'பிரபஞ்சத் தோற்றம்' குறித்து ஆழ்ந்து சிந்தித்தால், 'ஏதும் புரியவில்லை' என்பது புரியும். தோற்றுவித்தவர் கடவுள் என்பது வெறும் அனுமானம்தான்!

Saturday, May 13, 2017

அறிவுஜீவிப் பெண்களுக்கான சிறுகதை!!!

இது முன்னணி வார இதழில் வெளியானது.  பிரபல எழுத்தாளர்களுக்குச் சவால் விடும் மின்னல் வேக நடை. நெஞ்சைச் சுடும் கதை. தவறாமல் படித்திடுவீர்!

வன் அழுதுகொண்டிருந்தான்; விடிய விடிய அழுதுகொண்டிருந்தான்!

இரவு பதிரொரு மணி சுமாருக்கு, அவளும் அவனும் அந்த ஆற்றுப் பாலத்தில் போய்க்கொண்டிருந்த போது அவன் அடித்து வீழ்த்தப்பட்டு, அவள் நான்கைந்து ரவுடிகளால் ஆற்றுக்குள் கடத்தப்பட்டாளே அப்போதிருந்து அவன் அழுது கொண்டிருந்தான்.

“ஐயா, என் மல்லியைக் காலிப்பசங்க கடத்திட்டுப் போறாங்க.  உதவிக்கு வாங்கய்யா. தப்புத் தண்டா நடக்கிறதுக்குள்ளே அவளைக் காப்பாத்திக் குடுங்க சாமி.....மகராசரே.....”

ஆபத்துக்கு எப்படியும் நாலு பேர் உதவுவார்கள் என்ற நம்பிக்கையில் கூப்பாடு போட்டு, குலுங்கிக் குலுங்கி அழுதான் அவன்.....வேலுச்சாமி. வாகனங்களில் செல்வோரைக் கும்பிட்டு வழி மறித்தான். பாதசாரிகளின் பாதம் தொட்டுக் கெஞ்சினான்.

“உதவுகிறேன்” என்று ஒருவர்கூட முன்வரவில்லை.

பாலத்துக்கு அப்பால், பாதையோரக் கடைகள் அவன் கண்ணில் பட்டன. மூச்சுப் பிடித்து ஓடினான். முதலில் தேனீர்க்கடை சின்னத்தம்பி. அப்புறம், பெட்டிக்கடை பெருமாள். பிறகு, மிதிவண்டிக்கடை சாமிவேலு. இவர்கள் மட்டுமல்லாது, அங்கிருந்த அத்தனை பேர் காலிலும் விழுந்தான். மல்லியை மீட்டுத் தரும்படி அழுதான்; தொழுதான்; ஒரு பிச்சைக்காரன் போல் மன்றாடினான்.

கும்பல் கூடியது.....வேடிக்கை பார்க்க.

“பொண்ணுக்கு என்ன வயசு?”

“பதினேழு பதினெட்டு இருக்குமுங்க.”

“எந்த ஊரு?”

“கூத்தம்பூண்டி.”

“அவள் உனக்கு என்ன ஆவணும்?”

“தங்கச்சி.”

“உடன்பிறந்த தங்கச்சியா.....இல்லே.....?”

“அது வந்து.....”

“என்னப்பா வந்து போயி.....”

“சொந்தத் தங்கச்சி இல்லேங்கிறே.”

“ஆமாங்க.”

“அப்படிச் சொல்லு. கல்யாணம் ஆயிடிச்சா?”

“எனக்குங்களா?”

“ரெண்டு பேருக்கும்தான்.”

“இல்லீங்க.”

“அவளைக் கூட்டிட்டு எங்கே வந்தே?”

“சினிமா பார்க்க வந்தோம்.”

“என்ன படம்?”

“படம்.....அது வந்து......”

