வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

கேள்விகள் இங்கே! பதில்கள் எங்கே...எங்கே...எங்கே?

“எங்கடா போறே?”

“கோயிலுக்கு.”

“எதுக்கு?”

“எல்லாரும் எதுக்குப் போவாங்களாம்?”

“பொழுது போக்க, சிற்பக் கலையை ரசிக்க, ஃபிகர்களை சைட் அடிக்க, கொள்ளையடிக்க, மனப்பூர்வமா சாமி கும்பிட...இப்படி எத்தனையோ காரணங்கள் இருக்கு. நீ எதுக்குப் போறே? எதிர்க் கேள்வி கேட்காம பதில் சொல்லு.”

“சாமி கும்பிடத்தான் போறேன்.”

“எதுக்கு சாமி கும்பிடணும்?”

“எல்லாரும்...அல்ல, என் கஷ்டங்கள் நீங்க.”

“கடவுளைக் கும்பிட்டா கஷ்டங்கள் நீங்கும்னு யார் சொன்னது?”

“பெரியவங்க சொல்லியிருக்காங்க.”

“பெரியவங்கன்னா...?”

“ஞானிகள். ஆன்மிக வாதிகள்.”

“கஷ்டங்களைக் கொடுத்தது யார்னு அவங்ககிட்டே கேட்டிருக்கியா?”

“இல்ல.”

“நீயா யோசிச்சிருக்கியா?”

“இல்ல.”

“கடவுள்தான் கஷ்டங்களைக் கொடுத்தார்னு நான் சொல்றேன். ஒத்துக்கிறியா?”

“மாட்டேன்.”

“ஏன்?”

“கடவுள் கருணை வடிவானவர்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க.”

“கருணை வடிவானவர் கடவுள், சரி. நீ பிறக்குறதுக்கு முன்பே, ‘உன்னை மனுஷனா பிறப்பிக்கப் போறேன். இன்பங்களைவிடத் துன்பங்கள் நிறைய அனுபவிக்க வேண்டியிருக்கும்’னு உன்கிட்டே அவர் சொல்லியிருக்காரா?”

“ஹி...ஹி...பிறக்குறதுக்கு முன்பே எப்படிச் சொல்ல முடியும்?”

“முந்தைய பிறவிகள்ல  நீ மண்ணாவோ, மரமாவோ, எருமையாவோ, பன்றியாவோ இருந்திருப்பே. ஒவ்வொரு பிறவிக்கு இடையிலேயும் பேயாவோ, பிசாசாவோ ஆவியாவோ, ஆன்மாவாவோ அலைஞ்சிருப்பே. அப்பவே சொல்லலாமே?”

“அப்படியெதுவும் அவர் சொல்லி நான் கேட்டதா ஞாபகம் இல்ல.”

“சரி. நீ மனுஷனா பிறந்தப்புறமாவது, உன் கனவிலோ நனவிலோ ‘நான்தான் உன்னைப் படைச்சேன்’னு சொன்னாரா?”

“ஊஹூம்......இல்ல.”

“நிச்சயமா?”

“நிச்சயமா.”

“சத்தியமா?”

”சத்தியமா.”

“ஆக, மனுஷனா பிறக்குறதுதான் உன் விருப்பம் என்பதைச் தெரிஞ்சிட்டுக் கடவுள் உன்னைப் படைக்கல; உன் அனுமதியோடவும் அதைச் செய்யல; அவர் விருப்பத்துக்கு உன்னை இப்படிப் பிறப்பிச்சிருக்கார். இன்பங்களோட துன்பங்களையும் கொடுத்திருக்கார். இன்னிக்கிவரை, அவர் நினைச்சபடி நீ இன்ப துன்பங்களை அனுபவிச்சிருக்கே. இனியும் அவர் விரும்புகிறபடிதான் அனுபவிக்கணும். அவரைக் கும்பிடுவதாலோ, நெஞ்சுருகி, ஆடிப்பாடி அவர் புகழ் பாடுவதாலோ  நீ நினக்கிறபடியெல்லாம் எதுவும் நடந்துடாது. புரியுதா?”

“புரியுது.”
=====================================================================================