அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

புத்தன் ஒரு மானுடன்! மகான் அல்ல!!

‘சர்வ சக்திகளும் கொண்ட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று ஏற்கும்போது, மனிதன் தனக்கென்று சுதந்திரம் இல்லாதவன் ஆகிறான். ‘ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே’ என்பதற்கேற்ப, இறைவன் ஆட்டுகிறான்; மனிதன் ஆடுகிறான் என்றாகிவிடுகிறது. மனித முயற்சிக்கு இடமே இல்லாமல் போகிறது’ என்கிறார் புத்தர்.

“எந்த நூலையும் கடவுள் படைத்ததாக ஏற்றுக்கொள்ளாதே” என்பதும் அவருடைய போதனைதான்.

இந்து மதம்[?], ‘வேதங்கள் யாராலும் உருவாக்கப்பட்டவையல்ல; அவை கடவுளிடமிருந்து வெளிப்பட்டு நேரடியாகக் காற்றில் கலந்து, மனிதக் காதுகளை வந்தடைந்தவை’ என்கிறது. அதன் காரணமாகவே, வேதங்களுக்குச் ‘சுருதி’ என்னும் பெயரை அது கொடுக்கிறது!

இறுதித் தூதரான நபிகள் நாயகத்தின் வாயிலாக இறைவனாலேயே இறக்கி வைக்கப்பட்டதுதான் ‘குர் ஆன்’ என்று இஸ்லாம் நம்புகிறது. இதை நம்ப மறுப்பவனை மார்க்க விரோதியாகவே அது பாவிக்கிறது.

‘பரமண்டலத்திலிருக்கிற பரமபிதாவால் உருவாக்கப்பட்டதுதான் பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடுமாகிய விவிலியம்’ என்று கிறிஸ்தவம் கூறுகிறது. அதில் வரும் சுவிசேஷங்கள் எல்லாம் மனிதர்களின் ஊடாகத் தேவன் அருளியது என்று அது நம்புகிறது.

இவ்வாறு, மதங்களெல்லாம் தத்தம் நூலை இறைவன்தான் அருளினான் என்னும் நம்பிக்கையை வலுப்படுத்துவதில் முனைப்புக் காட்ட, பௌத்தமோ அந்த நம்பிக்கையைச் சுக்கல் சுக்கலாகத் தகர்த்தெறிய முயல்கிறது. ‘எந்த நூலையும் கடவுள் படைத்ததாக ஒப்புக் கொள்ளாதே’ என்று சம்மட்டித் தாக்குதல் நடத்துகிறது.


‘கடவுள் சொன்னார் என்பதை நீ ஒத்துக்கொண்டால், உன் அனுபவத்துக்கும் அதனால் நீ பெற்ற அறிவுக்கும் வேலையில்லாமல் போகிறது’ என்கிறார் புத்தர்.

இந்த மூடநம்பிக்கையால் எத்தனையோ கொடூர சம்பவங்கள் இந்தச் சமூகத்தில் நிகழ்ந்துவிட்டன.

பைபிலில், உலகம் தட்டையானது என்னும் செய்தி உள்ளது. உலகம் உருண்டை என்னும் உண்மையை உலகுக்கு உணர்த்த முயன்ற விஞ்ஞானி கலிலியோ, போப்பாண்டவர் போட்ட உத்தரவால் பொங்கும் நெருப்பில் உயிரோடு பொசுக்கப்பட்டார்!

பரிணாமக் கொள்கையை உருவாக்கிய டார்வின், தேவாலயத்தில் மதவாதிகளின் முன்பு மன்னிப்புக் கோரினார். அவர் கண்டறிந்த பரிணாமக் கொள்கை பொய்யானது என்று அறிவிக்கும்படி மதம் அவரை அச்சுறுத்த அதன்படியே அவர் செய்தார்!

