'பிரபஞ்சத் தோற்றம்' குறித்து ஆழ்ந்து சிந்தித்தால், 'ஏதும் புரியவில்லை' என்பது புரியும். தோற்றுவித்தவர் கடவுள் என்பது வெறும் அனுமானம்தான்!

Friday, May 12, 2017

ஏழுமலையானின் ஒரு நாள் ‘சாப்பாட்டு மெனு’!!! [ஜொள்ளு விடாமல் படியுங்கள்]

அதிகாலை: வெண்ணெய், நுரை ததும்பும் பசும்பால்.

கூடவே, எள்ளும் சுக்கும் வெல்லமும் கலந்த பானகம் ஒரு கப்[பெரிய கோப்பை]

காலை 06 - 06.30: புளியோதரை, தயிர்ச்சாதம், வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், ரவா கேசரி[ஆனியன் ஊத்தாப்பம், மசாலா ரோஸ்ட், சோலாபூரி ஆகியவையும் இனி சேர்க்கப்படும்].

முற்பகல் 11.00 - 11.30: வெண்சாதம், சர்க்கரை அன்னம், புளியோதரை, கூடை அன்னம்.

மாலை 07.00 மணி: மிளகு அன்னம், தோசை, லட்டு, வடை[உளுந்து வடை அல்லது மசால் வடை], பல்வகைக் காய்கறிகளும் சேர்த்துச் சமைக்கப்பட்ட அன்னம்.

கொஞ்சமே கொஞ்சம் நேரம் கழித்து, ‘திருவீசம்’ என்னும் பெயரில் வெல்லம் கலந்து தயாரிக்கப்பட்ட அன்னம்.

சயன அறைக்குச் செல்வதற்கு முன்: நெய்யில் மிதமாக வறுக்கப்பட்ட பாதாம், முந்திரி, பழங்கள், பால்[கலப்படமில்லாத ஆவின்].

கொழுத்த இந்தச் சாப்பாட்டு மெனு திருப்பதி ஏழுமலையானுக்கானது[உபயம்: ‘தி இந்து’ நாளிதழ், 12.05.2017].
இப்போது ஏழுமலையான் மீது பொறாமை கொள்கிறீர்களா? வேண்டவே வேண்டாம்.  ‘நைவேத்தியம்’ என்னும் பெயரால் அவருக்குப் படைக்கப்படும் இந்தச் சத்துணவு அவரின் பசியைப் போக்க அல்லவாம். [கடவுளுக்கும் ‘பசி’க்குமா?!]

சொல்பவர் திருமலை திருப்பதி தேவஸ்தான பிரதான அர்ச்சகர் ரமண தீட்சிதர்; ‘The Sacred Foods of God' என்னும் ஆங்கில நூலை எழுதியவர். [தமிழிலும் வரவிருக்கிறதாம். “வேண்டாமய்யா, வேண்டாம்!”]

இந்த ஒவ்வொரு நாளுக்குமான படையல் திருமலையானின் பசியைப் போக்குவதற்கு அல்ல என்றால் வேறு எதற்கு? உணவுகளைப் புனிதப்படுத்திப் பக்தர்களுக்கு விநியோகிக்கிறார்களா? இப்படிக் கொஞ்சம் உணவு வகைகளை மட்டும் புனிதப்படுத்தினால் போதுமா? மக்கள் உண்ணுகிற மற்ற உணவுப் பொருள்களைக் கடவுள் படைக்கவில்லையா? அவை அனைத்தும்  புனிதமற்றவையா? அவற்றைப் புனிதப்படுத்தவிருப்பது யார்?

இவ்வாறான கேள்விகளை ‘தி இந்து’ நிருபர் கேட்கவில்லை; தீட்சிதரும் பதில் சொல்லவில்லை. 

ஆகம விதிகளின்படி பிரசாதங்கள் தயாரிக்கப்படுவதாக பிரதான தீட்சிதர் சொல்கிறார்.

‘அடுப்பில் கட்டைகளை எரித்தே சமைக்க வேண்டும். சமைப்பவர்கள், சமைக்கப்படும் பண்டங்களின் வாசனையை  நுகரக்கூடாது[ஏழுமலையான் கோபிப்பார்]. நைவேத்தியம் படைப்பதற்கு முன்பு காயத்திரி மந்திரம் உச்சரிக்கப்படவேண்டும்.

நைவேத்தியத்தை மூலிகை இலையில் வைத்து, அர்ச்சகர் தன் வலது கை விரலால் தொட்டு, பெருமாளின் வலது கை மற்றும் வாய் அருகே சமர்ப்பணம்[ஊட்டி விடுதல்] செய்வார். இப்படி இன்னும் பல சம்பிரதாயங்கள். பின்னர், இந்த நைவேத்தியம் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுமாம்.

பசி, பட்டினி என்று வாடும் ஏழைகளை மறந்து, நைவேத்தியம் என்னும் பெயரால் பொன்னான  நேரத்தையும்  மனித உழைப்பையும்  இப்படிச் செலவிட வேண்டுமா? மக்களுக்கு வேறு ஏதேனும் நற்பணிகள் செய்யலாமே. ஏனிந்தச் சிறுபிள்ளை விளையாட்டு?

ஆழ்ந்து சிந்திக்கத் தெரிந்த ஆன்மிகவாதிகள்கூட இம்மாதிரி விளையாட்டுகளைக் கண்டிப்பதில்லையே ஏன்?

இந்துமதவாதிகளுக்கு [வேத]'ஆகமம்', இஸ்லாமியருக்கு, 'குரான்'. கிறித்தவருக்கு, 'பைபிள்'.

மதநூல்களை மேற்கோள் காட்டி, மதவாதிகள் காலந்தோறும் நிகழும் தவிர்க்க இயலாத மாற்றங்களைத்  தடுத்து நிறுத்துவதில் முனைப்புக் காட்டுகிறார்களே, இச்செயல் இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தொடரும்?
===============================================================================

2 comments :

 1. உலகம் அழியும்வரை இது தொடரும் நண்பரே...

  மனிதனின் அவசர வாழ்க்கையில் இதனைக் குறித்து சிந்திக்க நேரமில்லையாம் ஆனால் இதை செய்து சமர்ப்பிக்க நேரமுண்டு.

  உலகம் அழியும்வரை இது தொடரும் நண்பரே...

  ReplyDelete
 2. தொடராமல் இருத்தல் நன்று. பார்ப்போம்.

  நன்றி நண்பரே.

  ReplyDelete