செவ்வாய், 20 மார்ச், 2018

'புலன் புற உணர்வு[Extrasensory perception]' பற்றி எழுத்தாளர் சுஜாதா

மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின், ‘கற்பனைக்கு அப்பால்...’ [விசா பப்ளிகேசன்ஸ், தி.நகர், சென்னை. ஐந்தாம் பதிப்பு. ஏப்ரல்,2004]என்னும் நூலைப் படிக்காதவர்களுக்காக இப்பதிவு. நூலில் இது ஒரு சிறு கட்டுரை.

[எச்சரிக்கை!: உங்கள் மனம் கவரும் மண்வாசனைச் சிறுகதை ஒன்று இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. வாசிக்கத் தவறாதீர்!]
#ஈ.எஸ்.பி. என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். எக்ஸ்ட்ரா சென்ஸரி பர்ஸப்ஷன் - புலன் புற உணர்வு - என்று சொல்லலாம். ராஜீவ் காந்தி இறக்கப் போவதை ஒரு நாள் முன்பே தன் உள்ளுணர்வில் உணர்ந்ததாக ஒரு கோஷ்டியே சொல்லிக்கொண்டு அலைகிறது.

என் நண்பர் ஒருவர் தன் மனைவிக்கு இந்த ‘ஈ.எஸ்.பி’ இருப்பதாக நம்புகிறார். “நான் மனசில் என்ன நினைச்சிட்டிருந்தாலும் சொல்லிடறா சார்! ஃபோன் அடிக்கிறதுக்கு அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடியே எங்கம்மா ஃபோன் பண்ணப் போறான்னு சொல்லுவா. தவறாம வரும். இது ஈ.எஸ்.பி.யா இல்லையா சார்?”

இம்மாதிரி தினசரி வாழ்க்கையில் பலவிதமான அமானுஷ்யமான நிகழ்ச்சிகளைப் பலர் விவரிப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.

இந்த ஈ.எஸ்.பி., நாய், பூனை போன்ற சில ஜந்துக்களுக்கு இருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். என் நண்பர் கிருஷ்ணசாமி,  “நம்ம சீஸர் இருக்கானே, அவன் வந்து இப்ப வீட்டில்தான் இருக்கான். நான் ஆபீஸில் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்த உடனே காது இரண்டையும் தூக்கிண்டு வாசல்ல வந்து நின்னுடுவான் சார்!” என்பார்.

“அப்படியா? தினம் அஞ்சு மணிக்கா?”

“இல்ல. நான் எப்பக் கிளம்புறேனோ அப்ப. சில நாள் ஓவர்டைம் பண்ணிட்டுக் கிளம்புவேன். அப்பக்கூட.”

“நீங்க ஆபீஸில் இருக்கும்போது இது காதைத் தூக்குறதை எப்படிக் கண்டுபிடிச்சீங்க?”

“அகஸ்மாத்தா என் மனைவி கண்டுபிடிச்சா. தினம் சீஸர் காதைத் தூக்கிய நேரத்தை நோட்புக்கில் குறிச்சி வைச்சா.”

இதையெல்லாம் விஞ்ஞான ரீதியா ஏற்க முடியுமா?

ஈ.எஸ்.பி.க்கு நீண்ட சரித்திரம் உள்ளது.

நம் புராணங்களில் உபதேவதைகளுக்குகூட இது இருந்திருக்கிறது. நான்காவது வேதமான அதர்வண வேதத்தில் ஈ.எஸ்.பி. முறைகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். கேரளாவில் மனத்தின் ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஈரப்புடவைகள் எரிவதும் கெட்ட வஸ்துகள் சொரிவதும் சாதாரணமாம்.

இங்கிலாந்து போன்ற தொழில் முன்னேற்ற நாடுகளில்கூட ஈ.எஸ்.பி.யை நம்புகிற பிரமுகர்கள் இருக்கிறார்கள். பரிணாம உயிரியல் தத்துவ ஞானி ஆல்பிரட் ரஸ்ஸல், வாலஸ், வில்லியம் குரூக்ஸ், ராலே பிரபு போன்ற இயற்பியல் நிபுணர்கள், ஆலிவர் லாட்ஜ் போன்ற பெரும் புள்ளிகள் எல்லாம் நம்பியிருக்கிறார்கள்.

