'ஆண்டாள்' குறித்த சர்ச்சையில், வைரமுத்து தன் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்த பின்னரும் தொடர்ந்து கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள் இந்துமதக் காப்பாளர்களாகத் தம்மை அறிவித்துக்கொண்டவர்கள்; மன்னிப்புக் கேட்கச் சொல்கிறார்கள்; அதற்குக் கெடுவும் விதித்துக்கொண்டிருக்கிறார்கள்.....தமிழ்நாட்டில் பெரும்பான்மையினராக உள்ள இந்துமதம் சார்ந்த மக்கள் தம் பின்னால் அணிவகுப்பார்கள் என்னும் தவறான நம்பிக்கையில்.
''சமஸ்கிருதமே தேவ பாஷை. தமிழ் நீச பாஷை'' என்று சொன்னவர்கள் அவர்கள்; இன்றும் சொல்பவர்கள் இருக்கிறார்கள். இப்போதும் கோயில்களில் அர்ச்சனைமொழி சமஸ்கிருதம்தான். போனால்போகிறதென்று எப்போதாவது தமிழையும் பயன்படுத்துவார்கள்.
'நீச பாஷை' என்று அவர்களால் இழிவுபடுத்தப்பட்ட தமிழ் மொழியில் பாடிய ஆண்டாள் தாயாருக்குக் களங்கம் ஏற்பட்டதாகச் சொல்லிக் கண்ணீர் வடிக்கிறார்கள் இன்று; போராட்டங்களைத் தூண்டிவிடுகிறார்கள்; வைரமுத்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று முழக்கமிடுகிறார்கள்.
ஒன்றல்ல இரண்டல்ல; சில நூறல்ல பல நூறல்ல, கடவுளின் பெயரால் ஆயிரக்கணக்கில் மூடநம்பிக்கைகளைக் திணித்து மக்களின் சிந்திக்கும் திறனை மழுங்கடித்தவர்கள்..... மழுங்கடித்துக்கொண்டிருப்பவர்கள் அவர்கள்.
முதலில் மன்னிப்புக் கேட்க வேண்டியவர்கள் அவர்கள்தான்.