுரைப்பது எனக்குப் பழக்கமாகிப் போனது.

“ரிட்டையர் ஆனபோது நாலஞ்சி லகரம் கிடைச்சிருக்குமே?  ஏதாவது ஒரு சிறு தொழில் ஆரம்பிச்சுடுங்க. வங்கிகள்ல கடனும் வாங்கிடலாம்” இப்படி ஆலோசனை வழங்கியவர், அரசாங்க உத்தியோகத்தில் நோகாமல் சம்பளம் வாங்குகிறானே என்று என் மீது பொறாமை கொண்டிருந்த என் சொந்தக்காரர்.

ஆறு பெத்தா அரசனும் ஆண்டியாவான்னு சொல்லுவாங்க. நான் நாலு பெத்தேன். ஓய்வுக்காலப் பலன்னு கிடைத்த பணத்தையெல்லாம் இந்த நான்கு புத்திரிகளும் தட்டிப் பறித்தது, நெருங்கிய உறவுக்காரரான இவருக்குத் தெரியாமல் இருக்காது.

“என்ன தொழில் செய்யலாம். சொல்லுங்க” என்ற போது, அப்புறம் சந்திப்பதாகக் கழன்று கொண்டார்.

“நாலு ஆட்டோ வாங்கி விடுங்க. எனக்குத் தெரிஞ்ச டீலர் இருக்கார். அறிமுகப்படுத்தறேன்” என்று பரிந்துரைத்தவர், எங்கள் தெருமுனையில் பெட்டிக்கடை போட்டிருந்த அண்ணாசாமி. போட்டியாய்க் கடை திறந்துவிடுவேனோ என்ற பயம் அவருக்கு.

“பேசாம மணிக்கூண்டுப் பக்கம் ஒரு பெட்டிக்கடை திறந்துடுங்க.நல்லாப் போகும்.” -இது  நான் வேலை பார்த்த அலுவலகத்தில் என்னிடம் திட்டு வாங்கிய தட்டச்சர்.

இப்படியாக, பலரும் என்னை ஓட ஓட விரட்டிப் புத்திமதியும் இலவச ஆலோசனைகளும் வழங்கியதில் நான் நொந்து நூலாகிப் போனேன்.

இந்தத் தொல்லையிலிருந்து விடுதலை பெற வழியே இல்லையா?

ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் மூளையைக் கசக்கியதில் ஒரு வழி பிறந்தது.

அதற்கப்புறம் நான் யாரைக் கண்டும் ஓடி ஒளிந்ததில்லை.

நானே வலிந்து சென்று, “ஹலோ” சொல்லிக் குசலம் விசாரித்தேன்.

“அப்புறம்.....” என்று அவர்கள் ஆரம்பிப்பதற்கு முன்னால் நானே பேசலானேன்.

“”நான் ரிட்டையர் ஆயிட்டேங்க. மத்தவங்களைப் போல வீட்டோட முடங்கிக் கிடக்க என்னால் முடியல. நிராதரவான ஏழைக் குழந்தைகளுக்காக ஒரு அனாதை விடுதி ஆரம்பிக்கிறேன். உங்க மாதிரி நல்ல மனசுக்காரங்களை நம்பிக் காரியத்தில் இறங்கிட்டேன்.....” என்று நான் சொல்லி முடிப்பதற்குள்ளாக, “அவசர வேலையாய்ப் போய்ட்டிருக்கேன். அப்புறம் சாவகாசமாய்ப் பேசுவோம்” என்று கழன்று கொள்கிறார்கள்.

நான் கிளப்பிவிட்ட இந்தப் பொய் வெகு வேகமாகச் சொந்தபந்தங்களிடையே பரவ, அவர்கள் என்னை எதிர்ப்பட நேரும்போது, கண்டும் காணாதது போல், திசை மாறிப் போய்விடுகிறார்கள்!

அப்புறமென்ன, அதிகாலை நடைப் பயிற்சி;  காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு நண்பர்களோடு சீட்டுக் கச்சேரி; பகலில் குட்டித் தூக்கம்; மாலையில் சம வயதுக் கிழடுகிண்டுகளுடன் பூங்காவில் அரட்டை தர்பார்; முன்னிரவில் தொ.கா.; அப்புறம் உறக்கம் வரும்வரை படிப்பு. அப்புறம்.....

ஓய்வுக்கால வாழ்க்கை ரொம்ப ஜாலிதான் போங்க!

**********************************************************************************************************************
2013இல் எழுதியது.

8 comments :

 1. இரசித்தேன் நண்பரே பிரச்சனையை கண்டு துவலாமல் பிரச்சனைகள் நம்மைக் கண்டு ஓடுவதுபோல்...

  பிளேடுகளே... நம்மை பிளேடு என்று மிரண்டு ஓடும் யோசனைதான்

  ReplyDelete
  Replies
  1. பெரிதும் ரசித்தமைக்கும் மனம் திறந்து பாராட்டியமைக்கும் நன்றி நண்பரே.

   Delete
 2. ஓய்வுக்கால வாழ்க்கை
  எப்படி இருக்க வேணுமென
  அழகாய் சொன்னீர்கள்

  ReplyDelete
 3. உங்க நல்ல சிரிப்பு கதை. இப்படியான இலவச அறிவுரை வழங்குகிறேன் என்று தங்கள் மனவக்கிரகத்தை தீர்த்து கொள்பவர்கள் ஊரில் நிறைய உண்டு.
  //ஓய்வுக்குப் பிறகு எதேச்சையாக எதிர்ப்படும் ஓர் அழகுப் பெண்ணை ‘வெறுமனே’ ரசிக்கும்போதுகூட உள்மனம் உறுத்தும்! “உன் வயசென்ன?” என்று கேட்டு மனசாட்சி நகைக்கும்!!// ?!
  பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் தனது 56வது வயதில் தனது முன்னாள் காதலியை திருமணம் செய்ததாக அறிந்திருக்கிறேன்.அவர்கள் தான் விஐபிக்கள் விடுங்கோ.ஆனால் நான் வேலைபார்க்கும் நிறுவனத்தில் ஒரு குரூப் தலைவர்- (team leader) மனைவியை விவாகரத்து செய்து விட்டு இருந்தவர், 50 வயதிற்க்கு பின் தான் தன்னை விட வயது குறைந்த ஒரு பெண்ணை காதலித்து 2வது திருமணம் செய்து கொண்டவர்.

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுரைக்கும் சுவையான சம்பவங்களைக் அறியச் செய்தமைக்கும் மிக்க நன்றி வேகநரி.

   Delete