ஸைக்சிக் ரிஸர்ச் என்ற துறையும், அதற்கான ‘விஞ்ஞான ரீதியான’ கட்டுரைகள் கொண்ட பத்திரிகைகளும் உள்ளன. இன்றும் அவை பிரசித்தம். அமெரிக்கன் சொஸைட்டி ஃபார் ஸைக்சிக் ரிஸர்ச், பாராசைக்கலாஜிகல் ஃபவுண்டேஷன் போன்ற நிறுவனங்கள் இன்றும் சிறப்பாக உள்ளன.

ஈ.எஸ்.பி. என்பதை, பாரா நார்மல்,  ‘அசாதாரண விஞ்ஞானம்’ என்கிறார்கள். சாதாரண இயற்பியல், வேதியியல், உயிரியல் விதிகளுக்கு அப்பாற்பட்ட அறிவியல் இது என்கிறார்கள். நிசமா?

எல்லாம் ரீல்!

இந்நாள்வரை - இதை நான் எழுதும் தேதிவரை அறிவியல் முறைகளின்படி நிரூபிக்கப் படவில்லை. அறிவியல் ஒரு பொதுச் சொத்து. அதன் பரிசோதனை முறை விரும்புவதெல்லாம் இது ஒன்றே..... “யார் சொல்வதையும் உடனே நம்பாதே. நீயே பரிசோதித்துப் பார்.”

கிருஷ்ணசாமியின் நாய் காதைத் தூக்குகிறது என்றால் உன் நாயும் காதைத் தூக்கியே ஆகவேண்டும். அப்போதுதான் அதை நம்பலாம். ஒரே ஜாதி நாய், ஒரே ஊர், ஒரே சீதோஷ்ணம், ஒரே...எல்லாம் என்ற அந்தப் பரிசோதனையின் களனை, சூழ்நிலையை மறுபடியும் ஏற்படுத்துவதில் தயக்கமில்லை. ஆனால், அந்தப் பரிசோதனை ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு மட்டுமன்றி, எல்லாருக்கும் நிகழ வேண்டும்.

‘மறுமுறைத் தன்மை’[Reproducibility] என்பது அறிவியலுக்கு மிக முக்கியம். உனக்கென்று ஒரு விதி; எனக்கென்று ஒரு விதி என்று ஏதேனும் தென்பட்டால், அந்த விதியைச் சோதித்துப் பார்த்த சூழ்நிலை தவறானதாகும்.

இப்படிப் பார்த்தால் விஞ்ஞானப்படி கிருஷ்ணசாமி தன் நாய் காதைத் தூக்குகிறது என்று நம்ப விரும்புகிறார்; அதற்கேற்ப புள்ளிவிவரம் தயாரித்து உங்களையும் நம்ப வைக்க முயற்சி செய்கிறார்.

1970 களில் ‘யூரி கெல்லர்’[Uri Geiler] என்பவர் சைக்கோ கினஸிஸ் என்கிற முறைப்படி ஒரு ஸ்பூனை முறைத்துப் பார்த்தே அதை வளைப்பதையும், ஒரு கடிகாரத்தை வெறித்துப் பார்த்தே நிறுத்துவதையும் செய்து காட்டினார்; டான்போர்டு ஆராய்ச்சிக் கழகத்தின் அறிவியல் நிபுணர்களுக்கு சவால் வைத்தார்.

அந்தப் பரிசோதனைகளின்போது, சில மாஜிக் நிபுணர்களை ஒளிந்திருந்து பார்க்க ஏற்பாடு செய்தார்கள். ஸ்பூன் வளைந்தது. கடிகாரம் நின்றது. ஆனால், மாஜிக் நிபுணர்கள், இது மனச் சக்தியுமில்லை; ஒரு புடலங்காயும் இல்லை. சாதாரண ‘மாஜிக்’ முறை என்று நிரூபித்து விட்டார்கள்.

