சனி, 24 மார்ச், 2018

நாம் இப்படி! அவர்கள் அப்படி!! எப்படி அவர்கள் முன்னேறினார்கள்?

அன்று திரைப்படங்கள் மூலம் பகுத்தறிவு பரப்பிய ஒப்பற்ற ஒரு கலைஞர் மறைந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள். அவருடைய சொற்பொழிவுகளைத் திரட்டி, 'கலைவாணர் சொற்பொழிவுகள்' என்னும் தலைப்பில் நூலாக[புத்தகப் பூங்கா, ராயப்பேட்டை, சென்னை] வெளியிட்டிருக்கிறார் வே.குமரவேல் அவர்கள். அவருக்கு நன்றி.

இந்தியாவையும் 'ரஷ்யா'[Russia]வையும் ஒப்பிட்டு, கலைவாணர் வெளியிட்ட கருத்துகளில் சிலவற்றைத் தேர்வு செய்து பதிவாக்கியிருக்கிறேன்.
*''அவனன்றி அணுவும் அசையாது'' என்று சொல்லிச் சொல்லிப் பொழுதை வீணடிப்பவர்கள்  நம் மக்கள்.  ''மனிதனால் எதையும் சாதிக்க முடியும்'' என்று நம்பி, நடைமுறையில் முயற்சி செய்து வெற்றி கண்டவர்கள் ரசியர்கள்.

*நம்மவர் நம்புவது வெட்டி வேதாந்தம். அவர்கள் நாடுவது மனித முயற்சி.

*இங்கே தண்டத்துக்கு ஆறுகாலப் பூஜை. அங்கே ஆக்க வேலைகளுக்கான அணுசக்தி ஆராய்ச்சியும் உற்பத்தியும். 

*இங்கே நாளெல்லாம் வேத மந்திரம் ஓதுதலும் 'ஆழ்வார் நாயன்மார்' துதியும். அங்கே ஆளில்லாமல் ஓடும் விமானங்களின் அதிரவைக்கும் ஓசை.

*இங்கே தினம் தினம் அபிஷேகம் ஆராதனைகள். அங்கே தினம் தினம் விதம் விதமான  தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளும் தயாரிப்புகளும்.

*இங்கே எங்கு பார்த்தாலும் கோயில்கள்; மடங்கள். அங்கே பெரிய பெரிய நூலகங்கள். படிப்பகங்கள்.

*இங்கே ஜோதிடர்கள், வாஸ்துசாஸ்திரர்கள், மோசடிச் சாமியார்கள் காட்டில் மழை. அங்கே இவர்களுக்கெல்லாம் சிறைவாசம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
காலியிடத்தை நிரப்புதற்கு ஒரு ஒ.ப.கதை. வாசிப்பதும் புறக்கணிப்பதும் உங்கள் விருப்பம்!
                                                         
                                                         வாரிசு 
வேலை கேட்டு வந்த சிறுவனிடம், “டேபுள் கிளீன் பண்ணனும். தரையைக் கூட்டணும். சொல்ற வேலையை முகம் சுளிக்காம செய்யணும். என்ன?” என்றார் உணவு விடுதி உரிமையாளர் செல்வம்.

“செய்வேங்க.”

“எந்த ஊரு?”

“ஆவடி பக்கம். அப்பா செத்து ஆறு மாசம் ஆச்சு. அம்மாவும் தங்கச்சியும் கூலி வேலைக்குப் போறாங்க. அம்மாவுக்கு அடிக்கடி உடம்பு சுகமில்லாம போயிடும். அதனாலதான் படிப்பைப் பாதியில் விட்டுட்டு வேலை தேடி வந்தேன்.”

''வயசு என்ன?''

''பதினெட்டுங்க.''

''உண்மையான வயசா?''

''ஆமாங்க.''

“யாரும் அதிகாரிங்க வந்து கேட்டா இதையே சொல்லணும்.”

“சரிங்க.”

“மாடியில் பெரிய ரூம் இருக்கு. மத்த ஆட்களோட தங்கிக்க. மூனு வேளையும் வயிறாரச் சாப்பிடு. சம்பளம் எவ்வளவுன்னு அப்புறம் சொல்லுறேன்.”

“ஐயா வந்து.....” -வார்த்தைகளை மென்று விழுங்கினான் சிறுவன்.

“தயங்காம சொல்லுப்பா.”

“நம்ம கடையில் மதியச் சாப்பாடு எவ்வளவுங்க?”

“எழுபது ரூபா.”

“எனக்கு ரெண்டு வேளை சாப்பிட்டா போதும். என் மதியச் சாப்பாட்டுக்கான பணத்தையும் என் சம்பளத்தோடு சேர்த்து நீங்களே என் அம்மாவுக்கு அனுப்பிடுங்கய்யா.”

''இந்தச் சின்ன வயசில் இத்தனை குடும்பப் பாசமா?'' என்று மனம் நெகிழ்ந்தார் செல்வம். ''அனுப்பிடலாம். கவலைப்படாம மூனு வேளையும் சாப்பிட்டுத் தெம்பா வேலை செய்.” -சிறுவனின் முதுகில் தட்டிக் கொடுத்தார் செல்வம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------