“என்னப்பா, எது கேட்டாலும் வந்து போயின்னு மென்னு முழுங்குறே. எங்கேயோ உதைக்குதே.”

ஆளாளுக்கு அவனை மடக்கிக் கொண்டிருக்க, இளகிய மனசுக்காரர் ஒருவர் அவனை நெருங்கினார்.

“தம்பி, அந்த இடத்துல அடிக்கடி ரவுடிப்பசங்க பொண்ணுகளைக் கடத்துறானுக. அவனுக உள்ளூர் அரசியல்வாதி ஒருத்தரோட அடியாளுங்க. உனக்கு உதவ இங்கே யாரும் முன்வரமாட்டாங்க. நேரே போலீசுக்குப் போ” என்றார்.

காவல் நிலையத்தைக் கண்டுபிடித்து, புகார் மனு எழுதிக் கொடுத்து, அவர்கள் ஆயத்தமாகிப் புறப்பட்டு வந்து மல்லியை மீட்டால் அவளிடம் என்ன மிச்சமிருக்கும்? அதற்குள் மந்தி கை மாலையாகச் சிதைந்து போவாளே.

அவன் அழுதான். நாலு பேர் துணையாக வந்தால் எண்ணி நாலு நிமிடத்தில் அவளை மீட்டுவிடலாம் என்று புலம்பினான். எவரும் வருவதாக இல்லை.

அவன் அழுதான். ‘ஐயோ தங்கச்சி” என்று தலை தலையாய் அடித்துக் கொண்டு அழுதான்; தரையில் விழுந்து புரண்டு புரண்டு அழுதான்.

வெளியூர்க்காரனான வேலுச்சாமி, அங்குள்ள உள்ளூர்க்காரர்களிடம் உதவி கேட்டுச் சோர்ந்து போனான்.

மனிதர்கள் உதவ முன்வராத நிலையில் கடவுளின் நினைப்பு வந்தது.

“கடவுளே.....” என்று கூவியவாறு மீண்டும் பாலத்தை நெருங்கி, பக்கப்பாதையில் சரிந்து, நீர் வற்றிக் கிடந்த அந்த ஆற்றுக்குள் இறங்கி மணலில் கால் பதித்து ஓடினான்; மணல் மேடுகளில் தடுக்கி விழுந்து உருண்டான். காலிகள் அடித்ததால் மண்டையிலிருந்து வடிந்து உறைந்து போயிருந்த குருதித் தாரைகளில் மணல் துகள்கள் ஒட்டிக்கொண்டு நறநறத்தன.

வெட்டி எடுக்கலாம் போன்ற மையிருட்டில் அவன் இலக்கின்றி ஓடினான்.

“தெய்வமே.....என் தங்கச்சியைக் காப்பாத்து.....” என்று அவன் எழுப்பிய கூக்குரல், பரந்த ஆற்றுப் பரப்பில் தடையேதுமின்றிக் காற்றில் கலந்து பரவி அடங்கிக் கொண்டிருந்தது.

அவன், தான் சார்ந்த மதத்தை மறந்து, தனக்குத் தெரிந்த அத்தனை கடவுள்களையும் பெயர் சொல்லி அழைத்துத் தன் உடன்பிறப்பைக் காப்பாற்றும்படி ஓடிக்கொண்டே பிரார்த்தித்தான்.

“மல்லி.....மல்லி.....” என்று என்று கூவிக் கொண்டே அவளைத் தேடினான்.

தோல்வி அவன் நெஞ்சில் அறைந்தது.

ஆற்றங்கரைப் புதர் மறைவிலோ மணல் மேடுகளின் சரிவிலோ வல்லூறுகளின் பிடியில் அந்தப் பெண் புறா படும் மரண வேதனையைக் கற்பனை செய்து செய்து அவனின் நாடி நரம்புகள் ஒடுங்கிப் போயின.