இருந்தும், இன்றும் கெல்லரின் சக்தியை நம்புபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சாய்பாபாவை நம்பும் விஞ்ஞானிகள் இருப்பது போல.

ரோமானியர் காலத்திலிருந்து ஒரு சொலவடை உண்டு. மக்கள் ஏமாற விரும்புகிறார்கள்.

ஏமாறட்டும்!#
=================================================================================

கீழ்வரும், 'ஓம்சக்தி' மாத இதழில்[பிப்ரவரி, 2018] வெளியான என் 'மண்வாசனை''ச் சிறுகதையைத் தனிப் பதிவாக வெளியிட்டிருக்கிறேன். வாசகர் வட்டம் கண்டுகொள்ளவில்லை.

இனியேனும் வாசித்து மகிழட்டும் என்று இங்கே இணைத்திருக்கிறேன்.


வாழ்க வலைப்பக்க வாசகர்கள்!



                         பட்டிக்காட்டார் [சிறுகதை] 

சக்காளிபாளையம் கிராமத்தின் வடக்கு எல்லையில் கிழக்குப் பார்த்த காரை வீடு அது; பனை ஓலை வேய்ந்தது; பல தலைமுறை கண்டது. செம்மண் குழைத்து எழுப்பப்பட்டிருந்த சுற்றுச் சுவரில் முக்கால்வாசி சிதைவுற்றுச் சரிந்து கிடந்தது.

வீட்டின் வலப்புறம் இருந்த வாதநாராயண மரத்தடியில் கன்று ஈன்ற பசு மாடு ஒன்று அசைபோட்டுப் படுத்திருக்க, இடப்பக்கம் இருந்த வேம்பின் நிழலில் வெறும் கயிற்றுக் கட்டிலில் அசைவின்றி மல்லாந்து கிடந்தார் சென்னியப்பன்.

தாட்டிகமான கறுத்த தேகம். நரைத்துச் சோர்ந்த தலைமுடி. தேகக்கட்டு குலைந்ததால் தொங்கும் சதைக் கோளங்களும் வறண்டு உலர்ந்த சருமமும் அவர் எழுபதைத் தாண்டியவர் என்பதற்குச் சாட்சியம் அளித்தன.

ஒரு முழுநாள் பட்டினி. இரவெல்லாம் கண் விழித்திருந்த சோர்வு. தீராத மன உளைச்சல். இவற்றின் ஒருங்கிணைந்த தாக்கம் காரணமாக அன்றாடக் கடமைகளை மறந்து உயிரற்ற சவம் போல நீட்டிப் படுத்திருந்தார் சென்னியப்பன். மூடியிருந்த இமைகளுக்குள் தெரிந்த கருமணிகளின் பிறழ்வும், அவ்வப்போது இழுத்து விடப்பட்ட பெருமூச்சு காரணமாக எழுந்து தாழ்ந்த நெஞ்சுக்கூடும் அவர் உறங்கவில்லை என்பதை நிதர்சனப்படுத்தின.

“ஐயா, நேத்துப் பூரா எதுவும் சாப்பிடல. இப்பவும் பொழுது சாஞ்சிடிச்சி. ஒரு டீத்தண்ணிகூடக் குடிக்கல. உங்க நோவு கண்ட ஒடம்பு தாங்குமா?” -கட்டிலை ஒட்டிக் கட்டாந்தரையில் உட்கார்ந்திருந்த மாரியம்மா கேட்டாள்.

சென்னியப்பனிடமிருந்து பதில் இல்லை. அதிகபட்சக் கோபத்திலோ மிகையான வருத்தத்திலோ இருக்கும்போது கேட்ட கேள்விக்கு அவரிடமிருந்து சற்றுத் தாமதமாகத்தான் பதில் வரும் என்பது மாரியம்மாவுக்குத் தெரிந்திருந்ததால் அவர் பதிலுக்காகக் காத்திருந்தாள்.

