புதிய அரசியல் கட்சி ஒன்றின் தலைவரும், பழைய திரைத்துறையின் பிரபலமும் ஆன 'கமல்', ''காவிரி விவகாரம் உட்படப் பல சமுதாயப் பிரச்சினைகள் குறித்து 'ரசினி' கருத்துச் சொல்லாமலிருக்கிறார்'' என்று கவலை தெரிவிக்க அல்லது கடுப்படிக்க, ரசினியோ, ''நான் இன்னும் முழுநேர அரசியல்வாதி ஆகவில்லை'' என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.
தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக அலப்பறை செய்துகொண்டிருக்கும் சூப்பர் ஸ்டாருக்கு சாமானியனான நான் அறிவுறுத்த நினைப்பது ஒன்று உண்டு. அது.....
''தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளதாயின்.....
இதை நிரப்பிடத் தினகரன், கமல், விஷால், விஜய், சிம்பு என்று பல அரசியல் புது முகங்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த வெற்றிடம் இனி வருங்காலத்திலேனும் நிரப்பப்பட்டுவிடும் என்பதில் கிஞ்சித்தும் ஐயத்திற்கு இடமில்லை. இது குறித்துத் தாங்கள் அணுவளவும் கவலை கொள்ளத் தேவையில்லை; முழுநேர அரசியல்வாதியாகவும் மாற வேண்டாம். இதுவோ அதுவோ எதுவோ என்று அலைபாயும் மனம் கொண்ட தங்களுக்கு அரசியலே வேண்டாம் என்பதே என் அறிவுபூர்வமான பரிந்துரை.
இன்றைய சமுதாயச் சூழலில் தாங்கள் அறிந்துகொள்ளுதற்குரிய அவலநிலை ஒன்று உண்டு. அது.....
இன்றைய சமுதாயச் சூழலில் தாங்கள் அறிந்துகொள்ளுதற்குரிய அவலநிலை ஒன்று உண்டு. அது.....
தமிழ் மண்ணில் ஆன்மிகப் பயிர் வளர்த்த ஆன்மிகச் 'செம்மல்கள்' பலரும் மறைந்துவிட்ட காரணத்தால், இத்துறையில் நீண்ட நெடுங்காலமாக வெற்றிடம் நிலவுகிறது. மக்களின் மனங்களில் தொடர்ந்து புதிய புதிய மூடநம்பிக்கைகளைத் திணிப்பதற்கு ஆன்மிக ஜாம்பவான்கள் எவரும் இப்போது இங்கு இல்லை. கண்ணுக்கு எட்டிய தொலைவுவரை 'ஆன்மிக வெளி' வெற்றிடமாகவே காட்சியளிக்கிறது.
அதை நிரப்பிட இப்போதைக்கு மட்டுமல்ல, வேறு எப்போதைக்கும் தங்களை விடவும் பொருத்தமான 'ஆன்மிகர்' இல்லை என்பது அடியேனின் ஆணித்தரமான எண்ணம்.
ஆகவே,
தாங்கள் அந்த ஆன்மிக வெற்றிடத்தை நிரப்பி, அந்நெறி வளர்த்து மக்களைப் பகுத்தறிவுப் பாதைக்குத் திரும்பிவிடாமல் தடுத்தாட்கொள்ள வேண்டும் என்பது அடியேன் தாழ்மையுடன் தங்கள் முன் வைக்கும் வேண்டுதல் ஆகும்.''
வாழ்க ரசினி! தொடர்க அவரது ஆன்மிகப் பயணம்!!
***************************************************************************************************************