வியாழன், 15 மார்ச், 2018

சரித்திரம் படைத்த சரித்திரக்கதை மன்னன் சாண்டில்யன்!

வரலாற்றுப் புதினங்கள் படைப்பதில் சாதனைகள் நிகழ்த்தி, புதின வரலாற்றில் நிலையானதொரு இடம் பெற்றவர் சாண்டில்யன். அவர் குறித்த சுவையான சில குறிப்புகளின் தொகுப்பு இப்பதிவு. 

இவரின் முதல் படைப்பு, 'சாந்தசீலன்' என்னும் சிறுகதை. சாண்டில்ய கோத்திரத்தைச் சார்ந்த இவர், 'பாஷ்யம்' என்னும் இயற்பெயரைத் தவிர்த்து, 'சாண்டில்யன்' என்னும் புனைபெயரில் இக்கதையை, 'திராவிடன்' இதழுக்கு அனுப்பினார். பிரசுரம் ஆயிற்று.

அடுத்ததாக, 'கல்கி'யை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த 'ஆனந்தவிகடன்' இதழில், 'கண்னம்மாவின் காதல்', 'அதிர்ஷ்டம்' ஆகிய இரு கதைகள் வெளியாயின.

தொடர்ந்து, 'சுதேசமித்திரன்' இதழில் சில கதைகளை எழுதினார்.

சுதேசமித்திரனில் நிருபராகவும் பணியாற்றிய சாண்டில்யன் படைத்த முதல் நாவல் 'பலாத்காரம்'' ஆகும். இது முழுநூலாக வெளியானது.

சிறுகதைகள் மூலம் ஓரளவு பிரபலம் ஆன இவர், 'அமுதசுரபி' இதழில் 'ஜீவபூமி'என்னும் தலைப்பில் முதல் தொடர்கதையை எழுதினார்.

பெரும் எண்ணிக்கையிலான வாசகரைக் கவர்ந்த இக்கதையை வாசித்த 'குமுதம்' இதழாசிரியர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை தம் பத்திரிகையில் சாண்டில்யனை எழுத வைத்தார்; மாத ஊதியம் கொடுத்து சாண்டில்யனைக் குமுதத்தின் ஆஸ்தான எழுத்தாளர் ஆக்கினார். குமுதத்தின் விற்பனை எகிறியது.

சாண்டில்யன், 'கடல்புறா', 'யவனராணி', 'ராஜபேரிகை', 'கன்னிமாடம்', 'மன்னன்மகள்', 'ஜலமோகினி'' என, ஏராள நாவல்களை எழுதித் தள்ளினார்.

சாண்டில்யன் படைத்த நூல்கள் 57. இவற்றில், 'பலாத்காரம்', 'செண்பகத்தோட்டம்', 'மனமோகம்', 'நங்கூரம்', 'மதுமலர்' ஆகியவை தவிர ஏனையவை வரலாற்று நாவல்கள் ஆகும்.

1986 ஆம் ஆண்டில்[பிறப்பு: 1910] இவரைப் பக்கவாதம் தாக்கியது.

இதற்கப்புறம், 'சீனமோகினி' நாவலை எழுத நினைத்தார். எழுதும் கை கைகொடுக்கவில்லை. படுத்துக்கொண்டே இவர் சொல்லச் சொல்ல எழுத்தாலர் 'பாமா கோபாலன்' எழுதினார்.

பின்னர் வாயால் கதை சொல்லுவதும் இயலாமல் போனது.

1987ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் காலமானார் சரித்திரக்கதை வேந்தன் சாண்டில்யன்.

முற்றுப்பெறாத சீனமோகினியை, தொடர்ந்து எழுதுமாறு சாண்டில்யன் மகன் சடகோபனிடம் குமுதம் வேண்டியது. நாவல் எழுதிய அனுபவம் இன்மையால் அவர் அப்பணியைத் தொடர மறுத்துவிட்டார்.

குமுதத்தின் விருப்பத்தின்பேரில், எழுத்தாளர் 'விக்கிரமன்' கதையைத் தொடர்ந்தார். சாண்டில்யன் நடைக்கும் விக்கிரமன் நடைக்கும் வேற்றுமை நிறைய இருந்ததால் அம்முயற்சியும் கைவிடப்பட்டது.

ஆக, சாண்டில்யனின் சீனமோகினி முற்றுப்பெறாமலே முடிவுற்றது.

கதை எழுதிட விரும்புவோர்க்கு, சாதனை எழுத்தாளர் சாண்டில்யன் வழங்கிச் சென்ற கொஞ்சம் பரிந்துரைகள் கீழே.....

//தரமான எழுத்துக்கு வேண்டியது முதலில் உணர்ச்சி வேகம். அடுத்தது ஆழ்ந்த படிப்பு.

எழுத முற்படுவோர், 'நான் எழுதத்தான் வேண்டுமா? அதற்கான வேட்கை, அதற்கான உணர்ச்சி வேகம் ஆகியவை இயற்கையாகவே எனக்கு இருக்கிறதா?' என்பன போன்ற கேள்விகளைத் தனக்குதானே கேட்டு, ஆழ்ந்து சிந்தித்து, எழுதுவதா வேண்டாமா என்பது குறித்துத் திடமான ஒரு முடிவை மேற்கொள்ளுதல் வேண்டும்.

எழுதுதற்குரிய தகுதி தனக்கு உண்டா, இல்லையா என்பதைத் தற்சார்பின்றி ஆராயாமல், 'எழுத ஆரம்பித்தால் கற்பனை தானாகவே சுரக்க ஆரம்பிக்கும்' என்று நம்பிக் களத்தில் இறங்குவது எதிர்பார்க்கும் பலனைத் தராது.

கட்டுக்கோப்பான கதைப் பின்னலும், தொய்வில்லாத விறுவிறு நடையும், சிறந்த சொல்லாட்சியும் சிறந்ததொரு கதை உருவாவதற்கான அடிப்படைத் தேவைகள் ஆகும்.

ஒரு நல்ல எழுத்தாளனுக்கு, எதையும் ஊன்றிக் கவனிக்கும் திறனும்,  கற்பனையில் மிதக்கும் இயல்பும் இன்றியமையாத் தேவைகளாகும்

தொய்வில்லாத நடையில் படைக்கப்பட்ட கதைகளை, அவை எத்தனை பெரிதாக இருந்தாலும் வாசகர்கள் கொஞ்சமும் சலிப்பின்றிப் படிப்பார்கள்.

இவை இல்லையேல், கதை எத்தனை சிறிதாயினும் அது வாசகரை ஈர்க்காது//
============================================================
உதவி: முனைவர் பால.ரமணி எழுதிய, 'நூற்றாண்டு கண்ட சாண்டில்யன்'; ஏகம் பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை 600 005.