மனிதன் எதைக் கண்டெல்லாம் அஞ்சுகிறானோ அதையெல்லாம் கடவுளாக்கி வழிபடுவது அவனின் இயல்பாக இருந்தது; இருக்கிறது.
வாயு பகவான், வருண பகவான், அக்கினி தேவன், நாக தேவன் என்னும் இவை சில உதாரணங்கள். இன்றெல்லாம், மன்மதன் என்று மக்களால் அறியப்பட்ட காமன் என்பவனும் இவ்வகைக் கடவுளரில் ஒருவன் ஆவான்.
உயிர்களை, இனப்பெருக்கம் செய்யத் தூண்டும் கடவுள் என்று இவனின் புகழ் பாடுகிறது ரிக்வேதம். பிராமணர்கள் இவனைப் 'பிராமணக் கடவுள்' என்றும் 'பிரம்மனின் மகன்' என்றும், 'விஷ்ணு பகவானின் அடி மனதில் அவதரித்தவன்' என்றும் சொல்லிப் பெருமிதப்படுகிறார்களாம்.
முழுமுதல் கடவுளான சிவபெருமான் மீதே காம உணர்ச்சியைத் தூண்டும் மலரம்புகளை வீசிய கில்லாடி இந்த மன்மதன் என்னும் காமன்[தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, சிவனின் யோகத்தைக் கலைத்துப் பார்வதியை முயங்கவைத்து, முருகனை ஈன்றெடுப்பதற்காக அம்பெய்தான் என்பது கதை]. அதன் காரணமாக அக்கடவுளால் எரிக்கப்பட்டாலும், ரதியின் வேண்டுகோளுக்கிணங்க, ரதியைத் தவிர வேறு எவர் கண்ணுக்கும் புலப்படாத உருவிலியாக வாழ அனுமதிக்கப்பட்டவன்.
படைப்புக் கடவுளான பிரம்மனால் முதன்முதலில் படைக்கப்பட்ட பெண் கலைமகள். ஒரு சமயம்,, பிரமன் மீதே அம்பு போட்டு, அவரை மான் வடிவில் நடமாடிய கலைமகளுடன் புணர்ச்சி செய்யத் தூண்டியவன் இந்தப் பொல்லாத காமன்தான்[தேவர்கள் வத்தி வைக்க, சிவன் பிரமனைச் சபித்ததும், கலைமகளின் வேண்டுதலுக்கு இணங்கப் பின்னர் உயிர்ப்பித்ததும் தனிக்கதை].
மிகு காமத்தில் அமிழச் செய்பவன், பூங்கொத்துடன் காட்சி தருபவன், மலர்க்கணைகளை ஏந்தியவன், ஆன்மாவிலிருந்து பிறந்தவன், மகிழ்ச்சி வடிவினன், மயக்குபவன், அழகன், ஒளிந்திருந்து வேட்டையாடுபவன் என்றிப்படி இன்னும் எப்படியெல்லாமோ இலக்கியங்களில் வர்ணிக்கப்படுபவன் இவன்.
கிரேக்க நாட்டவரால் 'ஈராஸ்' என்றும் அழைக்கப்படுபவனும், இலத்தீனில், 'கூபிட்' என்று குறிப்பிடப்படுபவனும் இவனே.
அழகுப் பெண்கள் படை வீரர்களாக அணிவகுக்க, தென்றல் என்னும் தேர் ஏறி, மீன் கொடி ஏந்தி, கரும்பு வில் வளைத்து, மலரம்புகளை எய்து காம இச்சையைத் தூண்டுவதே இந்தக் காமக்கடவுளின் தொழில்[இளசுகளுக்கு ஒன்றிரண்டு, கிழடுகளுக்கு நான்கைந்து என்று அவரவர் அகவக்கேற்ப அம்பின் எண்ணிக்கை மாறுபடும்] ஆகும்.
மதுராந்தகத்தில் இன்றும்கூட இந்தக் காமக்கடவுளுக்கு விழா எடுக்கப்படுகிறதாம். ஆசைப்பட்டதுபோல் கணவன் வாய்ப்பதற்காகவும், கொண்ட கணவன் என்றும் பிரியாமல் இருப்பதற்காகவும் பெண்கள் இவனை வழிபடுவது வழக்கமாம்.
இளவேனில் காலத்தில் தமிழகத்தில் மட்டுமல்லாமல், பிற மாநிலங்களிலும் காமன் விழா நடைபெறுகிறது. வட மாநிலங்களில் கொண்டாடப்படும் 'ஹோலி'ப் பண்டிகை இதனுடன் தொடர்புடையது என்கிறார்கள்.
அருவுருவான காமனிடம் வரம் கேட்டு, சங்ககாலப் பெண்கள் 'காமவேள் கோட்டம்' சென்று வணங்கி நோன்பு மேற்கொண்டதாகச் சங்க நூல்கள் இயம்புகின்றன.
சீவகசிந்தாமணி, பெருங்கதை போன்ற இலக்கியங்களும் காமவேள் குறித்துப் பேசுகின்றன.
இவன் வெறும் காமக்கூத்து நிகழ்த்துகிற கடவுள் மட்டுமல்ல, இவனைத் திருமாலுடன் இணைத்து வணங்கினால் வீடுபேறு கிட்டும் என்ற நம்பிக்கையும் இங்கு நிலவுவதாகச் சொல்கிறார்கள்.
சைன மதத்தினர்கூட, இவனை நினைந்து நோன்பு மேற்கொண்ட செய்தியும் வரலாற்றுக் குறிப்புகளில் இடம்பெற்றுள்ளது.
இந்தக் காமக்கிழத்தனை[கிழத்தன் - தலைவன்]த் தீய கடவுள் என்று வெறுத்து வழிபட மறுத்தவர்கள் புத்தமதத்தினர் மட்டுமே.
உலகம் போற்றும் காமன் என்னும் மன்மதக் கடவுளை நாமும் போற்றுவோம்.
வாழ்க மன்மதன்!
=================================================================================
உதவி: 'தமிழில் காமன் பாடல்கள்', முனைவர் பொன்.சண்முகம், அருள் பதிப்பகம், சென்னை - 78. [முனைவருக்கு நன்றி].
காமக்கடவுளிடம் நல்ல கணவன் வேண்டுமென்று நேர்த்திக்கடன் வைத்தால் நிறைவேறுவது உண்மை என்றால் ?
பதிலளிநீக்குதமிழ் நாட்டில் புதுமாப்பிள்ளை எவனும் குடிகாரனாக இருக்க மாட்டானே நண்பரே.
பதிவின் இறுதியில் காமக்கடவுளை வாழ்த்தியிருக்கிறேனே, இனியாவது கண் திறப்பாரா பார்ப்போம்.
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி.
கடவுளுக்கு வாழ்த்தா
பதிலளிநீக்குவியப்புதான் ஐயா
கற்பிக்கப்பட்ட கடவுள்தானே என்பதால் வாழ்த்தினேன்.
பதிலளிநீக்குநன்றி ஜெயக்குமார்.