அவன் நிலைகுலைந்து போனான்; அதர்மம் கொக்கரிக்கும் அந்தகாரத்தில், ஓடியோடிப் பாலத்தடியில் தேடினான்; தூண்களில் மோதிச் சோர்ந்தான்.

வெறி பிடித்தாற்போல எங்கெல்லாமோ ஓடினான்; குத்துக்கல் ஒன்றில் கால் இடறிச் சரிந்து விழுந்தான்; எழுந்து மீண்டும் ஓடப் பார்த்தான். முடியவில்லை.

நேரம் அடித்துப் பிடித்து ஓடிக் கொண்டிருந்தது. 

அவன் பெருமளவில் தன் சக்தியை இழந்திருந்தான்; தவழக்கூட முடியவில்லை; அங்குலம் அங்குலமாக ஊர்ந்து செல்லத்தான் முடிந்தது.

உரத்த குரலில் கடவுளை உதவிக்கு அழைக்க முடியவில்லை.

“கடவுளே.....கடவுளே.....” என்று அடங்கிய குரலில் முணுமுணுக்க மட்டுமே முடிந்தது.

ஆவேசம் தணியாத நிலையில், ஒரு புழுப்போல ஊர்ந்து கொண்டிருந்தான்.

யங்கித் தயங்கி இருள் விடை பெற்றுக் கொண்டிருந்தது.

எல்லாம் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருந்தன.

வறண்ட ஆற்றின் ஓரிடத்தில், பரந்து விரிந்த மணல் மெத்தையில் மல்லி பிணமாகக் கிடந்தாள்.

அவள் உடலெங்கும் நகக் கீரல்கள்; பற்பதிவுகள்; உறைந்த ரத்தத் துளிகள். மாசு படுத்தப்பட்டுக் கொடூரமாகச் சிதைக்கப்பட்ட நிலையில் அந்த அழகு தேவதை அலங்கோலமாகக் கிடந்தாள்.

அவளுக்கு அழகு சேர்த்த ஆடைகள் வெறும் கந்தல் துணிகளாகி, கொஞ்சமாய் அவள் மானம் காத்தன.

வேலுச்சாமி?

சற்றுத் தள்ளி, மணலை முத்தமிட்டுக் குப்புறக் கிடந்தான்.

வானில் காகங்களும் கழுகுகளும் வட்டமிட்டு வேடிக்கை பார்த்தன.

மனிதர்களுக்குக் கேட்கவா வேண்டும்? மந்தை மந்தையாய் வந்து குழுமி ஆசை தீர வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

கடவுள்?
***********************************************************************************************************************


8 comments :

 1. இருக்கிற மனிதனுக்கே மனிதாபமில்லை,இல்லாத கடவுளா வரும் :(

  ReplyDelete
  Replies
  1. கடவுள் வரமாட்டார் என்பதை மக்கள் புரிந்துகொள்ளும் காலம் வரும்.

   நன்றி பகவான்ஜி.

   Delete
 2. இந்த சமூகம் இனி இப்படியே... போனால் முடிவு ???

  ReplyDelete
  Replies
  1. மிகப்பெரும் சோக முடிவாகத்தான் இருக்கும்.

   நன்றி கில்லர்ஜி.

   Delete
 3. கடவுள்தான் தூணீலும் தூரும்பீலும் இருப்பவராச்சே

  ReplyDelete
  Replies
  1. சொல்லுவோர் சொல்லட்டும். நம்புவோர் நம்பட்டும்.

   நன்றி கணேசன். தங்கள் வருகைக்கும் நன்றி.

   Delete
 4. //மனிதர்கள் உதவ முன்வராத நிலையில் கடவுளின் நினைப்பு வந்தது.//
  இங்கே தான் மோசடிகளின் தொழில் வெற்றிகரமாக ஆரம்பிக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. மனிதர்கள் முழுமனதோடு ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்ந்தால் கடவுளை நினைப்பதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு.

   நன்றி நண்பர் வேகநரி.

   Delete