வியாழன், 8 பிப்ரவரி, 2018

ராமகோபாலன் சொல்லிட்டாரு! எல்லாரும் விளக்கேத்துங்க!!

'திருச்செந்தூர் முருகன் கோயிலின் சுற்று மண்டபம் இடிந்து விழுந்து ஒரு பெண் காலமானார். மதுரை மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இறைவன் வாழும் இல்லங்களில் ஏற்பட்டுள்ள இவை போன்ற அசம்பாவிதங்களால் தமிழக மக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் வரக்கூடாது என்பதே ஆன்மிகப் பெரியோரின் கருத்தாக இருக்கிறது. 

பாதிப்பு ஏற்படாமலிருக்க, தை வெள்ளிக்கிழமை மாலை வீடுதோறும் விளக்கேற்றிப் பிரார்த்தனை செய்ய வேண்டும்' என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் அறிக்கை['தி இந்து, 08.02.2018] விடுத்துள்ளார்.
கோயில் வளாகங்களில் தீ விபத்து ஏற்பட்டால், தமிழக மக்களுக்கு மட்டும்தான் கெடுதல் விளையுமா? உலகிலுள்ள ஒட்டுமொத்த மனித குலத்துக்கே அல்லவா தீங்கு நேரும்! 

உலக மக்கள் அனைவரும் வீடுகளில் தீபம் ஏற்றிப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றல்லவா இவர் அறிக்கை விட்டிருக்க வேண்டும்? ஒட்டுமொத்த மனித குலத்தின் நலனில் ராமகோபாலனுக்கு அக்கறை இல்லையோ? போகட்டும்.

கோயில்களைக் கட்டியவர்கள் மனிதர்கள். அங்கே சிலைகளை வைத்து அவற்றைக் கடவுள் உறையும் இடம் என்று மக்களை நம்பவைத்து, அபிஷேக ஆராதனைகள் நடத்தி, விழாக்கள் எடுத்துக் அவரை மகிழ்விப்பதாக நம்புபவர்களும் மனிதர்கள். அங்கே கடைகள் கட்டி வருமானம் பண்ணுபவர்களும் மனிதர்கள்தான். கோயில் வளாகங்களில் விபத்து நேர்வதற்கும் மனிதர்களே[கவனக்குறைவு] காரணம்.

உண்மை இதுவாக இருக்க.....

உலகம் முழுதும் கணக்கு வழக்கில்லாமல் விபத்துகள் நடப்பதும், அவற்றால் சேதங்களும் உயிரிழப்புகளும் ஏற்படுவதும் ராமகோபாலன்களுக்குத் தெரியும்.

தொடர்ந்து மக்களுக்கு ஏற்படும் இம்மாதிரியான பாதிப்புகளைத் தடுக்க வீடுதோறும் விளக்கேற்றிப் பிரார்த்தனை செய்யுங்கள் என்று அறிக்கை விடாத இவர்கள்.....

கோயில்களில் மனிதத் தவறுகளால் ஏற்படும் மிக அரிதான விபத்துகள் குறித்து ஆளாளுக்கு அலறித் துடிப்பது ஏன்? 

ராமகோபாலன்கள் அலறுவதும் அறிக்கை விடுவதும் எதன் பொருட்டு?

மக்களின் நலம் காப்பதற்கா, தங்களின் செல்வாக்கை வளர்த்துக்கொள்வதற்கா?

பொதுமக்கள் சிந்திக்க வேண்டும்.