ஒரு நிமிடம் போல மௌனத்தில் கரைத்துவிட்டு வாய் திறந்தார் சென்னியப்பன். “நான் என்ன வீம்புக்கா சாப்பிடாம இருக்கேன். பசி எடுக்கல புள்ள. அவன் பேசின பேச்செல்லாம் நீ கேட்டுட்டுத்தானே இருந்தே. நீயெல்லாம் ஒரு அப்பனான்னு கேட்டானே, என் உசுரு போறவரைக்கும் அது மறக்குமா? நான் செத்தப்புறம் என் சேமிப்புப் பணமெல்லாம் உங்களுக்குத் தானேன்னு நான் சொன்னதுக்கு, நீ எப்பச் சாகுறது, நாங்க எப்பப் பணத்தைக் கண்ணால பார்க்குறதுன்னு கேட்டானே அதுக்கு என்ன அர்த்தம்? சீக்கிரம் செத்துத் தொலையடா கிழவாங்கிறதுதானே? இப்படியே பட்டினி கிடந்து செத்துடலாம்னு தோணுது.” -நனைந்த துணிப் பந்தாய்த் துக்கம் தொண்டையை அடைக்க, பார்வையை உயர்த்தி மரக் கிளைகளை வெறித்துப் பார்த்தார் சென்னியப்பன். 

அப்போதைய மன நிலையில், தன் முகம் பார்த்துப் பேசினால் அவர் பொங்கி அழுதுவிடுவார் என்பது மாரியம்மாவுக்குத் தெரிந்தே இருந்தது.

“காலம் மாறிப்போச்சி ஐயா. இந்தக் காலத்துப் புள்ளைகளுக்குப் பெத்தவங்களை மதிக்கத் தெரியல. பணம் காசுக்காக அடிச்சி ஒதைக்குறாங்க. கொலைகூடப் பண்ணிடறாங்க. நம்ம புள்ளைக எவ்வளவோ தேவலாம். மனசைத் தேத்திக்கோங்க” என்றாள்.

“அடிச்சி ஒதைச்சிக் கொன்னு போட்டுட்டாக்கூடப் பரவாயில்லை. ஒரேயடியாப் போய்ச் சேர்ந்துடலாம். வார்த்தையால வதைக்கிறாங்களே, அதைத் தாங்கிக்க முடியல புள்ள. போன வாரம் வந்துட்டுப் போன பெரியவனும் நேத்து வந்த சின்னவன் சொன்னதையேதான் சொன்னான். அதோட நிக்கல. காலம் போன கடைசியில் உனக்குக் காசுப்பித்து தலைக்கேறிடிச்சி. என்கிட்ட இருக்கிற பணம் என் சொந்தச் சம்பாத்தியம்னு சொல்லிட்டுத் திரியறே. நீ சம்பாதிச்ச பணத்தை நாளைக்குப் பாடையில் போறப்ப ஒரு கோணிச்சாக்கில் கட்டிக் கையோட எடுத்துட்டுப் போயிடுன்னு நக்கல் பண்ணினானே. என் மனசு என்ன பாடு படுது தெரியுமா? உனக்கு நல்ல சாவு வராது. செத்தா நரகத்துக்குத்தான் போவேன்னு சாபம் வேற கொடுத்தான். அப்பனுக்கு மவன் சாபம் குடுத்தா அது பலிக்குமா மாரியம்மா?” -கேட்டுவிட்டு, ஒரு குழந்தை போலத் தேம்பி அழுதார் சென்னியப்பன்.

துடித்துப்போன மாரியம்மா, எழுந்து நின்று முந்தானையால் அவர் கன்னங்களில் வடிந்த கண்ணீரைத் துடைத்தாள். அவரது இரு கரங்களையும் பற்றி எடுத்துத் தன் கரங்களுடன் பிணைத்துக்கொண்டு சொன்னாள்: “நீங்க ஏற்கனவே இருதய நோயாளி. பக்கவாதம் வந்திருக்கு. இப்படியெல்லாம் மனசு உடைஞ்சி அழுதா உங்க உயிருக்கே ஆபத்தா முடியும். தைரியமா இருங்க. உங்க நல்ல மனசுக்கு எப்பவும் நல்லதே நடக்கும். எல்லார்த்தையும் நாம கும்புடுற சாமி பார்த்துக்கும். மோர் குடிங்க. கொஞ்ச நேரத்தில் களிக் கிளறி கடுப்பான் அரைச்சுடுறேன்” என்று சொல்லி ஒரு பித்தளைத் தம்ளர் நிறைய மோர் கொண்டுவந்து கொடுத்தாள்.

