சனி, 3 பிப்ரவரி, 2018

'உடன்கட்டை ஏறுதல்'...சில 'பகீர்', 'திகீர்' தகவல்கள்!!

இந்திய நாட்டில், பலதரப்பட்ட மக்களிடமும் உடன்கட்டை ஏறும் வழக்கம்[சதி] பரவலாக இருந்துள்ளது. ஆணாதிக்கம், சொத்துரிமை, கணவனை இழந்த பெண்களின் ஆதரவற்ற நிலை, கற்பைப் பாதுகாத்தல், அறியாமை என இதற்கான காரணங்கள்  பலவாக இருந்துள்ளன. இங்கு இவை பற்றி விரித்துரைப்பது என் நோக்கமன்று.

இவ்வழக்கம், உண்மையில் பெண்களின் உரிமைகளப் பறிக்க ஆண்கள் செய்த சதியால் உருவானது. ஆண் இனத்தால் பெண்குலத்துக்கு இழைக்கப்பட்ட மாபெரும் பாதகம் இதுவாகும்.

அண்மையில், வரலாற்று ஆய்வாளர் செ.ஜெயவீரதேவன் அவர்கள் எழுதிய, 'உடன்கட்டை'[பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை] என்னும் நூலை வாசிக்க நேர்ந்தது. 

இதில் இடம்பெற்ற, என்றும் மறக்கவே இயலாத சில கொடூர நிகழ்வுகளை இங்கு பதிவு செய்கிறேன்.
*திருமலை நாயக்க மன்னன்[கி.பி.1623 - 1659] மரணம் அடைந்தபோது, அவனுடன் அவனின் 200 மனைவியரும் உடன்கட்டை ஏறினார்கள். அப்போது கருவுற்றிருந்த திருமலையின் மனைவியரில் ஒருத்தி, விஜயரங்க சொக்கநாதனை ஈன்றெடுத்துக் கொடுத்துவிட்டு உடன்கட்டை ஏறினாளாம். 

*கி.பி.1710இல், இராமநாதபுரத்தை ஆண்ட கிழவன் சேதுபதி[கி.பி.1671 - 1710] இறந்தபோது அவனுடய 47 மனைவிமார்களும் உடன்கட்டை ஏற வற்புறுத்தப்பட்டார்கள்.

அவர்களில் சிலர் மட்டுமே மனதைக் கல்லாக்கிக்கொண்டு நெருப்பில் பாய்ந்தார்கள். மற்றவர்களில் சிலர் மரண பீதியுடன் கதறியவாறு தீப்பாய்ந்தார்கள். சுய நினைவிழந்த சிலர் சிதையில் தூக்கி வீசப்பட்டார்கள்.

ஒரு பெண், உரத்த குரலில் அபயக்குரல் எழுப்பியவாறு ஓடிப்போய் அருகிலிருந்த கிறித்தவ ராணுவ வீரனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு தன்னைக் காப்பாற்றுமாறு கெஞ்சினாள். திகிலடைந்த அவ்வீரனோ அவளைப் பலவந்தமாக உதறித் தள்ளவே, சமநிலை இழந்து தடுமாறித்  தலைகுப்புற எரியும் நெருப்பில் விழுந்து கருகிப்போனாள் அவள்.

*நெருப்பில் விழுந்து அனைத்துப் பெண்களும் சாம்பலான நிலையில், புகைந்துகொண்டிருக்கும் கொள்ளிகளை நெருங்கி, மந்திரம் ஓதி, சடங்குகள் செய்தார்கள் பார்ப்பனர்கள்.

*15ஆம் நூற்றாண்டில், விஜயநகர மன்னன் மாண்டபோது அவனின் 3000 மனைவியர் உடன்கட்டை ஏறித் தம் உயிர்களை மாய்த்துக்கொண்டார்கள்.

*பால்ய விவாகம் செய்யப்பட்ட ஒரு சிறுமியின் கிழட்டுக் கணவன் இறந்துவிட,  அந்தச் சிறுமியின் கைகால்களைக் கட்டிய மூன்று பார்ப்பனர்கள் ஒரு மூதாட்டியின் உதவியுடன் அவளை  எரியும் சிதையில் வீசினார்கள். [பார்ப்பனர்களுக்கு உடன்கட்டை ஏறுவது தடை செய்யப்பட்டிருந்தது. உடன்கட்டை ஏற விரும்பும் பார்ப்பனப் பெண்ணுக்கு எவரேனும் உதவி செய்தால்  உதவுபவர், பார்ப்பனனைக் கொன்ற பாவத்துக்கு உள்ளாவார்கள் என்று பத்மபுராணத்தில் கூறப்பட்டுள்ளதாம்].

*போடியில்.....உயர் சாதியைச் சேர்ந்த ஒருவர் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணான வீருநாகம்மாளை மானபங்கம் செய்ய முயன்றபோது, அப்பெண், ஒரு வைக்கோல் போரில் தீ வைத்து அதன் உள்ளே புகுந்து உயிர் நீத்தாள்.

*உடன்கட்டை ஏறும் பெண் அருந்ததிக்குச் சமம் ஆவாள். உடம்பில் உள்ள மூன்றரைக் கோடி ரோமங்களின் எண்ணிக்கையிலான ஆண்டுகள் சொர்க்கத்தில் இருப்பாள். தன் கணவன் பெரும் பாவங்கள் செய்தவனாக இருந்தாலும் அவனையும் தன்னுடன் சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்வாள்.[இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ பொய்களைச் சொல்லிச் சொல்லிப் பெண்களைத் தெய்வங்கள் என்று புகழ்ந்து ஆண் வர்க்கம் அவர்களைப் பேதைகளாக்கி அடிமைப் படுத்தி ஆதிக்கம் செலுத்தியது இங்கு நினைவுகூரத்தக்கது].

*கணவன் இறந்த பிறகு, அவனின் மனைவியர் உடன்கட்டை ஏற மறுத்தால், மறுப்பவரைத் துண்டுதுண்டாக வெட்டி, கணவனின் கல்லறை அருகே புதைக்கும் வழக்கம் அரேபியாவில் இருந்திருக்கிறது.

*சில நாடுகளில்.....

மன்னன் மரணம் அடைந்தால் மனைவியர், அடிமைகள், பணியாட்கள் ஆகியோரும் அவனுடன் புதைக்கப்பட்டார்கள். காரணம், மறு உலகிலும் அவனுக்கு இவர்கள் சேவை செய்ய வேண்டும் என்பதுதானாம்.

*மகாபாரதத்தில்[கி.மு.300], வாசுதேவரின் மனைவியரான தேவகி, பத்திரிரை, ரோகிணி, மதிரை ஆகிய நால்வரும் உடன்கட்டை ஏறியதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம்.

கிருஷ்ணன் இறந்த செய்தி கேட்டு, அவனின் மனைவியரான ருக்மணி, காந்தாரி, சஹ்யை, ஹைமவதி, ஜம்பவதி ஆகிய ஐந்து பேரும் உடன்கட்டை ஏறினார்களாம்.

இன்னும், இவை போன்ற ஏராள சோகத் தகவல்கள் 'உடன்கட்டை' நூலில் செறிந்து கிடக்கின்றன. பதிவின் நீட்சிக்கு அஞ்சி நிறைவு செய்கிறேன்.

நன்றி.