வியாழன், 15 பிப்ரவரி, 2018

'சியெம்' சொன்ன 'பூசணிக்காய்' கதை!

''மக்களைக் காப்பவன் மன்னன். நாட்டில் நல்லன நிகழ்வதற்கு அவனே காரணம்'' என்று நாடாளும் மன்னனைப் போற்றுதல் செய்து மக்களிடையே பரப்புரை செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறான் ஒரு பகுத்தறிவாளன்.

கடவுள் பக்தன் ஒருவன், ''மன்னனல்ல; கடவுளே அனைத்து நல் நிகழ்வுகளுக்கும் காரணமாவார்'' என்று எதிர்மறையாக 'மறுப்புரை' செய்கிறான்.

இருவரும் அவ்வப்போது பொதுவிடங்களில் வாக்குவாதங்களை நிகழ்த்துகிறார்கள்.

மாறு வேடத்தில் சென்றபோது இவர்களின் வாதப்பிரதிவாதங்களைக் கேட்ட மன்னன், ஒரு பூசணிக்காயில் சிறு துளையிட்டு, தங்க நாணயங்களையும் வைரங்களையும் அதில் நிரப்பி, துளை தெரியாமல் அடைத்து, அதைத் தன்னைப் போற்றுகிற பகுத்தறிவாளனுக்குக் கொடுக்கிறான்[பிறர் அறியக் கொடுத்திருக்கலாமே?!].

பூசணிக்காயின் மகத்துவம் அறியாத அவனோ, அதை ஒரு ரூபாய்க்கு ஒரு வணிகனிடம் விற்றுவிடுகிறான்.

அதே பூசணியைப் பக்தன் இரண்டு ரூபாய் கொடுத்து வாங்கிவந்து, சமைப்பதற்காக அறுத்தபோது, உள்ளே தங்க நாணயங்களும் வைரங்களும் இருப்பதை அறிந்து மன்னனைச் சந்தித்து அவற்றை ஏற்குமாறு வேண்டுகிறான்.

இந்த அரிய நிகழ்வின் மூலம், அனைத்து விளைவுகளுக்கும் மூல காரணம் ஆண்டவனின் அருளேயன்றித் தானல்ல என்ற [தவறானதொரு] முடிவை மேற்கொண்டு, நாணயங்களையும் வைரங்களையும் பக்தனுக்கே வழங்குகிறான் மன்னன்.

இது ஒரு கதை. 100% கதைதான். கடவுள் மீது நம்பிக்கை கொண்ட ஒரு மனிதனால் கற்பிக்கப்பட்ட கதை.

இதையே ஒரு கடவுள் மறுப்பாளன் எழுதியிருந்தால் 'முடிவு' எதிர்மறையாக இருந்திருக்கும் என்பதைக் கொஞ்சமே கொஞ்சம் சிந்தித்திருந்தால்.....

தமிழ்நாடு சட்டமன்றத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தைத் திறந்துவைத்த இன்றைய முதலமைச்சர் எடப்பாடிப் பழனிசாமி அவர்களுக்குப் புரிந்திருக்கும். சிந்திக்கத் தவறிவிட்டார்.
ஜெயலலிதாவை அவர் கடவுளுக்கு இணையாணவர் ஆக்கிப் பெருமிதப்பட்டிருக்கிறார். இது அவர்தம் விருப்பம். தடுப்பாரில்லை. மாறாக.....

தற்சார்புள்ள ஒரு பொய்க் கதையைச் சொல்லி, நாட்டின் மீதும் மன்னனின் மீதும் ஆழ்ந்த பற்றுக்கொண்ட பகுத்தறிவாளனான ஒரு சிறந்த குடிமகனை இழிவுபடுத்தியிருக்க வேண்டாம்.

இனியேனும், கதைகள் சொல்லும்போது மிகவும் விழிப்புடன் செயல்படுமாறு முதல்வர் அவர்களை மிக்க அன்புடன் வேண்டுகிறேன்.

நன்றி.