மாரியம்மாவின் குடும்பம், விவசாயத் தொழில் செய்து வயிறு வளர்த்த பரம்பரையைச் சார்ந்தது.

பத்தாவது ஃபெயில் ஆனதும் அம்மாக்காரியுடன் தோட்ட வேலைகளுக்குச் சென்றாள் அவள். கல்யாணம் ஆன பிறகும் அது நீடித்தது.
ஒரு வேன் பயணத்தின்போது ஏற்பட்ட விபத்தில் கட்டிய புருஷனை இழந்தாள் மாரியம்மா. அவளுடைய ஒரு கால் ஊனமானது. மற்றவர்களுக்கு ஈடு கொடுத்து வேலை செய்ய முடியாததால் பண்ணையாளர்களால் அவள் புறக்கணிக்கப்பட்டாள். பிழைப்புக்கு வேறு வழியில்லாமல் அவள் தவித்தபோது, “தோட்ட வேலையோ வீட்டு வேலையோ சொல்லுறதைச் செஞ்சிட்டுப்போ. மாசச் சம்பளம் தர்றேன். தினமும் வந்துடு” என்று ஆதரவுக்கரம் நீட்டினார் சென்னியப்பன்.

அவர் மனைவி இறந்த பிறகு அவர் வீட்டு முழு நேர வேலைக்காரி ஆனாள் மாரியம்மா.

இரண்டு மகன்கள், ஒரு மகள் என்று மூன்று வாரிசுகளையும் படிக்க வைத்து ஆளாக்கி, அவர்களைக் குடும்பம் குடித்தனம் என்று ஆக்கியதில் ஏற்பட்ட கடனை அடைக்க, ஊரை ஒட்டியிருந்த ஒரு கூரை வீடு தவிர எஞ்சிய நிலங்களையும் கால்நடைகளையும் விற்றார் சென்னியப்பன். எஞ்சிய ஆறுலட்சம் ரூபாயைத் தன் பெயருக்கு வங்கியில் போட்டு வைத்தார். சுத்தமான பாலுக்காக ஒரு பசு மாட்டைத் தன் பொறுப்பில் பராமரித்து வந்தார்.
அன்று வழக்கம்போல, பசுவைப் புறம்போக்கு மேய்ச்சல் நிலங்களில் மேய்த்துவிட்டு வீடு திரும்பியபோது, அவரின் மகள் சாந்தி மாரியம்மாவுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டார்.

“வாம்மா, ஊரில் எல்லாரும் நல்லா இருக்காங்களா?” என்றார்.

“நாங்க எல்லாம் நல்லாவே இருக்கோம். நீங்கதான் ரொம்ப மன வருத்தத்தில் இருக்கீங்க போல” என்றாள் சாந்தி.

பதில் பேசாமல், மாட்டுக்குத் ‘தாழித் தண்ணி’ காட்டி, மரத்தில் கட்டிவிட்டு வந்தார் சென்னியப்பன்.

“தம்பிமாருங்க வந்தாங்களா?” என்றாள் சாந்தி.

"வந்தாங்க.”

இந்தக் கூரை வீட்டையும் வித்துட்டு அவங்களோட இருந்துடச் சொன்னாங்களாமே?”

“நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்,”

“ஏம்ப்பா?”

