சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, நிகழ்வில் கலந்துகொண்ட சங்கர மடம் விஜயேந்திரர் எழுந்து நிற்கவில்லை என்றும், அதற்குத் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அவர்களும் கண்டனம் தெரிவித்திருப்பதாகவும் 'NEWS 18 தமிழ்நாடு' தொலைக்காட்சி இன்று[பிற்பகல் 02.00 மணி] பரபரப்பாகச் செய்தி வெளியிட்டுக்கொண்டிருக்கிறது.
பதிப்பாளர் சேஷாத்திரி என்பவரும், 'விஜயேந்திரரின் செயல்பாடு சரியானதல்ல; அது பல பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும்' என்று தெரிவித்திருக்கிறார்.
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள், விஜயேந்திரர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.
தமிழ்நாடு அரசும் கண்டனம் தெரிவித்திருக்கிறது[சற்று முன்னர் வெளியான செய்தி].
விஜயேந்திரர் என்பவர் கடவுளின் அவதாரம் ஆவார். கடவுள் வேறு அவதாரம் வேறு அல்ல.
விஜயேந்திரரே கடவுள். கடவுளே விஜயேந்திரர்.
தமிழ் மொழியானது, தேவ பாஷையான சமஸ்கிருதம் போல் கடவுளால் படைக்கப்பட்டதல்ல; அற்ப மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு 'நீச' பாஷை.
ஒரு நீச பாஷை கடவுள் வாழ்த்தாகப்[தமிழ்த்தாய் வாழ்த்து] பாடப்படும்போது, விழாவில் கலந்துகொண்ட சாதாரண மனிதர்கள் எழுந்து நிற்கலாம். கடவுளின் அவதாரமான விஜயேந்திரர் எழுந்து நிற்பது கடவுளையே அவமானப்படுத்தும் செயலாகும்.
ஸ்டாலின், வீரமணி, முத்தரசன் போன்றவர்கள், விஜயேந்திரரின் செயலைக் கண்டித்தது முழுமுதல் கடவுளையே கண்டித்ததாக ஆகிறது.
தாங்கள் தவறு செய்துவிட்டதை உணர்ந்து உடனடியாக இவர்கள் அனைவரும் விஜயேந்திரரிடம் மன்னிப்புக் கேட்பார்களாக!
=====================================================================================
=====================================================================================
இப்பதிவு இன்று[24.01.2018] பிற்பகல் 02.30க்கு, தொலைக்காட்சிச் செய்தியை ஆதாரமாகக் கொண்டு பதிவேற்றப்பட்டது. நிகழ்ச்சி பற்றிய முழு விவரத்தையும் அறிய இயலவில்லை.