புதன், 21 மார்ச், 2018

'ஆன்மிக அரசியல்வாதி'க்கு ஆண்டவன் அளித்த வரம்!

நடிகர்களுக்கும் அவர்களையொத்த பிரபலங்களுக்கும் அதி முக்கியத்துவம் கொடுத்துச் செய்தி வெளியிட்டுப் பிழைப்பு நடத்தும் தமிழ்த் தொலைக்காட்சிகளில் 'புதிய தலைமுறை'யும் ஒன்று.

இன்று முற்பகல் 09.30 மணியிலிருந்து அரை மணி நேரம்[பின்னர் சற்று இடைவெளி விட்டுத் தொடர்ந்தது], ரஜினியின் வீடியோ பேச்சை[தென்சென்னை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டம்] 'முக்கியச் செய்தி'யாக மீண்டும் மீண்டும் வெளியிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
''ஆண்டவன் ஒரு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறான். அதை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மக்கள் மன்ற உறுப்பினர்கள், பதவி கிடைக்கவில்லையே என்ற பொறாமையுடன் செயல்படக் கூடாது'' என்பதுதான் அந்த முக்கியச் செய்தியின் சாராம்சம். [சொன்னதையே திரும்பத் திரும்ப அவர் சொல்லிக்கொண்டிருப்பதையும், அதை ''முக்கிய செய்தி'யாக தமிழ்த் தொலக்காட்சிகள் காட்சிப்படுத்துவதையும் நினைத்துக் கொதிப்படைய வேண்டாம்].

ரஜினிக்கு மட்டும் இந்த அரிய வாய்ப்பை ஆண்டவன் ஏன் தந்தருளினார் என்று நாம் கேள்வி எழுப்புதல் கூடாது. 

அவர் கடந்த பிறவிகளில் செய்த புண்ணியம் காரணமாக இருக்கலாம். அவரை மிஞ்சிய புண்ணியவான் இந்த மண்ணில் இல்லாமல் இருக்கலாம்.

எது எப்படியோ, 'ஆண்டவன் வாய்ப்பளித்திருக்கிறான்' என்று பேசிய ரஜினி மகா புத்திசாலி என்பது என் எண்ணம்.

எதிர்காலத்தில், நடிகர் ரஜினியின் 'ஆன்மிக அரசியல்', தோல்வியைத் தழுவியது என்றால்.....

''ஆண்டவன் எனக்குக் கொடுத்த வாய்ப்பைப் பறித்துக்கொண்டுவிட்டான். சிஸ்டத்தை மாற்ற நினத்தேன். அவன் தடுத்தாட்கொண்டுவிட்டான்'' என்று சொல்லிச் சமாளித்துவிடலாம்.

எனவே, ரஜினி மகா புத்திசாலி என்று நான் சொன்னதில் தவறேதும் இல்லைதானே?
----------------------------------------------------------------------------------------------------------------------------------
கீழே.....

'பாக்யாவார இதழில் வெளியான என் சிறுகதை! படிக்கலாம்தானே?!

                                               தொண்டு  
லுவலகம் செல்லப் பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன். என்னிடம்  உதவி வேண்டி வந்த நண்பரும் உடனிருந்தார்.

“பஸ் வருது” என்றார் நண்பர்.

“புறப்படப் பத்து நிமிசம் ஆகும். கொஞ்சம் பொறு” என்று சொல்லிவிட்டு, சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்த அந்தப் பள்ளி மாணவனை நெருங்கினேன். நண்பரும் இணைந்துகொண்டார்.

“பத்திரிகையில் உன் ஃபோட்டோ பார்த்த ஞாபகம். எஸ். எஸ். எல். சியில் ஸ்டேட் பஸ்ட் வந்தாய்தானே?” என்றேன் அந்த இளைஞனிடம்.

சற்றே திடுக்கிட்ட அவன், “இல்லீங்களே” என்றான்.

“இப்போ பிளஸ் டூ படிக்கிறியா?”

“பிளஸ் ஒன்னுங்க.”

“ இப்பவே ஐ.ஐ.டிக்குப் பிரிப்பேர் பண்ணலாமே. பண்றியா.”

“இல்லீங்க.”

“டாக்டரா, எஞ்சினீயரா,  கலெக்டரா உன் எதிர்காலக் கனவு என்ன?”

“அது வந்து.....வந்து.....” -வார்த்தைகளை மென்று விழுங்கினான் மாணவன்.

“பார்த்தா ரொம்பப் பிரிலியண்டாத் தெரியரே. பெரிய ஆளா வருவே. நல்லாப் படி...” சொல்லிக்கொண்டிருக்கும்போதே, “ஸ்கூலுக்கு நேரம் ஆச்சுங்க” என்று நழுவினான் அவன்.

பேருந்து புறப்பட்டபோது நண்பர் கேட்டார்: “தெரிஞ்ச பையனா?”

“ஊஹூம்.”

“என்னவெல்லாமோ சொல்லி அவனை உசுப்பேத்தினியே?”

''எல்லாம் அவனுடைய நன்மைக்காகத்தான். தினமும் கையில் புத்தகக் கட்டோட  இந்த நேரத்தில் அவனைப் பார்ப்பேன். நல்லாப் படிக்க வேண்டிய இந்த வயசில் அநியாயத்துக்குப் பொண்ணுகளை சைட் அடிச்சிட்டு நிற்பான். தன்னோட எதிர்காலத்தைப் பத்திக் கொஞ்மாவது யோசிக்க வெச்சா இந்தக் கெட்ட பழக்கத்தை விட்டுடுவான்கிறது என்  நம்பிக்கை. என்னவோ என்னால் முடிஞ் ஒரு நல்ல காரியம்” என்றேன்.

“நல்ல மனசுப்பா உனக்கு.” -என் முதுகைத் தட்டிக் கொடுத்தார் நண்பர்.
=================================================================================