“எழுபது வருஷத்தை இங்கே கழிச்சுட்டேன். இன்னும் கொஞ்ச காலம்... ஓட்டமா ஓடிடும். என் அப்பாவையும் தாத்தாவையும் குளிப்பாட்டின இந்த மண்ணு வாசல்லியே என்னையும் குளிப்பாட்டணும். அவங்கள எரிச்ச சுடுகாட்டிலேயே என்னையும் சுட்டுச் சாம்பலாக்கணும். இதெல்லாம் என் அந்திமக்கால ஆசை. அதோட, பட்டணத்துப் பொழப்பு எனக்குச் சரிப்பட்டு வராது. தினமும் ரெண்டு வேளை சாப்பிடுறேன். மத்தியானம் கம்மஞ்சோறோ ராகிக் களியோ சாப்பிடுறேன். இந்தக் கம்மஞ்சோத்தையையும் களியையும் என் ரெண்டு மருமகளும் கண்ணில் பார்த்திருக்கவே மாட்டாங்க........”

சிக்கனமாய்க் கொஞ்சம் சிரித்துவிட்டுத் தொடர்ந்தார். “வெய்யக் காலத்துல, கட்டுன கோமணத்துணியோட வேப்ப மரத்தடியில் கட்டில் போட்டுப் படுத்திருப்பேன். ஒரு பக்கம் குளுகுளுன்னு வீசுற காத்து. இன்னொரு பக்கம் கமகமன்னு மாட்டுச் சாணத்தோட வாசம். இதெல்லாம் பட்டணத்துக்குப் போனா கிடைக்காதும்மா. சாகறமுட்டும் இந்தப் பட்டிக்காட்டை விட்டு நகர மாட்டேன்னு அவனுங்ககிட்டே அடிச்சிச் சொல்லிட்டேன்.”

“உங்க பேங்க் பணத்தைக் கேட்டாங்களாம். தரமாட்டேன்னு சொல்லிட்டீங்களாம். அது தப்பில்ல. ஏன்னா, அதில் மூனுல ஒரு பங்கு எனக்குச் சேர வேண்டியது.”

மௌனம் பாவித்தார் சென்னியப்பன்.

“அப்பா, நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும். செய்வீங்களா?”

“சொல்லு. சொன்னாத்தானே முடியுமா இல்லையான்னு சொல்ல முடியும்.”

“உங்களால முடியும்ப்பா. நாங்க  ஒரு வீட்டு மனையை விலை பேசி முடிச்சுட்டோம். அடுத்த மாசம் கிரையம். கொஞ்சம் பணம் பத்தல. அஞ்சு லட்சமோ ஆறு லட்சமோ உங்க பணம் பேங்குல இருக்கில்லையா? அதை இப்போ கடனாக் குடுங்க. வட்டி போட்டு அடுத்த வருஷமே திருப்பித் தந்துடறேன்” என்றாள் சாந்தி.

“வூட்டுச் செலவு, மருந்து மாத்திரைச் செலவு, மாரியம்மாவுக்குச் சம்பளம்...இப்படியான செலவையெல்லாம் மாசாமாசம் வர்ற வட்டியை வாங்கித்தான் சமாளிக்கிறேன். ஏற்கனவே வந்த பக்கவாதம் மறுபடியும் வரலாம். அது வந்தா ரொம்பவே செலவாகும். இருக்கிற பணத்தைக் கொடுத்துட்டு யார்கிட்டே கையேந்தி நிப்பேன்? பணத்துக்கு வேற ஏற்பாடு பண்ணும்மா” என்றார் சென்னியப்பன்.

சிறிது நேரம் அப்பனையே வைத்த கண் வாங்காமல் பார்த்த சாந்தி, “பெத்த புள்ளைங்க மேல உங்களுக்குப் பாசம் இல்ல. பணம் இன்னிக்கி வரும்; நாளைக்குப் போகும். நீங்க செத்தப்புறம் உங்க பணம் உங்களைச் சுடுகாட்டுக்குத் தூக்கிட்டுப் போகாது. உங்க புள்ளைகதான் பாடை சுமக்கணும். ஞாபகம் வெச்சுக்குங்க.” -சொல்லிவிட்டு, விடுவிடென கேட்டைத் தள்ளிக்கொண்டு வெளியேறினாள் சாந்தி.

"மாமா, எழவுக்கு வர்றியா?” 

பொளியில் எருதுகளை மேயவிட்டு, மம்மட்டியால் வாய்க்காலைச் சுத்தம் செய்துகொண்டிருந்த தங்கமுத்து குரல் வந்த திக்கில் பார்வையை ஓட்டினார்.