                         
புத்தர் மகானோ ரிஷியோ அல்ல; இந்தத் தன்மையை அவர் எதிர்த்தார். ‘ரிஷி சொன்னார்; மகான் சொன்னார் என்று எதையும் நம்பாதே. யார் எதைச் சொன்னாலும், உன் அறிவைக்கொண்டு தர்க்கம் செய்து ஏற்புடையதை எடுத்துக் கொள்’ என்று சொன்ன சீரிய சிந்தனையாளன்; ஆகச் சிறந்த அறிஞன்.

ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்பவர்கள் பௌத்தர்களையும் சமணர்களையும், ‘திருடர்கள்’, ‘கொலைகாரர்கள்’, ‘வேத வேள்வியை மறுப்பவர்கள்’ என்றெல்லாம் பழித்தார்கள்;  “பௌத்தர்களின் பெண்டாட்டி பிள்ளைகளைக் கற்பழிக்கின்ற சக்தியை எங்களுக்குக் கொடு” என்று கடவுளிடம் வேண்டினார்கள்! இது எத்தனை பெரிய அநியாயம்!

புத்தன் என்ற சொல் ஓர் ஆளைக் குறிப்பதாகவே பலரும் நினைக்கிறார்கள். அது தவறு.

புத்தியை, அதாவது அறிவைப் பயன்படுத்தி உண்மையைக் கண்டறிய முயல்பவன் புத்தன். சித்தார்த்தன், தன் புத்தியைப் பயன்படுத்தி பல உண்மைகளைக் கண்டறிந்ததால் அவர் புத்தர் என்று அழைக்கப்பட்டார். இவருக்கு முன்பு பல புத்தர்கள் வாழ்ந்திருக்கலாம் என்கிறார்கள்.

சித்தம் என்பதும் அது போன்றதே. சித்தத்தைக் கட்டுப்படுத்தி அதை நல்வழியில் செலுத்துபவன் சித்தன்.

என்சைக்ளோபீடியா, அபிதான சிந்தாமணி ஆகிய நூல்கள், புத்தன் என்பதற்கு, ‘எதையும் புத்தியின் மூலம் ஆராய்பவன்; குருட்டுத்தனமாக நம்பாதவன்’ என்று பொருள் தருகின்றன.

சைவ வைணவ மதத்தவரால் எண்ணற்ற புத்தமதத்தினர் கழுவேற்றப்பட்டார்கள்; செக்கிலிட்டு அரைக்கப்பட்டார்கள்; கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் தூக்கி வீசப்பட்டார்கள்.

தமிழகத்தில் இருந்த பல புத்த கோயில்கள் சைவ வைணவக் கோயில்களாக மாற்றப்பட்டன. தங்கம், வைரம் இவற்றால் ஆன புத்த விக்கிரகங்கள் களவாடப்பட்டன.

திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இவ்வாறான பல தீச்செயல்களால், பகுத்தறிவைப் பயன்படுத்தி வாழும்படி வலியுறுத்திய சிறந்த ஒரு மதம் [புத்தம் மதமல்ல; ஓர் இயக்கம் என்பாரும் உளர்] அது உருவான மண்ணைவிட்டே விரட்டியடிக்கப்பட்டது மிகப் பெரிய சோகம்!
*********************************************************************************
கீழ்க்காணும் நூல்களிலிருந்து திரட்டப்பட்ட கருத்துகளின் தொகுப்பே இப்பதிவு. நூலாசிரியர்களுக்கு நன்றி.

1. தமிழருவி மணியன் எழுதிய ‘ஞானபீடம்’, கற்பகம் புத்தகாலயம், தியாகராய நகர், சென்னை. மறுபதிப்பு: அக். 2009.

2.ஞான.அலாய்சியசு எழுதிய ‘பெரியார் பார்வையில் இஸ்லாமும் புத்தமும்’, புதுமலர் பதிப்பகம், ஈரோடு. முதல் பதிப்பு: டிசம்பர் 2005.
*********************************************************************************