பத்தடி தள்ளி, ஒத்தையடிப் பாதையில் பாழிக்காட்டு வேலுச்சாமி நின்றுகொண்டிருந்தான்.

“எழவா? யாருடா மாப்ள?” என்றார் தங்கமுத்து.

“சென்னியப்பன்.”

“பெரிய பண்ணாடி சென்னியப்பனா? நல்லாத்தானே இருந்தாரு. முந்தா நாளு டவுனுல பார்த்தனே.”

“நெறயத் தூக்க மாத்திரை முழுங்கியிருக்காரு. மிச்சம் மீதி தரையில் சிதறிக் கிடந்துச்சாம்.”

“ஏன் இப்படிப் பண்ணினாரு. ரொம்பத் தெகிரியசாலியாச்சே.” 

“போற நேரம் வந்தா தெகிறியமும் போயிடும். நாலு நாள் முந்தி, மவளும் மவனுகளும் வந்து பேங்க் பணத்தைக் குடுக்கச் சொல்லி தகராறு பண்ணியிருக்காங்க. மூத்தவன் செல்வராசு கைநீட்டி அடிச்சிட்டதாப் பேசிக்கிறாங்க.”

“இவங்க மூனு பேரும்தானே வாரிசு. இவரு பணம் எங்கே போயிடப் போகுது?”

“அதுவல்ல விசயம். சென்னியப்பன் சம்சாரம் பவளாயி செத்ததுக்கப்புறம், மாரியம்மாதான் வீட்டு வேலையெல்லாம் செய்துட்டிருந்தா. இவரு பக்கவாதம் வந்து கட்டில்கிடையா கிடந்தப்போ அவதான் பெத்த தாய் மாதிரி, மலம் மூத்திரமெல்லாம் சுத்தம் பண்ணிக் குளிச்சிவிட்டு, நேரம் தவறாம மருந்து மாத்திரை குடுத்துக் கைத்தாங்கலா நடைப் பயிற்சியும் தந்து குணப்படுத்தினா. சென்னியப்பன் தன் பேர்ல இருக்கிற பேங்க் பணத்துக்கு அவளை வாரிசாக்கிடுவாரோன்னு இந்த மூனு அல்பங்களுக்கும் சந்தேகம் வந்திருக்கு. அவளை அப்பன்கிட்ட இருந்து பிரிக்கத் திட்டம் போட்டாங்க. சென்னியப்பன் கண் முன்னாலயே, ‘எங்கப்பனக் கைக்குள்ள போட்டுகிட்டுப் பணத்தையெல்லாம் நீ சுருட்டப் பார்க்கிறியான்னு மாரியம்மாவைக் கேட்டாங்களாம்.

பாவம் மாரியம்மா. ரொம்பவே மனசு ஒடைஞ்சி போனா. சென்னியப்பன் காலில் விழுந்து கும்புட்டு, ‘மவராசரே, நீங்க நல்லா இருப்பீங்க. நம்ம ஊர் மாரியாத்தா உங்களக் கைவிட மாட்டா’ன்னு  சொல்லிட்டுப் போய்ட்டாளாம்.

இந்த மூனு பேரும், அடுத்த வாரம் வர்றோம்னு அப்பனை எச்சரிக்கை பண்ணிட்டுப் போயிருக்காங்க. அடுத்த நாளே, டவுனுக்குப் போயி, தூக்க மாத்திரை வாங்கியாந்து முழுங்கிட்டுப் படுத்துட்டாரு சென்னியப்பன்.” -சொல்லி முடித்த வேலுச்சாமி, “நேரமாச்சி. வா போகலாம்” என்று முன்னே நடந்தான்.

“அந்த நல்ல மனுசனைக் கடைசியா ஒரு தடவை பார்க்கத்தான் வர்றேன். அந்த நாயிங்ககிட்டெ நான் கை நீட்டித் துக்கம் விசாரிக்க மாட்டேன்” என்று சொல்லி அவன் பின்னால் நடந்தார் தங்கமுத்து.
=============================================================================